நீங்க வைக்கக்கூடிய ரசம் சூப்பரா இருக்கணுமா, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! ரசம் வெக்க தெரியாதவங்க கூட, சூப்பர் ரசம் வெச்சிருவீங்க!
நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். ஆனால், இந்த ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு தெரியாது. காரணம், ரசத்தை பக்குவமாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதிகமாக கொதித்தாலும் ரசம் நன்றாக இருக்காது. கொதிக்காமல் இருந்தாலும், ரசம் நன்றாக இருக்காது. இந்த ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு ஒரு குறிப்பு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு, பெரிய தக்காளி – பழுத்தது ஒன்று, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, சாம்பார் பொடி – 1 ஸபூன், பூண்டு – 5 திரி, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1ஸ்பூன், மல்லித்தழை – தேவையான அளவு பொடியாக வெட்டிக் கொள்ளவும். வர மிளகாய் – 2, கடுகு.
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, கடாயில் ஊற்ற வேண்டும். 2 டம்பளர் ரசம் வைக்க வேண்டும் என்றால், அரை டம்ளர் அளவு புளிக்கரைசல் தண்ணீரை கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் தக்காளியை நான்காக வெட்டி போடுங்கள். ரசத்திற்கு தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஒரு கொத்து, போட்டு மிதமான தீயில் இந்த பொருட்கள் அனைத்தும் புளி தண்ணீரோடு சேர்ந்து நன்றாக கொதிக்க வேண்டும்.
புளியின் பச்சை வாடை, தக்காளியின் பச்சை வாடை இவை அனைத்தும் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கட்டும். அதற்குள் மிளகு, சீரகம், பூண்டு இவைகளை சிறிய குழவையில் போட்டு நன்றாக நைய்த்துக் கொள்ளவேண்டும். இதை மிக்ஸியில் அரைத்தும் போடலாம். இருப்பினும் இடித்துப் போடுவதில் சுவை அதிகமாக இருக்கும்.
இப்போது கடாயில் சேர்த்திருக்கும் கலவை பச்சை வாடை போன பின்பு, புளிக்கரைசல் கொஞ்சம் சுண்டி இழுக்கும். அப்போது கடாயில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின், பொடி பண்ணி வைத்திருக்கும் பூண்டு மிளகு சீரகப் பொடியை அதன் மேல் தூவி, ஒரு கொதி வந்தவுடன் ரசத்தை கரண்டியை விட்டு, ஒரு கலக்கு கலக்கி, இறக்கி விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்குங்கள். ரசம் வைத்து முடிக்கும் வரை உங்களது அடுப்பு மிதமான தீயில் தான் இருக்க வேண்டும்.
அதன்பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில், கடுகு, வர மிளகாய் 2, பெருங்காயம் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை இவைகளை போட்டு தாளித்துக் கொட்டுங்கள். புளிகரைசலை ஆரம்பத்திலேயே நன்றாக கொதிக்க வைப்பதன் மூலம், உங்களுக்கு ரசத்தில் தக்காளியின் பச்சை வாடையோ அல்லது புளியின் பச்சை வாடையோ பெருங்காயத்தின் பச்சை வாடையும், அடிக்கவே அடிக்காது. ஒரு கொதி வந்தவுடன் ரசத்தை தைரியமாக இறக்கி வைத்துக் கொள்ளலாம். ரசத்தை இறக்கியவுடன் மூடிவைத்து விடாதீர்கள் இரண்டு மூன்று நிமிடம் கழித்து மூடினால் நல்லது.
பின்குறிப்பு: உங்கள் வீட்டில் சாம்பார் பொடிக்கு பதிலாக ரசப்பொடி இருந்தாலும், புளிக்கரைசலோடு அதை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதில் மிளகு சீரகம் இருக்கக்கூடாது. எப்போதும் இறுதியாகத்தான் ரசத்திற்கு மிளகு ஜீரகம் சேர்க்கவேண்டும். சில பேர் வீடுகளில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு இவைகளை சேர்த்து ரசப்பொடி அரைத்து வைத்திருப்பார்கள். இந்தப் பொடியை வேண்டும் என்றால் புளிக்கரைசலோடு சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் வைத்திருக்கும் சாம்பார் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து வைக்கும் ரசத்தில், ஒரு தனி வாசம் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் எப்போதுமே ரசித்திற்க்கு புளியும், உப்பும் தூக்கலாக இருக்க வேண்டும். புதியதாக ரசம் வைக்க ஆரம்பிப்பவர்களுக்கும் இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!