தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
மனிதர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையாக நிலக்கடலை இருக்கிறது. இதை வேர்க்கடலை என்றும் கூறுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிலக்கடலை தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலை அதிகம் உண்கின்றனர். இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நிலக்கடலை பயன்கள்
குடல் புற்று நோய் குணமாக
புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்பபடமால் பாதுகாக்கிறது. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நிலக்கடலை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக அமெரிக்க மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
மூளை திறன் அதிகரிக்க
மனிதனின் அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை உறுப்பாக மூளை இருக்கிறது. தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடும் நபர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்குதடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் வேதிப்பொருட்கள் இருப்பதால் மிக வலுவான ஞாபக சக்தியை கொடுக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயலாற்ற உதவி செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்காலங்களில் ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் வெகுவாக குறைப்பதாகவும் அந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
அல்சைமர் ஏற்படாமல் தடுக்க
அல்சைமர் என்பது முதுமை அடைந்த நபர்களுக்கு ஏற்படும் தீவிர ஞாபக மறதி நோயாகும். இந்த நோய் நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலும், மேலை நாடுகளில் மிக அதிக அளவில் ஏற்படுகின்ற ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக மூளைக்குத் தேவையான சத்துக்கள் இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவது என கூறப்படுகிறது. நிலக்கடலையில் நியாசின் அமிலம் அதிகமிருக்கிறது. நிலக்கடலையை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு ஞாபக சக்தி வலுவடைவதோடு, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கிறது. மேலும் அந்நபருக்கு 70 சதவீதம் வரை இந்த அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எக்சிமா, சோரியாசிஸ் நோய்கள்
எக்சிமா மற்றும் சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதிகள் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பரம்பரை காரணங்கள், உடலில் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் மேற்கூறிய வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த நோய்களின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இருக்கிறது என்றாலும் முழுமையாக குணப்படுத்துவதற்கான மருந்துகள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இத்தகைய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதே சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது. நிலக்கடலையில் தீங்கில்லாத கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் அதிகம் நிறைந்தி ருக்கின்றன. தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் மாற்றங்கள் ஏற்படுவதை தடுத்து, மேற்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
தலைமுடி உதிர்வு தடுக்க
உலகம் முழுவதும் இருக்கின்ற இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்கள், பெண்களுக்கு தலை முடி உதிர்வு ஒரு கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைவு மற்றும் உடலில் சுரக்கின்ற ஹார்மோன்களின் காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. நிலக்கடலையில் வைட்டமின் பி சத்து வகையை சார்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த பயோட்டின் தலை முடியின் ஆரோக்கியத்தை காப்பதோடு, அதிக அளவில் முடி உதிர்வதை தடுக்கிறது. முடி உதிர்ந்த இடங்களிலும் மீண்டும் முடி வளர செய்ய தூண்டுகோலாகவும் செயல்படுகிறது.
தசைகள் பலம் பெற
நாம் அன்றாடம் சாப்பிடும் பல வகையான உணவுகளில் உடலில் தீங்கு ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் சத்து குறைந்த அளவிலாவது இருக்கிறது. நிலக்கடலை மட்டுமே தீங்கான கொழுப்புச்சத்து அதிகம் இல்லாமலும் அதே நேரத்தில் உடலுக்கு நன்மை செய்யும் புரதச் சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. தினமும் நிலக்கடலையை சிறிதளவு சாப்பிடுபவர்களுக்கு உடலின் தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் நமது உடலில் இருக்கின்ற எண்டோக்ரைன் சுரப்பிகளை நன்றாக இயங்க செய்து உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு பேருதவி புரிகிறது.
குழந்தைகளுக்கான உணவு
வளரும் குழந்தைகளுக்கு உணவில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தீங்கில்லா கொழுப்பு அமிலங்கள் இருப்பது அவசியமாகும். நிலக்கடலையில் மேற்கூறிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிரம்பியிருக்கின்றன. நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. வயதிற்கேற்ற உடல் எடையையும் கொடுக்கிறது.
மன அழுத்த பிரச்சனை குணமாக
வேகமாக வாழ்க்கை முறையால் தற்போது உலகெங்கிலும் மக்கள் பலருக்கும் மன அழுத்த பிரச்சனை அதிகம் ஏற்படுவதாக சர்வதேச மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த உணவாக நிலக்கடலை இருக்கிறது. நிலக்கடையில் ட்ரிப்டோபன் எனப்படும் வேதிப்பொருள் அதிகமுள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக இருக்கிறது. மேலும் இந்த ட்ரிப்டோஃபேன் மனிதர்களின் மூளையில் செரோடோனின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. இந்த செரோடோனின் மனிதர்களின் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி உண்டாக செய்கிறது.
பித்தப்பை கற்கள் கரைய
நமது உடலின் செயல்பாடுகளுக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பித்தநீரை சுரக்கும் பணியை பித்தப்பை செய்கிறது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடும் போது சிலருக்கு இந்த பித்தப்பை கல் பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்கள் ஏற்பட கூடாது என நினைப்பவர்கள் அடிக்கடி நிலக்கடலைகளை சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதால் பித்தப்பை சீராக இயங்க உதவுகிறது. மேலும் அப்பித்தபையில் நச்சுகள் மற்றும் கொழுப்புக்கள் படியாமல் தடுத்து பித்தப்பை கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.