வெறும் அரிசியை அடிக்கடி வாயில் போட்டுக்கொண்டு, அசை போடும் பழக்கம் உங்களிடம் உள்ளதா? இதனால் ஆரோக்கியத்தில் வரும் ஆபத்தை நீங்கள் கட்டாயம் தெரிஞ்சு வெச்சுக்கணும்.
நம்மில் நிறைய பேருக்கு உள்ள பழக்கம் இது. வாயில் ஏதாவது ஒரு பொருளை போட்டு அசைபோட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் யாராவது ஒருவரிடம் ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். வாயை வைத்துக்கொண்டு நம்மால் சும்மாவே இருக்க முடியாது. சும்மாவே இருக்க முடியாது என்பதற்காக நம் வாய்க்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக வெறும் அரிசியை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். குறிப்பாக இந்தப் பழக்கம் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
சிறுவயது முதலே பள்ளிக்குச் செல்லும்போது கொஞ்சம் அரிசியை எடுத்துக் கொண்டு செல்வது. பள்ளியில் ஃப்ரீ டைம் கிடைக்கும் போது வாயில் போட்டு மென்று சாப்பிடுவது. மளிகை கடையில் வேலை செய்பவர்கள் வெறுமனே இந்த அரிசியில் இருந்த நான்கை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் சில இல்லத்தரசிகள் இந்த அரிசியை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த பழக்கம் நாளடைவில் நம் வாயை, அரிசிக்கு அடிமையாக்கி விடும்.
அரிசி சாப்பிடாமல் ஒரு கட்டத்தில் நம்மால் இருக்கவே முடியாது. இந்த அரிசி சாப்பிடுவதன் மூலம் நம் ஆரோக்கியத்தில் எத்தனை பிரச்சினை வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றித்தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வேகவைக்காத அரிசியில் செல்லுலோஸ் (cellulose) என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இந்த செல்லுலோஸ் நம்முடைய உடலுக்குள் சென்றால் அது சீக்கிரத்தில் ஜீரணமாகாது. இதனால்தான் அந்த காலத்தில் சொல்லுவார்கள் பச்சை அரிசியை அடிக்கடி சாப்பிடக்கூடாது என்று. சாப்பிட்டால் பசி எடுக்காது என்று சொல்லுவார்கள் அல்லவா. அது உண்மை. அதற்கு காரணமும் இந்த செல்லுலோஸ் தான்.
அதுமட்டுமல்லாமல் அரிசியை விளைவிக்கும் போது அதில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் மற்ற உரங்களும் அந்த அரிசியில் அப்படியேதான் இருக்கின்றது. அந்த அரிசியை நன்றாக கழுவி அதன் பின்பு அதை வேக வைக்கும்போது, அதிலிருக்கும் பாதிப்புக்கள் முழுமையாக அழிந்துவிடும்.
முதலில் இந்த பச்சை அரிசியை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனை உண்டாகும். நேரத்திற்கு சரியான உணவினை நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகும். ஊட்டச்சத்து குறைபாடு என்பது படிப்படியாக அதிகரித்து இரத்த சோகை வரும் அளவிற்கு கூட பெரிய அளவிலான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும் என்று சொல்லுகிறார்கள்.
நிறைய கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றும். அப்படிப்பட்ட பெண்கள் இந்த அரிசியை சாப்பிடும் பழக்கத்தைக் கூட வைத்திருக்கிறார்கள். அது மிக மிக தவறு. கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்தசோகை அந்த குழந்தையையும் கட்டாயம் பாதிக்கும். கர்ப்பிணி பெண்கள் வெறும் அரிசியை கட்டாயம் சாப்பிடக்கூடாது.
பொதுவாகவே மனிதர்களுக்கு ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு 10 லிருந்து 13 என்ற கணக்கில் இருக்க வேண்டும். ஆனால் ரத்தசோகை நமக்கு வந்துவிட்டால் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் 5 லிருந்து 6 வரை குறைவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதோடு மட்டும் நின்று விட்டதா. இந்த அரிசியை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் நம்முடைய பற்களில் கூட பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அரிசியில் அதிகப்படியான மாவுப்பொருள் உள்ளது. இந்த மாவுப்பொருள் நம்முடைய பற்களில் இருக்கும் கிருமிகளுக்கு உணவாக அமைந்து விடுகிறது. பற்களில் இருக்கும் கிருமிகள் இந்த மாவு பொருளை நன்றாக சாப்பிட்டு பற்களிடையே தங்கி பல்லில் சொத்தை வரும் அளவிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும் அரிசி துகள்கள் பற்களில் உள்ள கிருமிகளுக்கு நல்ல உணவு. இந்த பல் சொத்தைகள் பெரிய அளவுகளில் பாதிப்புகளை உண்டாக்கி, பல்லைப் பிடுங்கும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுவிடும்.
சரி, இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன தான் செய்வது. அரிசிக்கு பதிலாக நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொட்டுக்கடலை, வேர்க்கடலை கடலை பர்பி போன்ற ஆரோக்கியம் நிறைந்த பொருட்கள் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கும். இந்த அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இன்றிலிருந்து இந்த பழக்கத்தை படிப்படியாக குறைத்து, முற்றிலும் நிறுத்த முயற்சி செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.