Advertisement

கோடை வெப்பத்தை எதிர்கொள்வதற்கான ஆரோக்கிய குறிப்புக்கள் இதோ

கோடை வெப்பத்தை எதிர்கொள்வதற்கான ஆரோக்கிய குறிப்புக்கள் இதோ

ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருகிறது என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அந்த மாதம் அக்னி நட்சத்திர காலம் என்பது தான். இயற்கையின் கால வெள்ளத்தில் கோடை காலமும் ஒன்று என்றாலும், ஒவ்வொரு வருடமும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பமானது அதிகரித்தபடியே செல்கிறது. இக்காலத்தில் நாம் அனைவரும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வதால் கோடை காலத்தில் ஏற்படுகின்ற உடல் உபாதைகள், நோய்கள் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். கடுமையான வெயில் சுட்டெரிக்கும் இக்காலத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் கோர வெப்பமானது காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நீடிக்கிறது எனவே இந்த நேரங்களில் வெளியில் அதிகம் நடமாடுவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் வெளியில் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் காலை பத்து மணிக்குள்ளாக தங்களின் வேலைகளை முடித்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. வெப்பம் மிகுந்த நேரங்களில் தொடர்ந்து நடமாடும் நிலையில் இருப்பவர்கள் அவ்வப் போது இயற்கையின் கொடையான மர நிழல்களில் சற்று ஓய்வெடுத்து செல்வதால் உடல் புத்துணர்வு பெறும்.

கோடை வெயில் காலத்தில் வியர்வை அதிகம் ஏற்பட்டு உடலில் இருந்து அதிகம் நீர் சத்து வெளியேறுகிறது. எனவே இத்தகைய காலங்களில் செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகளைத் தவிர்த்து, தூய்மையான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. பருத்தி ஆடைகள் உடலுக்கு காற்றோட்டத்தை தந்து உடல் அதிக வெப்பம் அடையாமல் தடுக்கிறது.

hat

வெயில் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தலைக்கு வெள்ளை நிறத்திலான தொப்பி அணிந்து கொள்ள வேண்டும் அல்லது பருத்தியால் ஆன ஒரு மிகப் பெரிய துண்டை எடுத்து, தலை மற்றும் பின் கழுத்து பகுதியை மறைக்கும் வகையில் கட்டிக்கொள்ள வேண்டும். இது தலை அதிகம் உஷ்ணமடையாமல் பாதுகாக்கும்.

வெயில் காலம் வந்தாலே ஆங்கங்கே சாலையோரங்களில் குளிர் கண்ணாடிகள் விற்கும் கடைகள் முளைப்பதை நாம் காணலாம். சாலையோரங்களில் விற்கப்படும் இத்தகைய குறைந்த விலை கண்ணாடிகளை வாங்கி அணிந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க ஒரு நல்ல கண் மருத்துவரிடம் சென்று கண்களை பரிசோதித்து, உங்கள் கண்களின் தன்மைக்கு ஏற்ப வெயிலின் தீமையான கதிர்களை தடுக்கும் ஆற்றல் கொண்ட தரமான குளிர் கண்ணாடிகளை வாங்கி அணிய வேண்டும்.

sun glass

வெயில் காலங்களில் சிலர் வெளியில் நன்கு நடமாடி விட்டு வீட்டிற்கு வந்த உடனே குளிர் சாதன பெட்டியில் இருக்கும் குளிர்ந்த நீரை உடனே குடிக்கும் வாடிக்கை கொண்டிருக்கின்றனர். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற ஒரு செயலாகும். அதற்கு மாறாக மண்பானை தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும்.

கடுமையான வெயில் அடிக்கின்ற அக்னி நட்சத்திர காலத்தில் வியர்வை அதிகம் ஏற்படுவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இக்காலங்களில் அடிக்கடி பழங்கள் சாப்பிடுவது, சுத்தமான நீரை அடிக்கடி அருந்துவதன் மூலம் உடலில் எப்போதும் நீர் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

fruits

கோடைக்காலங்களில் காரம், புளிப்பு போன்றவை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளையும், மாமிச உணவுகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் வெயில் காலங்களில் பலருக்கு செரிமானமின்மை, மலச்சிக்கல் மற்றும் இன்ன பிற வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள், உணவுகளை கோடைகாலங்களில் அதிகம் சாப்பிட வேண்டும்.

சிலர் செய்யும் வேலை நிமித்தமாக இரவில் நெடுநேரம் கண் விழிக்கும் நிலை ஏற்படுகிறது. கோடைக் காலங்களில் பகல் நேரத்தில் இருக்கும் வெப்பம் உடலை சூடு படுத்துவதோடு, இரவிலும் நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதால் உடல் மேலும் உஷ்ணமடைந்து பல நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே கோடை காலங்களில் சீக்கிரமாகத் தூங்கி, அதிகாலையில் எழுவது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.

Jogging

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்பவர்கள் கோடைக்காலங்களில் அதிகாலையிலேயே எழுந்து இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தை தருகிறது. சூரிய ஒளி வருவதற்கு முன்பே இத்தகைய பயிற்சிகளை செய்வதால் உடல் அதிக உஷ்ணம் அடைவதையும், களைப்ப டைவதையும் தடுக்கிறது.

வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தைப் போக்க ஆண்களும், பெண்களும் வாரத்திற்கு ஒருமுறை எண்ணை குளியல் செய்வது சிறந்தது. இந்த எண்ணைக்குளியலை முறைப்படி மேற்கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, ஏற்கனவே உடலில் இருந்த பாதிப்புகளை போக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. உடல் மற்றும் மன இறுக்கங்களை போக்கி தளர்வடைய செய்கிறது.