Advertisement

இலுப்பை எண்ணெய் நன்மைகள்

இலுப்பை எண்ணெய் நன்மைகள்

நமது நாட்டில் மருத்துவ குணம் கொண்ட பல அற்புதமான மூலிகைகள், செடிகள், மரங்கள் குறித்து சித்தர்கள் தங்கள் எழுதிய சித்த மருத்துவ குறிப்புகளில் கூறியுள்ளனர். “ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை” என ஒரு தமிழ் பழமொழி உண்டு. இனிப்பு சுவை கொண்ட இலுப்பை மரத்தின் அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை விதைகளிலிருந்து “இலுப்பை எண்ணெய்” எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

இலுப்பை எண்ணெய் நன்மைகள்

விரை வீக்கம்

ஆண்கள் சிலருக்கு அவர்களின் விரைப்பைகளில் நீர் அதிகம் சேர்ந்து கொள்வதால் ஹைட்ரொசீல் எனப்படும் விரைவீக்கம் ஏற்படுகிறது. இப்பிரச்சனையை தீர்க்க ஆங்கில வழி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போதே இலுப்பை எண்ணையை சிறிது அனலில் காட்டி இளஞ்சூட்டில் அந்த எண்ணையை விரல்களின் மீது தடவி வர விரைவீக்கம் குணமாகும். குறைந்தது 4,5 தடவைகள் செய்தால் விரைவில் வீக்கம் குறையும்.

நரம்பு குறைபாடுகள் 

உடலை கடுமையாக வருத்தி உழைக்கும் சிலருக்கு உடல் முழுவதும் வலி மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளை அதிகமாகிறது. இப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

சருமம் 

சருமத்தின் நலனை பாதுகாப்பதில் இலுப்பை எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இலுப்பை எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போகும் சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. வாரமொரு முறை இலுப்பை எண்ணெய் உடல் முழுவதும் பூசி, அது நன்கு ஊறிய பின்பு குளித்து வருவதால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும்.

பூச்சி கடி 

நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவிவிடுகிறது. இலுப்பை எண்ணையை பூச்சி கடித்த இடங்களில் நன்கு தடவி விடுவதால் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறியும். எரிச்சல் மற்றும் வீக்கமும் குணமாகும்.

வயிற்று பிரச்சனைகள் 

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளாலும், உடல் உஷ்ணம் மற்றும் சுற்றுப்புற வெப்ப நிலை அதிகரிப்பால் ஒரு சிலருக்கு சாதாரண வயிற்று போக்கு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் அல்லது கிருமிகள் தொல்லை உண்டாகிறது. இலுப்பை எண்ணெயின் சில துளிகளை தினமும் காலையில் சாப்பிடுவதால் வயிறு சுத்தமாகி, அதில் ஏற்படும் அத்தனை நோய்களையும் தீர்க்கிறது.

கண்பார்வை 

கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாலும் மற்றும் அதிக நேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது தலைக்கு இலுப்பை எண்ணையை நன்கு தேய்த்து வந்தால் தலையில் சேரும் அதீத உஷ்ணத்தை குறைத்து கண்பார்வையை தெளிவாக்கும்.

மலச்சிக்கல் 

ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு சில துளி இலுப்பை எண்ணெயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் தீரும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா என்கிற நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்பட்டவர்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதை சரிசெய்வதற்கு தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு இலுப்பை எண்ணெய் மூன்று துளிகளுடன் தேன், வெள்ளைப் பூண்டுச் சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.

காச நோய் 

காச நோய் என்பது ஒருவகை கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு நோயாகும். இக்கிருமிகள் நோயாளிகளின் நுரையீரலில் தங்கி, நுரையீரல்களை பாதித்து, நோயாளிகளுக்கு தொடர்ந்து இருமல் ஏற்பட்ட வாறே இருக்கச் செய்கிறது. காச நோயாளிகள் ஆங்கில வழி மருந்தை சாப்பிடுவதோடு, அடிக்கடி சில துளிகள் இலுப்பை எண்ணையை அருந்தி வருவர்களேயானால் அவர்களின் நுரையீரலில் இருக்கும் காச நோய் கிருமிகள் அழியத்தொடங்கி, சிறிது சிறிதாக அந்நோயிலிருந்து விடுபடுவர்.

ஆன்மீக பயன் 

இலுப்பை மரம் ஒரு தெய்வீக தன்மை வாய்ந்த மரமாக சித்தர்களால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்களை கொண்ட இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய் கொண்டு வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் வீடுகளில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறி வீட்டில் மங்களங்கள் பெருகச் செய்கிறது.