மிச்சமான சாதத்தில் இந்த, புதுவிதமான ரொட்டி செஞ்சி பாருங்க! மீதமான சாப்பாட்டை இதில் சேர்த்திருக்கிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
பல பேர் வீடுகளில் சாதம் மீந்துவிட்டால் அதை வீணாக்கி விடுவார்கள். சில பேர் அதை பழைய சாதமாகவே சாப்பிட்டு விடுவார்கள். இன்னும் சில பேர் அதை தாளித்து சாப்பிடுவார்கள். ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில், கோதுமை மாவு சேர்த்து ரொட்டியாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரொட்டி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பழைய சாதம் 1 கப், கோதுமை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய்-2, குடை மிளகாய் சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
சிறிதளவு இஞ்சி-துருவியது, தேங்காய்த்துருவல் -1/2 கப், தயிர் – 1/4 கப், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், உருளைக்கிழங்கு பெரியது 1 – வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் பழைய சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில், ஒரு கப் அளவு கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து, தயிரையும் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் பழைய சாதத்தையும் போட்டு 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள். ஆனால், கொஞ்சம் இலகுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.
கேழ்வரகு அடை தட்டும் பதம் இருந்தால் போதும். கையில் எண்ணையை தொட்டு, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, உங்கள் வீட்டில் வாழை இலை இருந்தால் அதன் மேல் எண்ணெய் தடவி, இந்த உருண்டைகளை அடை போல், விரல்களால் தட்டி, சுவையான ரொட்டியை சுட்டு எடுக்கலாம்.
வாழை இலை இல்லாதவர்கள் ஒரு தடிமனான கவரில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை சிறு சிறு ரொட்டிகளாக தட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டியதுதான். சப்பாத்திக்கு எண்ணெய் ஊற்றும் அளவைவிட, கொஞ்சம் அதிகப்படியான எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்கும் பட்சத்தில் சுவையான, வாசனையான ரொட்டி தயார்.
இதற்கு தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, இவைகளை சேர்த்து பரிமாறும்போது இதன் சுவை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமானதும் கூட. இந்த ரொட்டி மாவோடு கேரட், பச்சைப்பட்டாணி இவைகளை சேர்த்து செய்து தரும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மிச்சமான சாதம் இல்லாமல் இருந்தால் கூட, சாதத்தை சேர்க்காமல், மற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து, கோதுமை ரொட்டியாகவும் செய்து பரிமாறலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.