பெண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், 5 சின்ன சின்ன தவறுகள்! அது என்னென்ன தவறுகள் என்று நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?
பெண்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்படக் கூடிய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது, நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் தான்! அதில் குறிப்பிட்டு சொல்ல போனால், நாம் செய்யும் 5 தவறுகள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த 5 தவறுகளை சரிசெய்து விட்டாலே, பெண்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து விடலாம். அது என்னென்ன தவறுகள் என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த 5 தவறுகளை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, பெண்கள் எப்போதுமே ‘நம்மை கவனிப்பதற்கு யாரும் இல்லையே, ஒருவேளை சாப்பிட்டாயா? என்று கூட யாரும் கேட்பதில்லை! நம் வீட்டில் உள்ள உறுப்பினர்களை நாம் எவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்கின்றோம்? ஆனால், பதிலுக்கு நம்மை யாரும் அக்கறையோடு கவனிக்கவே இல்லையே’ என்ற எண்ணம் எந்த ஒரு பெண்ணிற்கு வரக்கூடாது. மற்றவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் பெண்ணுக்கு, தன்னைத்தானே அக்கறையோடு பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் இருக்கின்றது. ஒரு குடும்பத்தை, ஒரு பெண்ணினால் மட்டும்தான் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட பெண், கட்டாயம் புத்துணர்ச்சியோடு, ஆரோக்கியத்தோடு, சந்தோஷத்தோடு தான் இருக்க வேண்டும் என்பதை முதலில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, பெண்கள் செய்யும் தவறுகளை பார்த்துவிடுவோமா.
முதலாவதாக, பெண்களுக்கு இருக்கக்கூடிய வேலையில் அவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பதை கூட மறந்து விடுகிறார்கள். தாகம் ஏற்பட்டாலும், பிறகு தண்ணீர் குடுத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய கேடு விளைவிக்கும். இதன் மூலம், ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. ஜீரண சக்தியில் பிரச்சனை உண்டாகின்றது. தோலில் சீக்கிரமே சுருக்கம் விழுந்து விடும். இளமையிலேயே, வயதான தோற்றத்தை அடைந்து விடுவார்கள். பெண்கள், சராசரியாக ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஒரே அடியாக குறைக்க வேண்டும் என்பது கிடையாது. அப்பப்போ, கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் குடித்து கொண்டே இருங்கள்.
இரண்டாவதாக, காலையில் எழுந்தவுடன் பம்பரமாக வேலை செய்யும் பெண்கள், காலை உணவு உண்ண வேண்டும் என்பதையே மறந்து விடுவார்கள். காலை உணவு உண்ண, மதிய நேரம் வந்து விடும். சரி, மதிய சாப்பாட்டை சாப்பிடலாம் என்று, சாப்பாட்டை கொஞ்சம் அதிக அளவில் சாப்பிட்டு விடுவார்கள். இப்படியாக காலையில் உணவு அருந்தாமல், மற்றொருவேளை அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வது, உடலுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஜீரண சக்தி குறைந்து விடும். சர்க்கரை வியாதி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு, இப்படி பலதரப்பட்ட நோய் வருவதற்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்கள். காலை 9 மணிக்கு முன்பாகவே காலை உணவை கட்டாயம் இனி சாப்பிட மறக்காதீர்கள்.
மூன்றாவதாக, ஆண்கள் எப்படிப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுகிறார்களோ, இல்லையோ! பெண்கள் பலவகைப்பட்ட உணவுகளை மாறிமாறி உட்கொள்ள வேண்டும். அதாவது, அரிசி வகையில் செய்யப்பட்ட சாப்பாட்டை மட்டுமே உண்ணாமல் ராகி, கம்பு போன்ற சிறு தானியங்களை, சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழ வகைகள், தானிய வகைகள் இப்படி என்று உங்களது உணவு எல்லா வகையான ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான், மாதவிலக்காகும் சமயத்தில் பிரச்சனை ஏற்படாது. எப்போதுமே சோர்வடையாமல், விரக்தி அடையாமல், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்.
நான்காவதாக, வீட்டிலிருக்கும் பெண்கள் உடற்பயிற்சியே செய்வது கிடையாது. உங்களுக்கு என்று ஒரு இருபது நிமிடமாவது நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அதேபோல் உடல் பயிற்ச்சியை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்வது, அல்லது நேரம் கிடைக்கும் போது செய்வது என்று இருக்கக்கூடாது. கட்டாயம் இன்றைய தினம் காலையில் 5 மணிக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், தொடர்ந்து வரும் நாட்களில் அந்த ஐந்து மணிக்கு உடற்பயிற்சியை செய்தே ஆக வேண்டும் என்ற மன உறுதி உங்களிடம் இருந்தால் மட்டுமே, உடற்பயிற்சியின் மூலம் பலனை அடைய முடியும்.
(அதிலும், வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், கேட்கவே தேவையில்லை! அவர்களுக்கு 10 கை அவசியம் தேவை. வீட்டு வேலையையும் பார்த்துவிட்டு, வெளியில் சென்று, வேலை பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. காலில் பம்பரம் கட்டிக்கொண்டுதான் சுழள வேண்டும். அப்போது, அவர்களுடைய மனதோடு சேர்ந்த உடலும் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும்?)
ஐந்தாவதாக, ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கும் பெண்கள், கட்டாயம் மன அழுத்தத்தோடு இருக்கவேகூடாது. ஆண்களைவிட, பெண்களுக்கு சட்டென்று கோபம் வருவது இயற்கைதான். இருப்பினும், உங்களது மனதை எப்போதுமே சந்தோஷத்தில் வைத்துக் கொண்டால், உங்களது குடும்பமும் சந்தோஷமாக இருக்கும். நீங்களும் நீண்ட நாட்கள் வரை ஆரோக்கியமாக வாழலாம். மனஅழுத்தம் இல்லாத பெண்கள் நீண்ட நாட்கள் வரை இளமையாகவும், புத்துணர்ச்சியோடு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, ஒரே வழி உங்களது கண்களை மூடி, யோகாவில், உங்களது மனதை ஈடுபடுத்துவதும் மட்டும்தான். குறைந்தது 10 நிமிடமாவது யோகா செய்வதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்துமே, எல்லா பெண்களுக்குமே தெரியும். ஆனால் பின்பற்ற மாட்டார்கள். தயவுசெய்து இனியாவது, முயற்சி செய்து பாருங்கள்! ஆரோக்கியமான பெண்களே, ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்க முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.