தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் பயன்கள்
கிருமிநாசினி உணவு
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்து வெளிப்புற சுற்றுச்சூழல் அனைத்திலும் நுண் கிருமிகள் இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை தொற்றிக்கொண்டு உடல்நல பாதிப்புகளை உண்டாக்குகின்றன. தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமிநாசினியாக திகழ்கிறது. தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்வதோடு, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று ஏற்படாதவாறு காக்கிறது.
பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற
தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. மேலும் தேங்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் காக்கிறது. மேலும் பற்களுக்கு பளபளப்பு தன்மையையும் கொடுக்கிறது.
சரும நலம் மேம்பட
நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது. தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது.
தலைமுடி உதிர்வை தடுக்க
இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.
நார்ச்சத்து
நாம் தினமும் 3 வேளை சாப்பிடும் உணவுகளில் சிறிதளவாவது நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லா உணவுகளை காட்டிலும் தேங்காய் 61 சதவீதம் நார்ச்சத்து கொண்ட ஒரு உணவு பொருளாக இருக்கிறது. தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் இந்த நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. மேலும் உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கணையத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் உற்பத்தி செய்து உடலுக்கு மிகுதியான சக்தியை கொடுக்கிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது.
தொந்தியை கரைக்க
நம்மில் பலர் அன்றாடம் ஒரு வேளையாவது கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்கிறோம். சரியான உடற்பயிற்சி இல்லாமலும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கொழுப்புச் சத்து நாளடைவில் உடலில் அதிக அளவு சேர்ந்து கொண்டு தொந்தியை ஏற்படுத்துகிறது. மற்ற இடங்களில் படிகின்ற கொழுப்பை காட்டிலும் வயிற்று பகுதியில் படிகின்ற கொழுப்பு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதைத் தடுத்து, தொந்தி ஏற்படாமல் காக்கிறது. உடல் நலனை சீராக்குகிறது.
காக்காய் வலிப்பு குணமாக
எபிலெப்ஸி என்பது கால் கைகளில் ஏற்படும் வலிப்பு பிரச்சனை. இது காலப்போக்கில் மருவி காக்காய் என தமிழில் அழைக்கத் தொடங்கினர். இந்த கால் – கை வலிப்பு என்பது நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகும் ஒரு குறைபாடாகும். குறிப்பாக ஒன்று முதல் பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளில் இந்த குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கீட்டோன் சத்து குறைபாடு என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் சத்து குறைவாகவும் அதே நேரம் நன்மை தரும் கொழுப்பு சத்து அதிகமுள்ள ஒரு இயற்கை உணவாக தேங்காய் இருக்கிறது. தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலில் கீட்டோன் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, கால் கை வலிப்பு நோய் குறைவதற்கு பெருமளவு உதவுகிறது.
இளமை தோற்றம் ஏற்பட
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, அளவுக்கு மீறிய உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இளம்வயதிலேயே உடலளவில் முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தேங்காயை அடிக்கடி மென்று தின்ன வேண்டும். தேங்காயில் சைட்டோகைனின், கைநெட்டின் டிரான்ஸ் – சீட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. இவை நமது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக பராமரித்து, உடலுக்கு பலத்தை தருவதோடு இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக
மனிதர்களிலேயே மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி கூடிய நோய்களில் ஒன்று சிறுநீரக தொற்று நோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டால் சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, அந்த நபர் ஒருவரை பாதிக்கப்பட்டு ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. தேங்காயில் கிருமி நாசினி வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த சிறுநீரக தொற்று நோய் படிப்படியாக குறைந்து சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் அனைத்தும் மீண்டும் பழைய ஆரோக்கியத்தை பெறுவதற்கு உதவுகிறது.
நீர்சத்து
கோடைக்காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்புச் சத்து இழப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இக்காலங்களில் உடலில் நீர் சத்து மிகுதியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தேங்காய் ஒரு சிறந்த நீர்ச்சத்தை வழங்கும் ஒரு உணவாக இருக்கிறது. தேங்காயில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசிய தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அடிக்கடி தேங்காயை மென்று தின்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.