நீங்கள் தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவது, சரியான அளவான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்த வழிகளாக இருக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்களும், உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படச் செய்யக்கூடிய ஒரு உடல் நல செயல்பாடாக நடைப்பயிற்சி இருக்கிறது. சமீப காலமாக இந்த நடைப்பயிற்சியில் புது வகையாக 8 வடிவ நடைபயிற்சி அதிக மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. நமது நாட்டின் சித்தர்கள் கண்டுபிடித்த இந்த 8 வடிவ பயிற்சி முறை மேலை நாடுகளுக்கு சென்று, “இன்பினிட்டி வாக்கிங்” என்ற பெயரில் நம் நாட்டிற்கே திரும்ப வந்துள்ளது. ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும் இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம்? அதனால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் என்ன? என்பதையே இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எட்டு வடிவ நடைபயிற்சியை காலை 5 முதல் 6 மணி வரையான நேரத்திலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையான நேரத்திலும் மேற்கொள்வதே சிறந்தது. 18 வயதை தாண்டிய எவரும் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம்.
8 வடிவ நடை பயிற்சியின் போதே வயிறு காலியாக இருக்க வேண்டியது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதாக இருந்தால் உணவு சாப்பிட்டு குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் கழிந்த பின்பே இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சியின் போது பலரும் உடற்பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை அணிந்து செல்கின்றனர். ஆனால் இந்த எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும். கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் குறைந்தது ஆறு மாத காலத்திற்கு இந்த 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஆறு மாத காலம் கழிந்ததும் மருத்துவரின் ஆலோசனை பெற்று எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது தான் என்றாலும் கர்ப்ப காலத்தில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனைகள், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர், இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும்.
8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.
உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது.
கழுத்து வலி, தோள்பட்டை வலி,முதுகு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி போன்ற உடலின் வலிகள் கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், முதுகெலும்பு டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி எனப்படும் கால் – கை வலிப்பு, இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா, சைனஸ், மூல நோய்கள், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நல குறைபாடுகளை 8 வடிவ நடைப்பயிற்சி குணமாக்கும்.
உயர் மற்றும் குறைந்தஇரத்த அழுத்தம் குறையும், காது கேட்கும் திறன் மேம்படும். பாத வெடிப்புகள் போன்றவை குணமாகும். முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையான தோற்றத்தையும், இளைய வயதினரை போன்ற மன உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். 8 வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.