Advertisement

நேரமில்லாத பெண்களுக்கு சமையலறையில் அவசரத்திற்கு தேவையான 5 அட்டகாசமான குறிப்புகள் உங்களுக்காக இதோ!

நேரமில்லாத பெண்களுக்கு சமையலறையில் அவசரத்திற்கு தேவையான 5 அட்டகாசமான குறிப்புகள் உங்களுக்காக இதோ!

பெண்களுக்கு சமையலறையில் அவசரத்திற்கு தேவையான 5 அட்டகாசமான குறிப்புகள்

இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அவர்களுடைய அன்றாட வீட்டு வேலையில் மிகவும் அவசர அவசரமாக தான் சமையலை செய்கிறார்கள். அப்படி செய்யும் சமையல் அறையில் அவர்களுடைய வேலையை சுலபமாக்க கூடிய 5 அட்டகாசமான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்த குறிப்புகள் நிச்சயம் பெண்களுக்கு உதவியாக இருக்கும். அவை என்னென்ன? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

குறிப்பு 1:

சில சமயங்களில் அவசரத்தில் புளியை ஊற வைக்க நீங்கள் மறந்து விட்டீர்கள் என்றால் உடனே பதட்டப்பட வேண்டாம். பச்சை புளியைக் கரைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை நீங்கள் ஊற்றினால் கூட அவ்வளவு எளிதாக கரைத்து விட முடியாது. அப்படி அவசரமாக கரைத்தால் அதில் கசப்பு இறங்கிவிடும். இதற்கு நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீருடன், கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கழித்து கரைத்து பாருங்கள், ரொம்பவே சுலபமாக கசப்பில்லாமல் புளியை கரைத்து விடலாம்.


குறிப்பு 2:

மொத்தமாக பூண்டு வாங்கி வைப்பவர்கள் அதை அப்படியே வைத்திருந்தால் சுலபமாக பூஞ்சை பிடித்து விடும். விரைவில் அழுகி கெட்டு போய்விடும். இதனால் இதனுடைய மேல்தோலை கொஞ்சமாக நீக்கி ஒவ்வொரு பூண்டு பல்லாக தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாலைந்து பற்களாக இருந்தாலும் பரவாயில்லை குறிப்பாக பூண்டின் உடைய அந்த தலை மற்றும் காம்பு பகுதியை மட்டும் நீக்கி விடுங்கள். பின்னர் இதனை ஈரமில்லாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொஞ்சமாக உப்பைத் தூவி விட்டு பின்னர் அதன் மீது போட்டு திறந்தபடி வையுங்கள். இப்படி வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும், மாதக்கணக்கில் கூட அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். நீங்கள் அவசரத்திற்கு எடுத்து பயன்படுத்தவும் சுலபமாக இருக்கும்.


குறிப்பு 3:

அவசரத்திற்கு நீங்கள் தேங்காய் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். நீங்கள் முதலில் தேங்காய் வாங்கி வந்தவுடன் இரண்டாக உடைத்து 30 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் பிறகு வெளியில் எடுத்து நீளநீளமாக கீறிப் பத்தைகள் போட்டால் சமைப்பதற்கும், ஸ்டோர் செய்து வைப்பதற்கும் சுலபமாக இருக்கும். இந்த பத்தைகளை ஒரு ஏர் டைட் கண்டைனர் டப்பாவில் அடைத்து மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும், மாதக்கணக்கில் கூட கெட்டுப் போகாது அப்படியே இருக்கும். உங்களுக்கு தேவையான பொழுது தேவையான பத்தைகளை மட்டும் எடுத்து வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சமைக்கும் பொழுது புதிதாக வாங்கியது போல ஃப்ரெஷ் ஆகவே இருக்கும்.


குறிப்பு 4:

நீங்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது உளுந்தை கொஞ்சம் அதிகமாக சேர்த்து அரைத்து கொஞ்சம் மாவை மட்டும் வடைக்கு என்று தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் காலையில் நீங்கள் வடை சுடும் பொழுது மிருதுவாக வருவதற்கு கைகளால் நன்கு ஒரு மூன்றிலிருந்து, நான்கு நிமிடம் வரை அடித்து விடுங்கள். இப்படி செய்யும் பொழுது மாவுக்கு காற்றோட்டம் கிடைத்து தளர ஆரம்பிக்கும். இந்த மாவில் நீங்கள் எப்போதும் போல இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து சட்டென வடை சுட்டு எடுத்து விடலாம்.


குறிப்பு 5:

சிலர் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட அசைவ உணவை சமைப்பது உண்டு. இப்படி அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் ஆக இருந்தால் நீங்கள் முந்தைய நாளே மீன், கறி போன்றவற்றை வாங்கி சுத்தம் செய்து விடுவீர்கள். இதனை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கும் பொழுது ஒரு விதமான கவுச்சி வாடை அடிக்கும். இந்த வாடை அடிக்காமல் இருக்க சுத்தம் செய்து முடித்த பின்பு அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு, அரை மூடி எலுமிச்சை சாறு இவற்றை கலந்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் சுத்தமான தண்ணீர் கொண்டு அலசி அதன் பிறகு நீங்கள் ஃப்ரிட்ஜில் ஏர் டைட் பாக்ஸில் வைத்து ஸ்டோர் செய்தால் கொஞ்சம் கூட கவுச்சி வாடை அடிக்காது. எலுமிச்சை சேர்ந்து உள்ளதால் சமைக்கும் பொழுது அதன் ருசியும் அபாரமாக இருக்கும்.


.