தண்ணீரின் மூலம் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க RO வாட்டர் எனும் சக்கை குடிநீரை நன்னீராக மாற்ற என்ன செய்யலாம்?
தண்ணீர் மற்றும் காற்றைக் கூட இன்று காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாளை இன்னும் என்னவெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படும் என்பதை நினைத்தாலே பயமாக தான் இருக்கிறது. நிலத்தடி நீரை சர்வ சாதாரணமாக குடிநீராக கொண்டு வந்த நம் மக்கள் இன்று ஆர்ஓ வாட்டர் என்னும் கேன் வாட்டரை எந்த சத்தும் இல்லாமல் சக்கையை குடித்து வருகிறோம்.
கேன் வாட்டரில் ஆர்ஓ மற்றும் ஐவி தொழில் நுட்பம் மூலமாக தண்ணீரில் இருக்கும் தாது பொருட்களை பிரித்தெடுத்து வெறும் சக்கையை மட்டும் குடிநீராக நாடு முழுவதும் விநியோகித்து வருகிறார்கள். இதனை கவுரவமாக நினைத்து குடித்துக் கொண்டிருக்கும் நமக்கு அதன் விபரீதத்தை உணர முடியாதது வேதனைக்குரிய விஷயம் தான். கேன் வாட்டரை கூட சத்து மிகுந்த நல்ல தண்ணீராக மாற்றக்கூடிய சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
நிலத்தடி நீரை உலகமயமாக்கல் கொள்கை மூலம் பல்லாயிரம் கோடிக்கு வருமானம் ஈட்டக்கூடிய வியாபாரப் பொருளாக மாற்றி விட்டார்கள். அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் குடிநீரை கேன் வாட்டர் மற்றும் பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டராக மக்களிடையே விளம்பரப்படுத்தி வருகின்றது. ஆனால் அதில் நம் உடலுக்குத் தேவையான தாது பொருட்கள் கிடைக்கின்றனவா? என்றால், இல்லை என்று தான் கூற முடியும்.
தண்ணீரில் இருக்கும் தாது பொருட்களை பிரித்தெடுத்து ஒன்றுமே இல்லாத சக்கையாக கொடுக்கும் வெறும் தண்ணீரை இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கூட கௌரவமாக நினைத்து பருகி வருகின்றனர். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கலப்படமும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சியும் வெற்றி கண்டு கொண்டே இருந்தால் நம் மக்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய சரிவு உண்டாகும்.
இதை எதிர்த்து நம்மால் போராட முடியாவிட்டாலும் நம் வீட்டில் இருக்கும் குடும்பத்தாரை ஆவது நல்ல தண்ணீரை பருக வைக்க நீங்கள் அருந்தும் கேன் வாட்டரில் இந்த பாரம்பரிய மூலிகை பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான குடிநீராக மாற்றி வைக்கலாம். இதன் மூலம் நோய் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல், குடிநீரில் சத்துக்கள் அதிகரித்து அதை குடிக்கும் நமக்கும் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு நமக்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
தேத்தாங்கொட்டை – 1
வெட்டிவேர் – சிறிதளவு
வெந்தயம் – 20 கிராம்
மிளகு – 25 கிராம்
சீரகம் – 25 கிராம்
தேத்தாங்கொட்டை எனப்படும் ஒரு பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கொட்டை இயற்கையாகவே நீரை சுத்திகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. வெட்டிவேரும் அதே போல தண்ணீரை சுத்திகரித்து குளுமையாக வைத்துக் கொள்ளும். வெந்தயம், மிளகு, சீரகம் அத்தனையும் நம் உடலுக்கு நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கக்கூடிய அதீத சக்திகளை கொண்டு உள்ளது. எனவே இவற்றை ஒரு சிறிய காட்டன் துணியில் வைத்து முடிந்து தண்ணீருக்குள் போட்டு ஊற விட்டு விட வேண்டும். இதனை மண்பானை தண்ணீரில் வைத்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும். கூடுமானவரை தண்ணீரை மண் பானையில் அல்லது செம்பு பானையில் ஊற்றி குடிப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். சக்கை தண்ணீரையும் நல்ல தண்ணீராக ஆரோக்கியம் மிகுந்த மற்றும் சுவையான தண்ணீராக மாற்றக்கூடிய இந்த மூலிகைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்திப் பலன் பெறலாமே.