பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் அதிகம் சத்துக்கள் மிகுந்தவை. இதனை தினசரி உணவில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். வெறும் தயிரை தினமும் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வரவே வராது என்பார்கள். அந்த அளவிற்கு அற்புத சக்தி படைத்த தயிர் அதிக கால்சியம், விட்டமின் b12, விட்டமின் b2, பொட்டாசியம் போன்ற சத்துக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. தினமும் உணவில் தயிர் சேர்த்து கொள்பவர்கள் எந்தெந்த உணவுகளை உடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது? அப்படி சேர்த்தால் என்ன ஆகும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
தயிருடன் எல்லா உணவுப் பொருட்களையும் சுலபமாக சேர்த்து சாப்பிட்டு விடக்கூடாது. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இது சிலருக்கு தெரிந்து இருந்தாலும், பலருக்கு இன்னுமும் தெரியாமல் தான் இருக்கின்றது. தயிர் சாப்பிடும் ஒவ்வொருவரும் கட்டாயம் இந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
தயிருடன் ஒரு சிலர் மாம்பழம் வைத்து சுவைப்பது உண்டு. இது சூப்பரான காம்பினேஷனாக இருந்தாலும் உடலுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. மாம்பழம் அதிக சூட்டை ஏற்படுத்தும் என்பதால் இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் தவிர்ப்பது நல்லது.
தயிருடன் மீன் சேர்த்து சாப்பிடவே கூடாது. மீன் அதிக புரத சத்துக்கள் நிறைந்த உணவாக இருப்பதால் தயிருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஜீரண கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனால் வயிற்று வலி உண்டாவதற்கு சாத்தியக்கூறு உண்டு என்பதால் இதனை தவிர்ப்பது தான் நல்லது.
பாலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட உணவு தயிர் என்று இருந்தாலும் பாலுடன் இதனை சேர்த்து சாப்பிடுவதும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. பாலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற தொந்தரவுகளும், வயிற்றுப் போக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே பாலுடன் தயிரை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
எண்ணெயில் பொரித்த உணவு வகைகளுடன் தயிர் சேர்த்து உண்பதை கூடுமானவரை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக இரவு நேரங்களில் பொரித்த உணவு வகைகளுடன் தயிர் சேர்த்துக் கொள்வது செரிமான பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
அதிகம் விரும்பும் பிரியாணி வகையை அடிக்கடி சாப்பிடுபவர்கள் அதனுடன் தயிர் பச்சடி எடுத்துக் கொள்வது வழக்கம். பிரியாணியில் இருக்கும் மசாலா வகையறாக்கள் உடலுக்கு பிரச்சனைகளை தரக் கூடாது என்பதால் வெங்காயத்துடன் தயிர் சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஆனால் வெங்காயம் சூட்டை கொடுக்கக் கூடியது மற்றும் தயிர் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இரண்டும் எதிரெதிர் தன்மையை கொண்டுள்ளதால் சில நேரங்களில் உடலுக்கு உபாதை விளைவிக்கக் கூடியதாக அமைந்து விடும். எனவே பிரியாணியுடன் அதிகமாக தயிர் பச்சடியை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அப்படியிருக்க தயிர் பச்சடி மட்டும் விதிவிலக்கா என்ன?