ஆப்ரிகாட் பழத்தின் பயன்கள்
நாம் உண்ணும் பழவகைகள் உடம்பிற்கு பல வகையான சத்துக்களை தருகின்றது. நம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டியது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழ வகைகளில் ஒன்றான ஆப்ரிகாட் பழத்தை பற்றியும், அதில் உள்ள மருத்துவ குணம் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்தப் பழங்கள் ஆரம்ப காலத்தில் ஆர்மேனியாவிலிருந்து கிரேக்கர்களால், ஐரோப்பியாவிற்க்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்தப் பழத்திற்கு தாய் நாடு சீனா தான். காலப்போக்கில் துருக்கி, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, கிரீஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பழம் ஆரஞ்சு நிறத்திலும் புளிப்பு சுவையும் கொண்டது. நன்கு பழுத்த ஆப்ரிகாட் பழங்களையே மருத்துவத்திற்கு உபயோகப்படுத்துகின்றனர்.
இந்தப் பழத்தில் விட்டமின் A, C, E, K விட்டமின் B1, B2, B3, B5, B6, கால்சியம், மெக்னீசியம், அயன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்கா ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
கண் பார்வைக்கு
இந்த பழத்தில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இந்தப் பழத்தினை 2 அல்லது 3 பழங்களை தூங்குவதற்கு முன்பு இரவு நேரத்தில் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து ரத்தத்தில் உள்ள நல்ல செல்கள் அழியாமல் தடுக்கவும் உதவி செய்கின்றது. மலை வாழைப்பழம் 1, ஆப்ரிகாட் பழம் 4 இவைகளை சிறிதாக நறுக்கி அதில் அரை கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்து, இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டுவந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நம் உடலின் தோலானது வறண்ட தன்மையிலிருந்து நீங்கி மெருகேறும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த ஆப்ரிகாட் பழத்தினை இட்லித் தட்டில் வைத்து ஆவியிலும் வேக வைத்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் வேக வைத்துக் கொள்ளலாம். பின்னர் பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த ஆப்ரிகாட் பழங்களை நன்றாக மசித்து இந்த பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தோல் நோயை நீக்கும்
இதிலுள்ள விட்டமின் ஏ, முகத்தில் உள்ள முகப்பருவை நீக்கவும் நம் தோலில் வரும் தொற்று நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
புற்றுநோயை தடுக்கும்
இந்த பழத்தில் உள்ள கரையாத நார்ச்சத்து நம் உடலில் உள்ள நீரை உறிஞ்சி, நம் உடலில் இருந்து வெளியேறும் மலத்தின் தன்மையை மிருதுவாகின்றது. இதனால் மலம் நம் உடலிலிருந்து சுலபமாக வெளியேறிவிடுவதால் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கலாம். பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதற்கும், குடல் புழுக்களை அழிக்கவும் இந்தப் பழம் பயன்படுத்தப்படுகிறது.
உடல் எடையை குறைக்க
கரையாத நார்ச்சத்து நம் உடலில் இருப்பதால் பசியின் தன்மை ஏற்படாது. 4 லிருந்து 6 மணி நேரம் வரை வயிறு நிரம்பிய உணர்வினை நம்மால் உணர முடியும். உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகமாக சாப்பிடுவதை இதன் மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும். இது நம் உடல் எடையை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
இந்தப் பழத்தினை உண்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இதில் உள்ள ஏராளமான தாதுப்பொருட்களினால் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய்,
இரத்தசோகை போன்ற பிரச்சனைகளையும் வராமல் தடுக்கலாம்.
இதய நோயை தடுக்க
இந்தப் பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள், நம் உடலில் உள்ள எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பை நீக்குகின்றது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
நரம்புகளை வலுப்படுத்தும்
இந்த பழத்தில் உள்ள வானிலிக் என்ற அமிலமும், ரூப்பின் என்ற நறுமண எண்ணெயும், நமக்கு ஏற்படும் கை கால் வலியை நீக்குகிறது. இதிலுள்ள ட்ரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகிறது.