கருணைக்கிழங்கு சாப்பிட்டால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?
மனிதன் உண்ணும் உணவு வகைகளில் தாவரங்களிலிருந்து கிடைக்கும் காய், கனிகள் போன்று கிழங்குகளும் ஒரு உணவாக இருக்கிறது. பூமிக்கு அடியில் விளைவதால் இவை இன்னும் அதிக உயிர்ச்சத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நமது நாட்டில் பரவலாக அதிகம் உண்ணப்படும் கிழங்கு வகையான கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கருணைக்கிழங்கு நன்மைகள்
எலும்புகள்
நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
பித்தம்
உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை சிலருக்கு ஏற்படுகிறது. கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.
பசியின்மை
ஒவ்வொரு மனிதனுக்கும் சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பசியுணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும். ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. கருணை கிழங்கு பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும். வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சீராக்குவதோடு, பசியின்மை பிரச்சனையை தீர்க்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகள்
மாதவிடாய் என்பது பெண்களாய் பிறந்த அனைவருமே தங்களின் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. இச்சமயங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
மூலம்
மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக கருணை கிழங்கு இருக்கிறது. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.
உடல் எடை குறைய
அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது. தினம் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வெகு சீக்கிரத்தில் குறைவதை காணலாம்.
இதயம்
நீண்ட நாட்கள் வாழ நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சுகின்ற இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். கருணை கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.
ஊட்டச்சத்து
கிழங்கு வகைகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தேவையான சத்துகளை தருவதாக இருக்கிறது. கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
புற்று நோய்
இன்று உலகெங்கிலும் ஏற்படும் புற்றுநோய்களில் வயிறு மற்றும் இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. எனவே வயிறு, இரைப்பை புற்று ஏற்படாமல் தடுக்க உணவில் கருணைக்கிழங்கு அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
செரிமானமின்மை
நமது உடலின் செரிமான திறன் சீராக இருந்தாலே பெரும்பாலான நோய்கள் ஏற்படாமல் தடுத்து விட முடியும். சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை ஏற்படுகிறது. செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக கருணை கிழங்கு இருக்கிறது. எனவே இந்த கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் வெகு விரைவில் தீரும்.