10 நிமிசத்தில் உளுந்து சேர்க்காமல் ‘இன்ஸ்டண்ட் மெதுவடை’ இப்படி செஞ்சி பாருங்க!
வடைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் நமக்கு வடை என்றாலே முதலில் ஞாபகம் வருவது உளுந்து வடை தான். உளுந்தே இல்லாமல் வடையா? அதெப்படி என்பவர்களுக்கு இந்த பதிவு விடையளிக்கும். உளுந்து வடை போன்ற சுவை இல்லாவிட்டாலும் இதன் சுவையும் அலாதியானதாக இருக்கும். வித்யாசமான முறையில் இந்த வடையை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதை செய்ய அதிக நேரமும் பிடிக்கப் போவதில்லை. சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப், அரிசி மாவு – 1 கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு, மிளகுத்தூள் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு.
முதலில் தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். தயிர் புளித்த தயிராக இருக்கக் கூடாது. புளிப்பில்லாத கெட்டியான தயிராக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அதே கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் கட்டிகளில்லாமல் கரையும் படி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.
தோசை மாவு பதத்திற்கு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றுடன் நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, சிறிய துண்டு இஞ்சி நறுக்கியது, கருவேப்பிலை நறுக்கியது, கொத்தமல்லி தழை நறுக்கியது, கால் ஸ்பூன் – பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நறுக்கிய வெங்காயம் 2, அரை ஸ்பூன் அளவிற்கு இடித்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து நான்ஸ்டிக் பேன் ஒன்றை வையுங்கள். அதில் இக்கலவையை ஊற்றி நன்றாக இடைவிடாமல் கிளறிக் கொண்டே வாருங்கள். அரிசி மாவு திரண்டு இடியாப்பம் சுடும் மாவு பதத்திற்கு வந்துவிடும். தொட்டுப் பார்த்தால் கைகளில் ஒட்டாத வண்ணம் இருக்க வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். மாவை உருண்டைகள் பிடித்து வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும். நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது வாணலியில் சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தால் சுவையான அரிசி மெதுவடை தயார். இதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை தேவையான பொருட்கள் கையில் இருந்தால் சட்டென மாலை நேரத்தில் எளிமையாக செய்து விடலாம். நீங்களும் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.