வருமுன் காக்கும் மூச்சுப்பயிற்சி! உடலில் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க டயட்டை மாற்ற வேண்டுமா? வீட்டிலிருந்தே என்ன செய்யலாம்?
எந்த ஒரு நோய்க்கும் முதல் மருந்தாக இருப்பது வருமுன் காப்பது ஆகும். கொரோனா போன்ற கொடிய நோய்கள் அதன் தீவிரத்தை அதிகப்படுத்துவதற்கு காரணம் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லலாம். கொரோனா பற்றிய விழிப்புணர்வு முதல் அலையில் அதிகமாக மக்களிடையே இருந்த பொழுது சற்று எச்சரிக்கையாகவே இருந்து வந்தார்கள். ஆனால் கொஞ்ச காலத்தில் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியதே இரண்டாம் அலை உண்டாவதற்கு காரணமாக அமைந்து விட்டது.
இப்போது இருக்கும் நோய்தொற்று முந்தைய பாதிப்பை விட அதிக அளவில் உடலை மோசமடைய வைக்கிறது. எனவே கூடுதல் பாதுகாப்புடன், உணவு கட்டுப்பாடுடன் இருப்பது நலம் தரும். இப்போது இருக்கும் நிலையில் நம் அன்றாட வாழ்க்கையில் உணவு முறை மாற்றத்தை கட்டாயம் கொண்டு வருவது நல்லது. வீட்டிலிருந்தே ஆக்ஸிஜன் அளவு குறையாமல் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யலாம்? என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
நம் முன்னோர்கள் முந்தைய காலகட்டங்களில் குறைந்த அளவில் சாதத்தையும், அதிக அளவு காய்கறிகளையும் உணவில் சேர்த்து வந்தார்கள். ஆனால் அதனை மாற்றி இன்று கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள அரிசி வகையை அதிகமாகவும், உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளை குறைவாகவும் சாப்பிடுகிறோம். நம் வாழ்க்கையில் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தாலே உடலில் ஆக்சிஜன் அளவை குறையாமல் சீராக வைத்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் எழுந்த உடன் முதல் உணவாக புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள மற்றும் ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கக் கூடிய இந்த ஜூஸை குடித்து வரலாம். முந்தைய நாள் இரவே 20 பாதாம் மற்றும் 10 பேரீச்சம் பழங்களை கொட்டை நீக்கி மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை காலையில் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து ஜூஸாக்கி வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
வெள்ளை சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். முளைக்கட்டிய தானிய வகைகளை தினமும் ஒன்று என்ற கணக்கில் ஒரு கப் வீதம் சாப்பிட்டு வரலாம். சிகப்பு அவல், கவுனி அரிசி போன்றவற்றை அன்றாட உணவில் ஒரு சிறு அளவிற்கு சேர்த்து வந்தால் உடலுக்கு நல்ல சத்து கிடைக்கும். தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் அதிக அளவிற்கு திட உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடித்து, உங்களுக்கும் நம் சமுதாயத்திற்கும் நலன் புரிய முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு கொடுக்கும் உத்தரவுகளை தவறாமல் பின்பற்றி வர வேண்டும். வீட்டிலேயே சிறுசிறு மூச்சுப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தியான நிலையில் அமர்ந்து வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசியால் 10 முறையும், இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியால் 10 முறையும் மூச்சை மெதுவாக இழுத்து வேகமாக வெளியில் விட வேண்டும். இதனால் நுரையீரல் சுருங்கி விரிந்து நல்ல முறையில் இயங்கும். ஆரோக்கிய ரீதியான சிறு அறிகுறி தோன்றினாலும் உடனே அலட்சியப்படுத்தாமல், கால தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.