Advertisement

உங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில் கூட காய வைக்க தேவையில்லை! ஃபேன் காற்று போதும்.

உங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில் கூட காய வைக்க தேவையில்லை! ஃபேன் காற்று போதும்.

நம் வீட்டில் இருக்கின்ற ரேஷன் பச்சரிசியை வைத்து, சூப்பர் வத்தல் சுலபமான முறையில் தயார் செய்துவிடலாம். ஆனால், இந்த ரேஷன் அரிசியை முதலில் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நன்றாக சுத்தம் செய்த பின்பு வத்தல் செய்தால் தான், வெள்ளை நிறமாகவும், எந்த விதமான வாடை இல்லாமலும், சுவையாக இருக்கும். ரேஷன் அரிசியை எப்படி சுத்தம் செய்வது என்பதை, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை பார்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்போது ரேஷன் அரிசியை வைத்து எப்படி வத்தல் செய்யலாம் என்பதை பார்த்து விடுவோம்.

rice-vathal

ரேஷன் அரிசி வத்தல் செய்வதற்குத் தேவையான பொருட்கள்:

ரேசன் பச்சரிசி – 2 கப்

பச்சை மிளகாய் – 8 (காரம் குறைவாக வேண்டுமென்றால், மிளகாயை குறைத்துக் கொள்ளுங்கள்)

தேவையான அளவு உப்பு, தண்ணீர் – 1 கப் அளவு, பெருங்காயம், ஜீரகம் வாசனைக்கு ஏற்ப.

முதலில் ரேஷன் பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி, 10 மணி நேரம் வரை ஊற வைத்து விட வேண்டும். இன்றைக்கு வத்தல் செய்யப் போகிறீர்கள் என்றால், முந்தைய நாள் இரவே அரிசியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மொழுமொழுவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2 ஆழாக்கு அளவு பச்சரிசியை எடுத்தால், அதே ஆழாகில், ஒரு ஆழாக்கு அளவு தண்ணீர் ஊற்றி அரைத்தால் போதுமானது. இரண்டு பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு தண்ணீர்.

rice-vathal1

அந்த மிக்ஸியில் அரிசியோடு சேர்த்து, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை மாவு புளிக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது. மாவு புளித்ததும் கொஞ்சம் கெட்டித்தன்மைக்கு மாறி இருக்கும். அதை நன்றாக கலந்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப பெருங்காயமும் சீரகத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு, உங்கள் வீட்டில், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு ஒரு தட்டு இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் உள்பக்கம் அளவிற்கு மட்டும், ஒரு குட்டி குழிகரண்டி அளவு மாவு எடுத்து ஊற்றி, பரவலாக, தோசை தேய்ப்பது போல, தேய்தும் கொள்ளலாம், அல்லது ஆபத்தை சுழற்றுவது போல சுழற்றியும் கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில் பச்சரிசி மாவு தட்டில் சமமாகப் பரவி இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

silver-plate

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்து விடுங்கள். அதில் உயரமான கலவையை வைக்க வேண்டும். உயரமான கலவடை இல்லை என்றால், ஒரு பெரிய பாத்திரத்தை கவிழ்த்து வைத்து கொள்ளுங்கள். அந்தக் கலவடையின் மீது, நீங்கள் மாவு ஊற்றி தயாராக வைத்திருக்கும், இந்த தட்டை வைத்து, ஒரே நிமிடம் இட்லி குண்டானை மூடி போட்டு, ஆவியில் வேகவைத்தால் போதும். வத்தல் தயாராகியிருக்கும்.

அந்தத் தட்டை ஆவியில் இருந்து வெளியே எடுத்து, இரண்டு நிமிடம் ஆற வைத்து, ஓரத்தில் மட்டும் நகத்தால், தூக்கிவிட்டு ஈஸியாக பிச்சு எடுத்துவிடலாம். கையில் நகம் இல்லாதவர்கள், தட்டின் ஓரப்பகுதியில் மட்டும், கத்தியை விட்டு லேசாக தூக்கி விட்டு, கையாலே கிழித்தால் தட்டிலிருந்து அப்பளம் சுலபமாக உங்கள் கைகளுக்கு வந்து விடும். (எக்காரணத்தைக் கொண்டும் மாவு, தட்டில் ஒட்டிக்கொள்ளும் என்பதற்காக, எண்ணெய் தேய்த்து விடாதீர்கள். வெகு நாட்கள் வத்தளை எடுத்து வைத்ததுமேயானால் எண்ணெய் வாசனை வந்து விடும். அதாவது சிக்கு வாடை அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)௦

rice-vathal2

ஒரு பெரிய மைக்கா கவரை தயாராக மேடையின் மீது விரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல இரண்டு தட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாற்றி மாற்றி ஆவியில் வைத்து, வேக வைத்து அப்பளத்தை தட்டிலிருந்து கிழித்து, கவரில் தனித்தனியாக அடுக்கி வைத்து, ஃபேன் காற்றிலேயே, காய வைத்தால் போதும். எட்டிலிருந்து பத்து மணி நேரம் காய்ந்தவுடன், நீங்கள் பொரிப்பதற்கு அப்பளம் தயாராகிவிடும்.

rice-vathal3

சுத்தமான காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நம் கைகளாலேயே செய்த அப்பளத்தை, நம் குழந்தைகளுக்கு பொரித்து தந்தோமேயானால், அதில் நமக்கு ஒரு மன திருப்தியும் கிடைக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒருமுறை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.