கடலை எண்ணெய் பயன்கள்
உலகின் பெரும்பாலான உயிரினங்கள் தாவரங்களில் இருந்தே தங்களின் அன்றாட உணவை பெறுகின்றன. மனிதனும் பயிர்கள், மரங்கள், செடிகளில் இருந்தே தனது பெரும்பாலான உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கிறான். உணவுகளை சமைப்பதற்கு சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இந்த எண்ணெய் பெரும்பாலும் தாவரங்களில் இருந்தே பெறப்படுகிறது. அப்படி சத்து நிறைந்த வேர்க்கடலை பருப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய் தான் “கடலை எண்ணெய்”. கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
கடலை எண்ணெய் பயன்கள்
இதயம்
கடலை எண்ணையில் குறைந்த அளவிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்காத குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்து அதிகம் இருக்கின்றன. எனவே கடலை எண்ணையை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன. இந்த எண்ணையில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது.
புற்று நோய்
கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது. எனவே உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படுவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்புரிகிறது கடலை எண்ணெய்.
முதியோர்கள்
வயோதிகம் காரணமாக பலருக்கும் மூளை செல்களின் வளர்ச்சி குன்றுவதால் ஞாபக மறதி, நரம்புகள் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும். முதியோர்களுக்கு ஏற்படும் மனசோர்வு பிரச்சனையையும் குறைப்பதில் கடலை எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
மூட்டு வலி
முப்பது வயதை கடந்த பலருக்கும் கடின உடலுழைப்பினாலும், உடலின் தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. சிறிதளவு கடலை எண்ணையை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும்.
முதுமை
அனைவருமே முதுமை அடைவது என்பது தவிர்க்க முடியாத இயற்கையின் நீதி. ஆனால் சிலருக்கு எப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்க பேரார்வம் இருக்கும். கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தி செய்யட்டும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை தோற்றம் மேலோங்கும்.
தலைமுடி
தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்த சத்து உடலில் குறைவதால் தலைமுடி வலுவிழந்து முடிகொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.
சரும நலம்
அனைவருக்கும் சருமத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியம். ஈரப்பதம் குறைவதால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல்வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகின்றன. கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.
போலிக் அமிலம்
நமது அனைவரின் உடல்நலம் நன்றாக இருப்பதற்கும் போலிக் அமிலம் இன்றியமையாததாகும். உடலில் போலிக் அமிலத்தின் சதவீதம் குறியும் போது ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இது எதிர்காலத்தில் ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே அவ்வப்போது கடலை எண்ணையை உணவில் பயன்படுத்திக்கொள்ளும் போது உடலின் போலிக் அமிலம் தேவை பூர்த்தியாகி ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த அழுத்தம்
கடலை எண்ணையில் மோனோசாச்சுரேட்டட் பேட் எனப்படும் தீங்கில்லாத கொழுப்பு நிறைந்திருக்கிறது. இந்த கொழுப்பு உடலில் ஓடும் ரத்தத்தின் சீரான ஓட்டத்தை காக்கிறது. நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் அவற்றை நன்கு விரிவடைய செய்து இதயத்தின் சீரான செயல்பாட்டை பராமரிக்கிறது. ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
வயிறு
கடலை எண்ணெய் பெரும்பாலும் அனைத்து வயதினராலும் சுலபத்தில் செரிமானம் செய்யக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது. செரிமான திறன் சரிவர இல்லாதவர்கள், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட காலம் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள் கடலை எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்த பலனளிக்கும்.