Advertisement

வெங்காயமும், தேங்காயும் இருந்தா போதும் சட்டுனு சூப்பர் ‘புலாவ்’ செஞ்சி அசத்திரலாம்!

வெங்காயமும், தேங்காயும் இருந்தா போதும் சட்டுனு சூப்பர் ‘புலாவ்’ செஞ்சி அசத்திரலாம்!

தினமும் என்னடா செய்வது! என்று யோசித்து யோசித்தே மண்டை காய்ந்து விடும் போலிருக்கிறதா? மூன்று வேலையும் புதிதாக சமைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். எந்த காய்கறியும் இல்லாத சமயத்தில் வெறும் வெங்காயம் மற்றும் தேங்காய் வைத்தே சூப்பரான புலாவ் ஒன்றை செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி பாருங்கள். இதற்கு அதிக நேரம் கூட ஆகாது. அரைமணியில் 6 பேர் சாப்பிடும் அளவிற்கு வெங்காய புலாவ் செய்து முடித்து விடலாம்.

onion-pulao

முதலில் பச்சைமிளகாய் – 3, பூண்டு – 50g, இஞ்சி – 2 துண்டு இந்த மூன்றையும் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் அகன்ற குக்கர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் குக்கர் வாங்கும் போது அகலமான குக்கராக வாங்குவது நல்லது. இது போன்ற புலாவ் வகைகள் செய்வதற்கு உங்களுக்கு வசதியாக இருக்கும். அடுத்ததாக அரை மூடி பெரிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காயிலிருந்து தேங்காய் பால் ஒரு 2 டம்ளர் வரும் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 6 முழு முந்திரி பருப்புகளை சிறிது தேங்காய் பால் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். 1 டம்ளர் பாஸ்மதி அரிசிக்கு 11/2 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். நாம் இப்போது 3 டம்ளர் அரிசி எடுத்துக் கொள்வோம். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

onion-pulao1

குக்கரில் நெய்யும், எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் தலா 2 என்ற எண்ணிக்கையில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகள் பொரிந்ததும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய 3 வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும் 5 பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.


அதனுடன் நீங்கள் அரைத்து வைத்திருந்த இஞ்சி பூண்டு பேஸ்டை கலந்து கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக சுருள வதக்க வேண்டும். பின்னர் அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது இரண்டு டம்ளர் தேங்காய் பால், இரண்டரை டம்ளர் தண்ணீர் கலந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். தேங்காய்ப் பால் சேர்ப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். சரியாக இருக்கும். இப்போது குக்கரை விசில் வைக்காமல் மூடிக் கொள்ளவும்.

onion-pulao2

தேங்காய் பால் நன்றாக கொதித்ததும் ஊற வைத்திருந்த அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விடவும். மிதமான தீயில் இரண்டே விசிலில் கீழே இறக்கி விடவும். இப்போது சுவையான ‘வெங்காய புலாவ்’ தயார். இவற்றுடன் நறுக்கிய வெங்காய தாளை சேர்த்து, சிறிது நெய் விட்டு லேசாக கிளறி பரிமாறவும். மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெங்காய புலாவ் சுலபமான முறையில் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு பருக்கை கூட மிஞ்சாது.