க்ரீன் டீ தெரியும். அதென்ன ப்ளூ டீ?
பல வகையான டீ வகைகள் இருந்தாலும் அதில் நம் எல்லோருக்கும் ‘க்ரீன் டீ’ என்றால் நன்கு தெரியும் அல்லவா? ஆனால் ‘ப்ளூ டீ’ தெரியுமா? சிலர் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கலாம். நம்மில் பலருக்கு ‘ப்ளூ டீ’ பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை தானே? அதென்ன ப்ளூ டீ? என்று கேள்வி கேட்பவர்களுக்கான பதிவு தான் இது.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க காலம் காலமாக பழகி வந்த டீ, காபி போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தையே நாம் மாற்றி கொண்டு வருகிறோம். உடல் எடையை சீராக வைத்து கொள்ள ‘க்ரீன் டீ’ பெரும் துணை புரிகின்றது. தினமும் காலையில் க்ரீன் டீ பருகுவதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியே தள்ளி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கும். தினமும் இதை பருகுவது ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் போக போக பழகி கொண்டு விடலாம். நம் ஆரோக்கியம் நம் கையில் தான் உள்ளது.
ப்ளு டீயில் ‘ஆன்டி-க்ளைகேஷன்’ இருப்பதால் வயது முதிர்வை தடுக்கிறது. இதனால் நம் இளமையை பாதுகாத்து கொள்ள முடியும். தலையில் இருக்கும் நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடிய வகையில் உடலில் இருக்கும் சர்க்கரையை சீராக வைத்து கொள்ள உதவி செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதில் இருக்கும் ‘ஃப்ளேவனாய்ட்ஸ்’ புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறதாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பல விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பாகவும் வைக்கிறது. அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு கஷ்டப்படும் நபர்களுக்கு இந்த ப்ளூ டீ பெரிதும் உதவும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும் ஆற்றல் ப்ளூ டீக்கு உண்டு.
வேலைபளு காரணமாக நேராநேரத்திற்கு சாப்பாடு சரியாக சாப்பிட முடியாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய நோய்களில் குடற்புண் என்பதும் ஒன்றாக இருக்கிறது. இந்த ப்ளூ டீயை பருகுவதால் குடற்புண் நோயிலிருந்து குணமடையலாம் என்கிறது ஆய்வுகள். அஜீரணத்தை சரி செய்கிறது. மேலும் வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்பத்தை சீராக வைத்து கொள்ளவும் துணை புரிகின்றது. உடலில் வெப்பம் சீரற்ற நிலையில் இருக்கும் போது நம்மால் எதையும் சுறுசுறுப்புடன் செய்ய இயலாமல் போகிறது. முக்கியமாக அதிகமான மன அழுத்தத்தை எதிர்த்து உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும்.
அதெல்லாம் சரிதான் ஆனால் ப்ளூ டீ எதை கொண்டு தயாரிக்கபடுகிறது? என்று கேட்டால் அதன் பதில் தான் நம்மை ஆச்சரியபட வைக்கிறது. ஒவ்வொரு பூக்களுக்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு. அப்படி அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட நீல நிற சங்கு பூ கொண்டு தான் இந்த ‘ப்ளூ டீ’ தயாரிக்கபடுகிறது. ப்ளூ டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?
க்ரீன் டீ தயாரிப்பது போன்றே இந்த ப்ளூ டீ யும் தயாரிக்க வேண்டும். மிகவும் சுலபமாக தயாரித்து விடலாம். கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ செய்து பருகலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி இதனை எடுத்து கொள்ளக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.