Advertisement

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்ளோ தெரியுமா? பெட்ரோல் அடிக்கற காசுக்கு ட்யூ கட்டீரலாம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்ளோ தெரியுமா? பெட்ரோல் அடிக்கற காசுக்கு ட்யூ கட்டீரலாம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்ளோ தெரியுமா

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்வளவு? என்பது உள்பட பல்வேறு தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேற்று (ஆகஸ்ட் 15) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) என மொத்தம் 2 வேரியண்ட்களில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 499 ரூபாய் செலுத்தி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்து விட்டனர்.

இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி எஸ்1 வேரியண்ட்டின் விலை 99,999 ரூபாய் ஆகவும், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை 1,29,999 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மாத தவணை முறையிலும் வாங்க முடியும். இதற்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு வங்கிகள் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இஎம்ஐ ஆப்ஷன் ஒரு மாதத்திற்கு 2,999 ரூபாயில் இருந்து தொடங்குவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. சமீப காலமாக பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை அறிவித்து வருகின்றன.

இதுதவிர ஒன்றிய அரசும் தன் பங்கிற்கு ஃபேம் இந்தியா-2 (FAME INDIA-II) திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளன.

மானியம் கிடைப்பதால், ஒரு சில மாநிலங்களில் மட்டும், அறிவிக்கப்பட்டதை விட குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இருப்பதிலேயே குஜராத் மாநிலத்தில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதற்கு குஜராத் எலெக்ட்ரிக் வாகன கொள்கை மற்றும் ஃபேம் இந்தியா-2 திட்டங்களின் கீழ், மானியங்கள் கிடைப்பதுதான் காரணம்.

இதன்படி குஜராத் மாநிலத்தில் எஸ்1 வேரியண்ட் வெறும் 79,999 ரூபாயிலேயே கிடைக்கும். அதே சமயம் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டை அங்கு 1,09,999 ரூபாயிலேயே வாங்க முடியும். அதேபோல் டெல்லியும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் மானியங்களை வழங்கி வருகிறது. டெல்லியின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை மிக விரிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் எஸ்1 வேரியண்ட் 85,099 ரூபாய்க்கும், எஸ்1 ப்ரோ வேரியண்ட் 1,10,149 ரூபாய்க்கும் கிடைக்கும். அதே சமயம் ராஜஸ்தான் மாநிலத்தில் எஸ்1 வேரியண்ட்டை 89,968 ரூபாய்க்கும், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டை 1,19,138 ரூபாய்க்கும் வாங்க முடியும். அதே நேரத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் எஸ்1 வேரியண்ட்டை 94,999 ரூபாய்க்கு வாங்க முடியும். அங்கு எஸ்1 ப்ரோ வேரியண்ட்டை 1,24,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

இந்த 4 மாநிலங்கள் தவிர, தமிழ்நாடு உள்பட எஞ்சிய அனைத்து மாநிலங்களிலும் எஸ்1 வேரியண்ட் 99,999 ரூபாய் என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ வேரியண்ட் 1,29,999 ரூபாய் என்ற விலையிலும்தான் கிடைக்கும். இந்த மாநிலங்களில் மானியம் கிடைக்காததுதான் இந்த அதிகப்படியான விலைக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைக்கப்பட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது.

குஜராத் போன்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்பட அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களும் குறைவான விலையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என நாம் நம்பலாம்.

இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். எனவே அவர்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது திரும்பி வருகிறது. இதன் காரணமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.