கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
காலை மற்றும் மாலை வேளைகளில் உடலும் மனமும் உற்சாகமடைய அருந்துவதற்கு பல பானங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தேநீர். அதில் ஒரு வகை தான் கிரீன் டீ. தேயிலைகளை அதிகம் ரசாயன முறையில் பதப்படுத்தாமல், இயற்கையான குணங்கள் நீங்காமல் தயாரிக்கப்படுகிறது இந்த கிரீன் டீ இலைகள். சூடான நீரில் கிரீன் டீ தூளை போட்டு, சர்க்கரை கூட கலந்து கொள்ளாமல் கிரீன் டீ பருகுவதே சிறந்தது. இந்த கிரீன் டீ தயாரிப்பது எப்படி, குடிக்கும் முறை மற்றும் கிரீன் டீ அருந்துவதால் கிடைக்கும் மருத்துவ பயன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கிரீன் டீ தயாரிப்பது எப்படி :
கிரீன் டீ பவுடரை பல பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக கிரீன் டீ இலைகளை வாங்குவதே சிறந்தது. கிரீன் டீ இலைகளை நீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்துவது நல்லது.
கிரீன் டீ குடிக்கும் முறை
நமக்கு தேவையான போதெல்லாம் க்ரீன் டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முறை க்ரீன் டீ குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்க கூடாது. அப்படி குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு உண்ட பிறகு 30 – 40 நிமிடங்கள் கழித்து க்ரீன் டீ குடிப்பதே நல்லது. அதே போல இரவு உறங்குவதற்கு முன்பு க்ரீன் டீ குடித்துவிட்டு உரக்கச் செல்ல கூடாது.
கிரீன் டீ நன்மைகள்
உடல் எடை
கிரீன் டீ உடல் பருமன் கொண்டவர்களுக்கும், உடல் எடை குறைக்க முயல்பவர்களுக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை சூடான நீரில் தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் தடுத்து, அதை உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக மாற்றி, உடல் எடை கூடுவது உடல் பருமன் அடைவது போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
கொலஸ்ட்ரால்
கிரீன் டீயில் இருக்கும் சில ரசாயனங்கள் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலின் இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை சீர்படுத்தி, உடலுக்கு நன்மையை அளிக்க செய்கிறது. ஆக மொத்தம் உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சேர்மானத்தை சமசீரான அளவில் வைக்கிறது.
புற்று நோய்
இன்று உலகெங்கிலும் அதிகளவில் மக்கள் பல வகையான புற்று நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். கிரீன் டீ பருகுபவர்களுக்கு அந்த தேயிலைகளில் இருக்கும் “பாலிபெனால்” எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று, அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதய நோய்கள்
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலிருக்கும் “கேட்டச்சின்” எனும் வேதிப்பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பக்கவாதம்
கிரீன் டீ தினந்தோறும் அருந்தி வருபவர்களுக்கு மூளை நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படும் வாதம், பக்கவாதம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உடலில் உள்ள நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கிரீன் டீ உதவுகிறது.
நீரிழிவு
நீரிழிவு நோய் அல்லது குறைபாடில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு இருக்கின்றன. இதில் இரண்டாம் நிலை நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பலன் கிரீன் டீ அருந்துபவர்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உடல் சக்தியும் இந்த தேநீர் அருந்துவதால் கிடைக்கிறது.
தோல் நோய்கள்
தலையில் பொடுகு மற்றும் தோல் நோயான சோரியாசிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்த போது, அவர்களின் அந்த குறைபாடுகளின் தீவிரம் குறைந்து தோல் நிறம் மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டதாக அமேரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஞாபகத்திறன்
கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தேயிலையில் இருக்கும் மூலப்பொருட்கள் மூளையில் இருக்கும் செல்களை தூண்டி, ஞாபகத்திறனை மிகுதியாக மேம்படுத்துகிறது. “அல்சைமர்” எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள்.
பல் நோய்கள்
கிரீன் டீயில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் எப்பகுதியிலும் இருக்கும் கிருமிகளை அழிக்கவல்லது. அதிலும் குறிப்பாக பல் சொத்தை மற்றும் அது ஏற்படுவதற்கு காரணமான பல் ஈறுகள் மற்றும் பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகளை அழித்து பற்களை பாதுகாக்கிறது.
சுறுசுறுப்பு
கிரீன் டீ அதிகம் அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் பிராணவாயு மூலக்கூறுகளை அதிகம் தூண்டி, உடலும் மனமும் உற்சாகமடைய செய்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் சக்தியை தருகிறது.