Advertisement

இனி வீட்டிலேயே இந்த 3 சிரப்களையும் எளிதாக செய்து ஒரு வருடத்திற்க்கு பயன்படுத்தலாம்.

இனி வீட்டிலேயே இந்த 3 சிரப்களையும் எளிதாக செய்து ஒரு வருடத்திற்க்கு பயன்படுத்தலாம்.

Juice

வெயில் காலம் தொடங்கி விட்டது என்பதால், கலர்கலரான சர்பத் வீதிகளில், வண்டிகளில் வைத்து விற்கப்படும். சிலருக்கு அந்த வண்ணங்களை பார்க்கும்போதே அதை வாங்கி குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஆரோக்கியத்துக்கு கேடு என்பதால், அதை வாங்கி குடிக்காமலேயே விட்டுவிடுவார்கள். குழந்தைகள் கேட்டாலும் வாங்கித் தர மாட்டார்கள். சிலர் பெரிய பெரிய கடைகளில் விற்கும் சர்பத் சிரப்புகளை வாங்கி, பிரிட்ஜில் வைத்து, அந்த சர்பத் சிரப்பை பயன்படுத்தி, வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிப்பார்கள். இருந்தாலும் அந்த சிரப்புகளிலும் கண்டிப்பாக, கெட்டுப்போகாமல் இருக்க, கட்டாயம் ரசாயன பொருட்கள் கலந்து தான் இருக்கும். நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள, நாமே நம்முடைய வீட்டில் ஜூஸ் செய்வதற்கு தேவையான சர்பத் சிரப்பை தயாரித்து வைத்துக் கொண்டால்! எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த சிரப் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்றால் இன்னும் சந்தோஷமான விஷயம் தானே! நீங்களும் கெட்டுப்போகாமல் இருக்கும் அந்த சர்பத் சிரப்பை எப்படி தயாரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? தாராளமாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Watermelon juice

நன்னாரி சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

நன்னாரி வேர்  –  50 கிராம்

தண்ணீர்        –  1 1/2 லிட்டர்

சர்க்கரை   –  1 1/2 கிலோ

லெமன் சால்ட்  –   1/2 ஸ்பூன்

நன்னாரி வேரை நன்றாக தண்ணீரில் அலசி கழுவ வேண்டும். அதன்பின்பு மிக்ஸி ஜாரில் இந்த வேரை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். (நன்றாக அறைய வேண்டாம். ஒன்றும் இரண்டுமாக பொடி செய்து கொண்டால் போதும்.) அறைத்து வைத்திருக்கும் 50 கிராம் நன்னாரி வேரை முதல் நாள் இரவே 1 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அதாவது குறைந்த பட்சம் 8 மணி நேரம் தண்ணீரில், வேர் ஊற வேண்டும்.

அதன்பின்பு ஊற வைத்திருக்கும் வேரில் இருந்து நீரை மட்டும் வடிகட்டி, எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த நன்னாரி வேர் நீரை, 1 1/2 கிலோ சர்க்கரையில் ஊற்றி, நன்னாரி வேர் தண்ணீரில், சர்க்கரையானது நன்றாக கரைந்த பின்பு அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் காய்ச்சவேண்டும். இறுதியாக அரை ஸ்பூன் லெமன் உப்பை சேர்த்து  அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட வேண்டும். நன்றாக ஆறிய பின்பு, இறுதியாக ஒருமுறை வடிகட்டி விட்டால் போதும். உங்களுக்கு தேவையான சிரப் தயாராகிவிடும். இந்த சிரப்பை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாது.

Nannari Juice

நன்னாரி சர்பத் தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் தண்ணீரில், 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்து வைத்துள்ள சிரப்பை கலந்து, 4 ஐஸ் கட்டிகள் போட்டு, பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டாலே போதும். சுவையான ஆரோக்கியமான நன்னாரி சர்பத் ரெடி.

தர்பூசணி சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

தர்பூசணி    – ஒரு தர்பூசணியில் பாதி எடுத்துக் கொண்டால் போதும்

சர்க்கரை     – 1 1/2 கிலோ

லெமன் சால்ட் – 1/2 ஸ்பூன்

ஒரு முழு தர்பூசணியில் பாதி அளவு தர்பூசணியை தோலில் இருந்து தனியாக எடுத்து, அதை மிக்ஸியில் போட்டு அறைத்து வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளலாம்.  மத்துக்காம்பால் வைத்து இடித்தும், சாறை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். உங்கள் இஷ்டம் தான். ஆனால் அதில் உள்ள கொட்டைகள் மையக் கூடாது. பாதி அளவு தர்பூசணி பழத்திலிருந்து பிழிந்து சாறை எடுத்தாலே 1 லிட்டர் அளவு சாறு கிடைக்கும்.

Watermelon Juice

இந்த ஒரு லிட்டர் அளவு தர்பூசணி பழச்சாறோடு 1 1/2 கிலோ சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து விட்டு, அதன் பின்பு ஸ்டவ்வில் வைத்து, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடங்கள் கொதித்த பின்பு 1/2 ஸ்பூன் லெமன் உப்பு சேர்த்து, மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். மொத்தமாக இந்த சாறை 20 நிமிடங்கள் வரை கொடுத்தால் போதும். கொதிக்கும் போது, இடையிடையே கரண்டியை வைத்து இந்த கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடிபிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

20 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, நன்றாக ஆறிய பின்பு, மீண்டும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தர்பூசணி சிரப் தயார்.(அடுப்பிலிருந்து கீழே இறக்கும் போது இந்த சிரப் தண்ணீர் பதமாகத்தான் இருக்கும் நன்றாக ஆறிய பின்பு தான் எசன்ஸ் தன்மைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.)

தர்பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் தண்ணீரில், 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்த தர்பூசணி சிரப்பை ஊற்றி, 4 ஐஸ் கட்டிகள் போட்டு பாதி எலுமிச்சை பழ ஜூஸை பிழிந்து விட்டாலே போதும். சுவையான, ஆரோக்கியமான, கலரான தர்பூசணிசர்பத் ரெடி. பயப்படாமல் இதை குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம். ஆரோக்கியமானது தான்.

திராட்சை சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கருப்பு திராட்சை – 1/4 கிலோ

சர்க்கரை           – 1/2 கிலோ

தண்ணீர்           – 1/2 லிட்டர்

இந்த கருப்பு திராட்சையோடு, நாம் எடுத்து வைத்திருக்கும் அரை லிட்டர் தண்ணீரில் இருந்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அடுப்பில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த திராட்சையானது நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் ஊற்றி அறைத்து, திப்பி இல்லாமல் திராட்சை சாறு மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

Grape Juice

இந்த சாறோடு (1/2 லிட்டர் தண்ணீரில் இருந்து, மீதம் எடுத்து வைத்துள்ளோம் அல்லவா) மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து, அதன்பின்பு 1/2 கிலோ சர்க்கரையையும் சேர்த்து, நன்றாக கலந்த பின்பு, மீண்டும் அடுப்பில் வைத்து காய விடவேண்டும். 20 நிமிடங்கள் வரை மிதமான தீயில் அடுப்பில் காயவைக்க வேண்டும். இடையிடையே கரண்டியை வைத்து கலக்கிக் கொண்டே இருங்கள். இறக்குவதற்கு முன்பு இந்த சிரப் பிசுபிசுப்பு தன்மை அடைந்து விட்டதா? என்பதை பார்த்து விட்டு, அடுப்பிலிருந்து கீழே இறக்கி, நன்றாக ஆற வைத்து, மீண்டும் வடிகட்டி எடுத்தால் திராட்சை சிரப் தயார். ஒரு பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

திராட்சை ஜூஸ் தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்த திராட்சை சிரப்பை ஊற்றி, 4 ஐஸ் கட்டிகள் போட்டாலே போதும். அழகான, கலரான, ஆரோக்கியமான, கடையின் கிடைக்கும் திராட்சை பழசாறு தயார்.