Advertisement

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் வெங்காயம். சமையலின் ருசியை கூடுதலாக்க இந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறோம் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வெங்காயமானது மருத்துவ குணம் உடையது என்பதை நாம் உணர வேண்டும். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதைப் பற்றியும், அதன் பயன்பாடுகள் என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

onion

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்

வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. வெங்காயத்தை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலின் வெப்பநிலை சமநிலையில் இருக்கும். உணவில் வெங்காயத்தினை சேர்த்துக் கொள்ளும்போது நாம் உண்ணும் கடினமான உணவு கூட எளிதில் ஜீரணம் ஆக்கப்படும்.

பச்சை வெங்காயத்தின் நன்மைகள்

வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது.

அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது. நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

ஆனால் பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாக பயன்படுத்த வேண்டும்.

வெங்காயத்தின் பயன்களும், உபயோகிக்கும் முறைகளும்

மூட்டுவலி உள்ளவர்கள்

மூட்டு வலியின் காரணமாக நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் சிறிது கலந்து வலி வரும் நேரத்தில் அந்த சாற்றினை மூட்டின் மீது தடவிவர வலி குணமாகும்.

மயக்கம் அடைந்தால்

சிலர் திடீரென்று மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிடுவார்கள். அந்த சமயத்தில் வெங்காயத்தை கசக்கி அந்த சாற்றினை முகரவைத்தால் மயக்கம் தெளிந்து விடும்.

சீதபேதி

நாம் உண்ணும் உணவு பொருளில் காரம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சீதபேதி வருவதற்கான வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே நிற்கும்.

ஆசனக் கடுப்பு

நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.

ஆண்மை குறைவு

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.

உடல் பலம் பெற

உடலில் வலிமை இல்லாதவர்கள் சிறிது வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.

நரம்பு தளர்ச்சி

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

தூக்கமின்மை

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டாலோ அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தாலோ, அதன்பின்பு நல்ல தூக்கம் வரும்.

எடையை குறைக்க

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் வெங்காயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனையும் கரைத்து, ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.

onion

நுரையீரலை சுத்தப்படுத்தும்

வெங்காயச் சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு மூடி வீதம், மூன்று வேளைகள் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து புகை பிடிப்பவர்களின் நுரையீரல் சுத்தப்படுத்தப்படும்.

முகப்பரு

முகப்பரு உள்ள இடத்தில் நறுக்கிய வெங்காயத்தை தேய்த்து மசாஜ் செய்து வர முகப்பரு நாளடைவில் மறைந்துவிடும்.

கண்வலி

கண் வலி உள்ளவர்கள் வெங்காயத்துடன் தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி தீரும். கண்ணில் சோர்வு இருந்தால் அதுவும் மறைந்து விடும்.

மாலைக்கண்

மாலைக்கண் நோய் உள்ளவர்கள் வெங்காய சாற்றில், சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர மாலைக்கண் நோய் நாளடைவில் குணமாகும்.

முடி வளர்ச்சிக்கு

தலையில் முடி உதிர்ந்து வழுக்கை உள்ள இடத்தில் சிறிதாக வெட்டிய வெங்காயத்தை அந்த வாழுக்கையின் மீது தேய்த்துவர முடிவளரும்.

சர்க்கரை நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெங்காயத்தில் இன்சுலின் சத்து உள்ளதால் இதனை பயன்படுத்தலாம். உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது குறைக்கப்படும்.

நகசுத்தி

ஒரு பிடி சாதத்துடன் இரண்டு வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து, வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள இடத்தில் கட்டி வந்தால் நகச்சுத்தி சரியாகிவிடும்.

கட்டிகள்

வெங்காயத்தை நெருப்பில் சுட்டு அதனுடன் மஞ்சள், நெய் சேர்த்து நசுக்கி பிசைந்து, மீண்டும் லேசாக சூடுபடுத்தி அந்த கலவையை கட்டிகள் மேல் வைத்து கட்டினால் நம் உடம்பில் உள்ள கட்டி பழுத்து உடைந்து விடும். வெங்காயச் சாற்றை தடவி வர படை, தேமல் மறைந்து விடும்.

பல் வலி

வாய்ப்பொருக்கும் அளவிலான வெந்நீருடன், வெங்காயச் சாற்றை கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும். வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி சரியாகிவிடும்.

onion

பெண்களுக்கு வெள்ளைப்படுதல்

வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.

விஷக்கடி

வெங்காயத்தை நசுக்கி அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க விஷம் இறங்கும். தேன் மட்டுமல்ல குளவி போன்ற வண்டுகள் கடித்தால் கூட இதை பயன்படுத்தலாம்.

இருமல்

இருமல் உள்ளவர்கள் வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க வேண்டும். வயதானவர்களுக்கு ஏற்படும் கடுமையான இருமலை நீக்க வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டால் குணமடையும்.

மூளை

நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. எனவே வெங்காயத்தை தினமும் சூப் வைத்து குடித்து வரலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் குடித்து வந்தால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.