தொடர்ந்து அதிக வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு ஏற்படும் கண் சோர்வை 10 நிமிடத்தில் எப்படி போக்குவது தெரியுமா?
இன்று இருக்கும் நவீன யுகத்தில் பெரும்பாலும் கண்களுக்கு அதிகம் வெளிச்சம் தரக்கூடிய பொருட்கள் உபயோகப்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆறு மாத குழந்தை முதல் பொக்கை வாய் வைத்திருக்கும் இளசுகள் வரை அனைவருமே கண்களுக்கு தேவையான ஓய்வு என்பது கொடுப்பதில்லை. இதனால் கண்களில் எரிச்சலும், சோர்வும் உண்டாகிறது. நாளடைவில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்து விடுகிறது. கடந்த நூற்றாண்டை காட்டிலும் இந்த நூற்றாண்டில் கண் தொடர்பான பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் நமக்கு நன்றாகவே புரிந்தாலும் நம் கண்களை பாதுகாப்பதற்கு நமக்கே அக்கறை இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். சரி கண் சோர்வை உடனடியாக எப்படி நீக்குவது? என்பதைத்தான் இப்பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
கம்ப்யூட்டர் தொடர்பான வேலைக்கு செல்பவர்கள் வேறு வழியே இல்லாமல் தொடர்ந்து அதிக வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களைக் குறை சொல்வதற்கு இதில் ஒன்றும் இல்லை. ஆனால் மூன்றாவது கையாக நம்முடனே வைத்துக் கொண்டு திரியும் மொபைல் போன் மூலம் எவ்வளவு பேருக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது தெரியுமா? சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கிறோம்.
மொபைல் போன் உபயோகிப்பது தவறில்லை ஆனால் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா? மொபைல் போனிலிருந்து வெளிவரும் வெளிச்சத்திற்கு நம்முடைய கண்கள் தயார்யானவை அல்ல. நீங்கள் மொபைல் போன் பார்க்கும் பொழுது கண்டிப்பாக அந்த அறையில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது அவசியமான ஒன்று. மின் விளக்குகளை அணைத்து விட்டு கூடுமானவரை மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகளின் கண்களுக்கு மொபைல் போனிலிருந்து வெளிவரும் வெளிச்சம் கண் சோர்வையும், கண் அலர்ஜியும் உண்டாக்கும். இதனால் விரைவிலேயே கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்கு கூட இன்றைய தாய்மார்கள் கதை சொல்வதை விட்டுவிட்டு கையில் மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அதிக நேரம் மொபைல் போனில் தொடர்ந்து வெளிச்சத்தை பார்க்கும் குழந்தையின் கண்களுக்கு சீக்கிரமே சோர்வு ஏற்பட்டு விடுகிறது. இதனால் கண் பாதிப்புகள் இளவயதில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்க.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் விரைவிலேயே கண் சோர்வு அடைகின்றனர். நேரம் கடக்க கடக்க கண்களில் எரிச்சல் உண்டாவதை நீங்களே பலமுறை உணர்ந்து இருப்பீர்கள். இது உங்களுக்கு பிற்காலத்தில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணராமலேயே செய்து கொண்டிருக்கிறீர்கள். இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாத அறையில் தொடர்ந்து அதிக வெளிச்சத்தை மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அபாயமான விளைவுகளை தான் சந்திக்க நேரிடும். இதனை சரிசெய்ய அடிக்கடி கண்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். ஒரு 10 நிமிடம் உங்களுடைய கண்களுக்கு இந்த பயிற்சியை கொடுங்கள். மிகவும் சுலபமானது தான்.
கண்களை மூடிக்கொண்டு இரண்டு கைகளையும் கண்களின் மீது குவித்தபடி கொஞ்சம் கூட வெளிச்சம் புகாத படி இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். சிறு வயதில் கண்ணாம்பூச்சி விளையாடுவோம் அல்லவா? அதுபோல் கண்ணில் கையை வைத்து பொத்திக் கொள்ளுங்கள். இப்போது அந்த இருட்டில் விழிகளை மட்டும் பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும். முதலில் உங்கள் விழிகளை மேலும் கீழுமாக ஒரு 10 முறை அசைக்கவும். பின்னர் பக்கவாட்டில் இடது, வலது என ஒரு பத்து முறை கொண்டு போய் வாருங்கள். இப்படி விழிகளை அசைத்து பயிற்சி செய்வதன் மூலம் கண் சோர்வை பத்து நிமிடத்தில் நீக்கி விட முடியும்.
கண் சோர்வு ஏற்படும் போதெல்லாம் ஒரு பத்து நிமிடத்திற்கு இதுபோல் செய்து விட்டு பின்னர் உங்கள் வேலைகளை துவங்கினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறையும். அடிக்கடி கண்களுக்கு ஈரத் துணியால் ஒத்தடம் கொடுங்கள். கண்களில் இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். நம்முடைய கண்களை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.
.