Advertisement

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயம் நம் சமையலில் அன்றாடம் கட்டாயம் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவேண்டிய ஒரு முக்கிய பொருள். வெந்தயத்தின் சுவை கசப்பாக இருந்தாலும், சிலவகையான குழம்பு வகைகளுக்கு, அதிக சுவை கூட்டுவதாக இது அமைகிறது. இந்த சிறு வெந்தயமானது சுவைக்காக மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது. வெந்தயத்தின் மகத்தான பயன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

 Venthayam

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்

மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நீர் சத்து, புரதச் சத்து போன்றவை வெந்தயத்தில் அடங்கியுள்ளது. இது தவிர சுண்ணாம்புச்சத்து, சோடியம் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாது பொருட்களும், ரிபோபிளேவின், தயாமின், வைட்டமின் ஏ, போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.

பிரசவ வலியை குறைக்க

பிரசவ காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியினை கட்டுப்படுத்த வெந்தயம் உதவியாக உள்ளது. பெண்களின் கருப்பையை சுருக்கி, குழந்தை பிறப்பதற்கு தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் பெண்கள் கர்ப்பகாலத்தில் வெந்தயத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கருசிதைவு அல்லது குறை பிரசவம் உண்டாக வாய்ப்பு உள்ளது.

 Venthayam

தாய்ப்பால் சுரக்க

வெந்தயத்தில் உள்ள டையோஸ்ஜெனின் என்ற வேதிப்பொருள் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தை சிறிதளவு சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் பால் அதிகமாக சுரக்கும்.

பெண்களின் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள

பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் சில உபாதைகள் ஏற்படும். இந்த உபாதைகளை குறைக்க வெந்தயம் உதவியாக உள்ளது. முதன்முதலில் மாதவிடாய் ஏற்படும் சமயத்திலும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு உடம்பில் ஏற்படும் சூட்டை தணிக்கவும், மனநிலை மாற்றத்தை சரி செய்யவும் வெந்தயத்தை சிறிதளவு வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

 Venthayam

பெண்களின் மார்பகம் ஆரோக்கியமாக இருக்க

வெந்தயமானது பெண்களின் ஹார்மோன்களை தேவையான அளவில் சுரக்கச் செய்து, மார்பகங்கள் சரியான அளவில் ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறது.

இதய அடைப்பை தவிர்க்க

வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் சத்தினால் நம் இதயத்துடிப்பும், ரத்தக் கொதிப்பும் சீராக இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது இதய அடைப்பை வரவிடாமல் தடுக்கிறது. வெந்தயத்தை சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை, இவைகள் அனைத்தையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு நீருடன் தேன் கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை நீங்கும்.

 Venthayam

கொலஸ்ட்ராலை குறைக்க

நம் உடலில் உள்ள கொழுப்புப் புரதத்தை இது குறைப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் உடலின் எடையை குறைக்கலாம்.

சக்கரை நோய் கட்டுப்படுத்த

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அமினோ அமில சத்து வெந்தயத்தில் இருப்பதால், இன்சுலின் சுரப்பியை நம் உடலில் சீராக வைக்கிறது. இரவு நேரங்களில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, விடிந்ததும் தண்ணீருடன் சேர்ந்த வெந்தயத்தை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சர்க்கரை அளவு குறையும்.

செரிமானத்தைத் தூண்டும்

சில சமயங்களில் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை நீக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகத்தை சீராக வெளியேற்றுகிறது. நம் உடம்பை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. நன்றாக பசிக்கும் தன்மையை கொடுக்கும் நரம்புகளை பலப்படுத்தும்.

வயிற்று கடுப்பு

சூட்டினால் சில சமயங்களில் திடீரென்று ஏற்படும் வயிற்று வலியாக இருந்தாலும், வெந்தயத்தை வறுத்து நீர் விட்டு காய்ச்சி, சிறிதளவு தேன் கலந்து அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது வெந்தயத்தை பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். இப்படி செய்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

Venthayam

சீதபேதியை நிறுத்தும்

20 கிராம் அளவிற்கு வெந்தயம் எடுத்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் இடித்த வெல்லத்தை 50 கிராம் சேர்த்து பிசைந்து ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் சீதபேதி நிற்கும். சிறிது வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து நீர் மோராக குடித்தாலும் குணமாகும்.

நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும்

வெந்தயத்தில் இருக்கும் பசை தன்மையானது உங்கள் வயிற்றில் உள்புறத்தில் சூழ்ந்து கொள்வதால் எரிச்சலை உண்டாக்கும் குடல் தசைகளை சரி செய்கிறது. நம் உணவினை தாளிக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொள்வதால் நெஞ்செரிச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

 Venthayam-powder

காய்ச்சலைக் குறைக்க

வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவைகளை நீரில் கலந்து குடிக்க காய்ச்சல் குறையும். உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெறும். வெந்தயத்தில் உள்ள பசை தன்மையானது இருமலையும் குறைக்கிறது.

சரும அழகை பாதுகாக்க

நீரில் ஊறவைத்த வெந்தயத்தை நன்றாக அரைத்து நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள காயத்தின் மீது பயன்படுத்தலாம். தீக்காயம், கொப்பளம் பிரச்சினைகளை இது தீர்க்கிறது. நீண்ட நாட்களாக மறையாமல் இருக்கும் தழும்புகள் கூட மறையும்.

 Venthayam

முக அழகிற்கு

வெந்தயத்தை ஊறவைத்து தயிருடன் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து ஃபேஸ் பேக்காக உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவாகும்.

தலை முடி பிரச்சனைக்கு தீர்வு

வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து தலையில் நன்றாக மசாஜ் செய்து குளித்து வர தலைமுடி வழுவழுப்பாகவும் கருமையாகவும் மாறும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெந்தயத்துடன் சேர்த்து தேங்காய் எண்ணெயை தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வு குறையும்.