Advertisement

தினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா ?

தினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா ?

பாலுடன், பெருஞ்சீரகம் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, எலும்புகள் ஆரோக்கியம் மேம்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுவது குறித்து நான் அறிந்துள்ளோம். ஆனால் பாலுடன் மஞ்சள், பெருஞ்சீரகம் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து அருந்துவது கூடுதல் நன்மைகளை தருகிறது. பழங்கால மருத்துவத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இந்திய மசாலாக்களில் சோம்பு என்றும் அழைக்கப்படும் பெருஞ்சீரகமும் அடங்கும். இனிப்புகள், தேநீர் மற்றும் சுவையான உணவுகளில் கூடுதல் சுவையை அதிகரிக்க பெருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது.


சுவாரஸ்யமாக பாலுடன், பெருஞ்சீரகம் சேர்த்து அருந்தும் போது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ள நிலையில் இதனுடன், பெருஞ்சீரகத்தை சேர்ப்பதால் கூடுதல் சுவையையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கிறது. தினசரி உணவில் பாலுடன், பெருஞ்சீரகம் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.,


எலும்புகள், பற்களை பலப்படுத்துகிறது : பாலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதேபோல பெருஞ்சீரகம் கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும், எனவே கொதிக்கும் பெருஞ்சீரகம் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.


பார்வையை மேம்படுத்துகிறது : பெருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இது கண்புரை மற்றும் பிற பார்வை தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. ஆயுர்வேத முறைப்படி வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், திராட்சை மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் பார்வை திறன் மேம்படும்.


மாதவிடாய் பிரச்சனைகளுக்கு : மாதவிடாய் பிரச்சனைகள் பெண்களை மாதந்தோறும் ஏற்படுகிறது. இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி மற்றும் ரத்த போக்கும் அதிகரிக்கிறது. எனவே அந்த நேரத்தில் பெருஞ்சீரகம் கலந்த பாலை அருந்தி வந்தால், பெண்களுக்கு ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் வலி மற்றும் முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.


தடையற்ற சுவாசத்திற்கு :பெருஞ்சீரகம் மற்றும் பால் கலந்து தயாரிக்கப்படும் பானம் சுவாசப் பிரச்சனைகளை குணமாக்கும், மேலும் இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி பருவகால வியாதிகளைத் தடுக்க உதவும். மேலும் பெருஞ்சீரகம் கலந்த பாலில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் இருப்பது சுவாச நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.


தாய்ப்பால் சுரக்க :குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு சமயங்களில் குறைந்து விடும். தாய் பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகம் கலந்த பாலை தினமும் குடித்து வருவது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.


பெருஞ்சீரக பால் தயார் செய்வது எப்படி? அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு பாலை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும். பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் 1 டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் இறக்கி பாலை வடிகட்டி, சுவைக்கு ஏற்ப சிறிது சர்க்கரை/ வெல்லம் சேர்த்து அருந்தலாம். விரும்பப்படுபவர்கள் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து அருந்தலாம்.