Advertisement

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவாக பழங்கள் இருக்கிறது. சில பழங்கள் குறிப்பிட்ட காலங்களில், உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே விளைகின்றன. அதனால் அனைத்து நாட்டு மக்களாலும் அவற்றை உண்ண முடிவதில்லை. எல்லாக்காலங்களில், எல்லா பகுதிகளிலும் விளையும் ஒரு சில பழ வகைகளில் “வாழை பழம்” ஒன்று. வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

வாழைப்பழம் பயன்கள்

சுறுசுறுப்பு

வாழைப்பழம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதில் வாழைப்பழம் உதவுகிறது. தேர்வுகள் எழுதுவதற்கு முன்பு மாணவர்கள் ஒரு வாழை பழத்தை சாப்பிட்டு செல்வது, அவர்களின் மூலியைன் செயல் திறனை அதிகப்படுத்தி சிறப்பாக தேர்வுகளை எழுத உதவுகிறது.

மலச்சிக்கல்

பழங்காலம் முதலே மலச்சிக்கலை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவாக வாழைப்பழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தினமும் காலை மற்றும் மதிய வேளை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை தடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இக்காலத்தில் உடலில் சத்து தேவைகளை வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளை போக்கலாம்.

போதை இறங்க

இன்று பலருக்கும் மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. அதில் சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, அதிக போதை தலைக்கேறி அவதிப்படுகின்றனர். போதையை தெளிவடைய செய்ய ஒரு வாழைப்பழத்தை, சிறிது கெட்டித்தயிர் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றுடன் ஒரு மிக்சியில் போட்டு, நன்கு அடித்து அதை போதை தலைகேறியவருக்கு கொடுக்க சீக்கிரத்தில் போதை தெளியும். உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகள் மீண்டும் நன்கு இயங்க செய்யும்.

அல்சர்

அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, பின்பு காலை உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

இதயம்

வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

வயிற்று போக்கு

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும், சில நோய்கள் காரணமாகவும் சிலருக்கு அதீத வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்றுப்போக்கால் உடலின் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் உப்புகளின் இழப்பு உண்டாகிறது. வாழைப்பழத்தை சாப்பிட்டு பின்பு ஒரு கோப்பை தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை கலந்து அந்த நீரை அருந்தினால், வயிற்றுப்போக்கால் உடல் இழந்த சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது.

கண்கள்

முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். இந்த கண்களை கொண்டு தான் நாம் அனைத்தையுமே காண்கிறோம். எனவே கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். வாழைப்பழத்தில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

புகை பழக்கம்

புகை பிடிக்கும் பழக்கம் கூட ஒரு வகை போதை பழக்கம் தான். புகை பிடிக்கும் பழக்கத்தை தங்களின் கடினமான முயற்சியால் நிறுத்தியவர்களுக்கு, சமயங்களில் மீண்டும் புகை பிடிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும் அச்சமயங்களில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், புகை பிடிக்க தோடும் உணர்வை கட்டுப்படுத்தலாம். மேலும் இத்தனை காலம் புகைபிடித்ததால் உடலில் தங்கியிருக்கும் நிகோடின் நச்சுப்பொருளை வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நீக்கும்.

மனம் சம்பந்தமான பிரச்சனைகள்

உடல்நலம் எந்த அளவிற்கு முக்கியமோ அது போலவே அனைவருக்கும் மனநலம் நன்றாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு அவ்வப்போது அதீத கோபம் மற்றும் வெறுப்பு போன்ற தீவிர உணர்ச்சிகள் ஏற்படும். மேலும் மனதில் ஒரு பதட்டமான ஒரு மனநிலையும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்களின் மனநிலையில் சிறந்த மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.