Advertisement

2 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

2 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

உலகில் பகல்-இரவு, பிறப்பு – இறப்பு, சூரியன்-சந்திரன் போன்ற இரண்டு தன்மையான விடயங்கள் அதிகம் உள்ளன. அதே போல அனைத்திலும் அர்த்தநாரீஸ்வர தத்துவம் சிவன் மற்றும் சக்தியின் அம்சம் நிறைந்துள்ளது. அத்தகைய சிவ பார்வதி தன்மை கொண்ட ஒரு தெய்வீக பொருளாக 2 முக ருத்ராட்சம் இருக்கிறது. இந்த இரண்டு முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2 mukhi rudraksham

2 முக ருத்ராட்சம் பயன்கள்

சந்திரன் அருள்

சந்திரன் மனிதர்களின் மனதை ஆளும் மனோகாரகன் ஆவார். எண் கணித சாஸ்திரப்படி 2 ஆம் எண் என்பது சந்திர பகவானுக்குரிய எண்ணாக இருக்கிறது. அதே போல் இந்த 2 முக ருத்ராட்சம் சந்திர ஆதிக்கம் மிகுந்ததாக இருக்கிறது. ஜாதகத்தில் சந்திரன் பாதகமான நிலையில் அமையப் பெற்றவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் இந்த 2 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சந்திர பகவானின் முழுமையான நல்லருள் கிடைக்கப் பெற்று அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

மன நலம்

இரவில் ஒளி தரும் சந்திரனை தனது முடிவில் சூடியவர் சிவபெருமான். சந்திரன் மனிதர்களின் மனதை இயக்கும் கிரகமாக இருப்பது நாம் ஏற்கனவே அறிந்தது. மனக்குழப்பம், மன அழுத்தம் மற்றும் இதர மன நலம் சார்ந்த பிரச்சனைகளால் தவிப்பவர்கள், 2 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் மன ஆரோக்கியம் மேம்பட்டு எந்த ஒரு செயலை குறித்து தீர்க்கமாக சிந்தித்து, ஆராய்ந்து சிறப்பாக செய்ய முடியும்.

2 mukhi rudraksham

கர்ப்பிணி பெண்கள்

தாய்மை என்பது பெண்களுக்கு இயற்கை அளித்த மிக உன்னதமான வரமாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், தங்கள் வயிற்றில் வளரும் குழந்தையையும் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இரண்டு முக ருத்ராட்சத்தை ஒரு கயிற்றில் கோர்த்து கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் இடுப்பில் கட்டிக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

லட்சுமி கடாட்சம்

பணம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். இக்காலத்தில் எவ்வளவு பணம் ஈட்டினாலும் நம் தேவைக்கே சரியாக இருக்கிறது. நமக்கு பணவரவுகள் அதிகம் ஏற்பட செல்வ மகளான லட்சுமி தேவியின் கடாட்சம் நமக்கு ஏற்பட வேண்டும். அதை தரவல்ல ஒரு பொருளாக 2 முக ருத்ராட்சம் இருக்கிறது. இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவருக்கு லட்சுமி கடாட்சம் மற்றும் லட்சுமி தேவியின் அருளும் ஏற்படும்.

2_Mukhi_Rudraksha

கண்கள்

கண்களின் பார்வைத் திறன் அனைவருக்கும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு கண்களில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. மனிதனின் இடது கண் என்பது சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டது என நமது யோகிகள் கூறுகின்றனர். எனவே இடது கண்களில் எப்படிப்பட்ட குறைகள் ஏற்பட்டாலும், இந்த சந்திர ஆதிக்கம் மிகுந்த 2 முக ருத்ராட்சம் அணிவதால் இடது கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி, கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

சிவன், விஷ்ணு

சிவனை வழிபடும் சைவ பிரிவினர் மட்டுமே ருத்ராட்சத்தை அணிகின்றனர் என்றாலும் மகா விஷ்ணுவை வழிபடும் வைணவர்கள் இரண்டு முக ருத்ராட்சத்தை விஷ்ணுவின் அம்சம் நிறைந்ததாக கருதி பூஜையில் வைத்து வழிபடுகின்றனர். எனவே சிவன் மற்றும் விஷ்ணுவின் அருளை சேர்த்து பெற நினைப்பவர்கள் இரண்டு முக ருத்ராட்சத்தை தாராளமாக அணியலாம்.

2-muka-rudraksham

தூக்கமின்மை

மனிதன் உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாததாகும். உடலில் ஏற்படும் சில குறைபாடுகள் மற்றும் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களால் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகின்றது இப்படி தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்கள் தலையணைக்கு கீழே இரண்டு முக ருத்ராட்சம் ஒன்றை வைத்து தினமும் தூங்குவதால் சிறிது சிறிதாக இந்த தூக்கமின்மை பிரச்சனை நீங்கி உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

இல்லற வாழ்க்கை

ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தம்பதிகள் இருவரின் மனம் ஒன்றினால் இல்லறம் சிறக்கும். இல்லற வாழ்வு மிக இனிமையாக இருக்க சிவன் மற்றும் பார்வதி அம்சம் நிறைந்த இரண்டு முக ருத்ராட்சத்தை தம்பதிகளில் யாரேனும் ஒருவர் அணிந்து வர குடும்ப வாழ்வு சுகமாக அமையும். தம்பதிகள் இடையே அன்பும், ஒற்றுமையும் மேலோங்கும்.

2 mukhi rudraksham

சுமூகமான உறவு

எந்த ஒரு மனிதனும் பிறருடன் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது. அப்படி வாழும் போது சக மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கையானது தான். 2 முக ருத்ராட்சம் சக மனிதர்களுடனான உறவுகளை மேம்படுத்தும் திறன் வாய்ந்தது. வியாபாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் இந்த இரண்டு முகம் ருத்ராட்சம் அணிந்து கொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

வயிறு சிறுநீரகம்

ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் பாதகமான நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு வயிறு மற்றும் சிறுநீரகங்கள் சார்ந்த குறைபாடுகள், நோய்கள் போன்றவை ஏற்படலாம். இத்தகைய பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள், இரண்டு முக ருத்ராட்சத்தை அணிந்து வருவதால் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் விரைவில் நீங்கி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.