நிலவேம்பு கசாயம் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் என்ன தெரியுமா?
நிலவேம்பு என்பதே இந்தியா, இலங்கை மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கிராமப் பகுதிகள் மற்றும் இயற்கை வளம் நிறைந்த காடுகளில் விளைகின்ற ஒரு அற்புத மூலிகை செடியாகும். பன்னெடுங்காலமாகவே நிலவேம்பு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சமீப வருடங்களில் டெங்கு சுரத்திற்கு எதிராக நிலவேம்பு கஷாயம் மருந்தாக பயன்படுத்தப்பட்ட பிறகே இந்த மூலிகை பற்றி பலரும் அறிந்து கொண்டுள்ளனர். தற்போது பல இடங்களில் பல்வேறு தரப்பினராலும் இலவசமாகவே மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டாலும், உண்மையான நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும். அத்தகைய நிலவேம்பு குடிநீர் பருகுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியிலான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நிலவேம்பு பயன்கள்
டெங்கு ஜுரம்
டெங்கு ஜுரம் என்பது டெங்கு வைரஸ் சுமந்து திரியும் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது அவர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவி கடுமையான காய்ச்சல், உடல் வலி, ரத்தம் உரையும் நிலை குறைதல் ஆகியவற்றை உண்டாக்கி மரணத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய வியாதி ஆகும். இந்த வியாதிக்கு ஆங்கில மருந்துகளை காட்டிலும் அதிக வீரியத்துடன் செயல்படும் மருந்தாக நில வேம்பு இருக்கிறது. நிலவேம்பில் இருக்கும் வேதிப்பொருள் டெங்கு வைரஸ் கிருமிகளை அழிப்பதில் மிக சிறப்பாக செயலாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நிலவேம்பு இலைகளை பொடி செய்து, நிலவேம்பு கசாயம் காய்ச்சி டெங்கு ஜுரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வந்ததில் டெங்கு வைரஸ் அழிந்து, டெங்கு ஜுரம் நீங்குவதோடு உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி மீண்டும் பழைய ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம்.
ஜுரம் நீங்க
ஜுரம் நோய்களில் பல வகைகள் இருக்கின்றன. ஒரு சில ஜுரங்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. சில சமயங்களில் இந்த ஜுரம், காய்ச்சல்கள் காரணமின்றி விட்டுவிட்டு ஏற்படுவதாகவும் இருக்கின்றன. இவ்வாறு இடைவெளி விட்டு ஏற்படும் மற்றும் காய்ச்சல்களுக்கான சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக நிலவேம்பு இருக்கிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கஷாயத்தை ஜுரம், காய்ச்சல் பாதித்த காலத்தில் பருகி வந்தால் இடைவெளி விட்டு ஏற்படும் ஜுரம் மற்றும் காய்ச்சல்களை குணமாக்க முடியும்.
பசி உணர்வு தூண்ட
நீண்ட நாட்களாக ஜுரம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்களுக்கு பசி உணர்வு வெகுவாக குறைந்து விடுகிறது. இதற்குக் காரணம் கல்லீரலில் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய உதவும் பித்த நீர் சுரப்பு குறைந்து விடுவதே ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை சரியான சதவிகித அளவில், முறையான கால இடைவெளிகளில் கொடுத்து வந்தால் வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பு அதிகரித்து, பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக உணவு சாப்பிடக் கூடிய ஆர்வம் ஏற்படும். உடல் நலம் மேம்படும்.
கல்லீரல் குறைபாடுகள் நீங்க
நமது உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமானது. இந்த கல்லீரல் தான் நமது உணவை செரிமானம் செய்யக்கூடிய பித்தநீரை சுரக்க செய்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாகவும் உதவுகிறது. ஒரு சிலருக்கு கல்லீரலில் ட்ரைகிளிசரைடு கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து விடுவதால் கல்லீரல் வீக்கம் உண்டாகின்றது. இது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு ஆரோக்கிய குறைபாடாகும். நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் அதிகமுள்ளன. மேலும் கல்லீரலில் உணவிலிருந்து பெறப்படும் ட்ரைகிளிசரைட் கொழுப்புச் சத்துக்கள் நிரந்தரமாக படிந்துவிடாமல் வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, அதன் செயல்பாட்டை சீராக்குகிறது.
சுவாச நோய்கள் தீர
நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையானதாகவும் நமது நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளில் நச்சுக்கள் மற்றும் கிருமித் தொற்றுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் ஜலதோஷம் மற்றும் இன்னபிற காரணங்களால் சிலருக்கு கடுமையான இருமல் மற்றும் வறட்டு இருமல் உண்டாகி அவதியுறும் நிலை இருக்கிறது. மேலும் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களையும் கடுமையான வேதனைக்கு உள்ளாக்குகிறது. இத்தகைய சுவாச சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துப் பொருளாக நிலவேம்பு இருக்கிறது என மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே சுவாச கோளாறுகளை சரி செய்ய நிலவேம்பு கசாயத்தை மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி கொடுத்து வந்தால் நன்மை பெறலாம்.
ரத்தம் உறைதல்
திராம்போசைட் என்பது நமது இரத்தத்தில் இருக்கின்ற உறைவணுக்கள் ஆகும். இந்த உறைவணுக்கள் நமது உடலில் ஏற்படும் காயங்களின் போது ரத்தம் அதிக அளவில் வெளியேறாமல் தடுப்பதில் உதவுகிறது. திராம்போசைட்கள் அதிகளவில் இருந்தாலும் அல்லது மிகக் குறைவான அளவில் இருந்தாலும், உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இதய சம்பந்தமான குறைபாடுகளை உண்டாக்கும். நிலவேம்பு கசாயம் அருந்துபவர்களுக்கு இதயத்தில் இந்த திராம்போசைட்கள் அதிகம் சேர்ந்து ரத்தம் உறைந்து விடாமல் தடுத்து இதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
தோல் வியாதிகள் குணமாக
மனிதர்கள் உடல் மற்றும் பிற உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் போலவே சருமத்தின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியமாகும். நமது உடலுக்குள் இருக்கின்ற ரத்த ஓட்டத்திற்கும் சருமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் கலக்கின்றன நச்சுப் பொருட்கள் மற்றும் தொற்று கிருமிகளால் வெளிப்புறத் தோலில் சொறி, படர் தாமரை, சிரங்கு போன்றவை ஏற்படுகின்றது. நிலவேம்பு நமது ரத்தத்தில் கலந்துவிடுகிற நச்சுகள் மற்றும் கிருமிகளை நீக்கும் அரும்பணியை செய்கிறது. எனவே சரும ஆரோக்கியம் மேம்பட நினைப்பவர்கள் சரியான அளவில் நிலவேம்பு கசாயம் பருகுவது சிறந்தது.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய் குறிப்பாக கோடை காலங்களில் அதிகமாகவும், நாம் சாப்பிடுகின்ற உணவில் இருக்கின்ற கிருமிகள் கல்லீரலில் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும் போதும் உண்டாகும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த மஞ்சள் காமாலை நோய் சீக்கிரத்தில் குணமாகாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிலவேம்பில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி அதிகம் இருக்கின்றன. எனவே மஞ்சள் காமாலைபாதிப்பிற்குள்ளானவர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறி, மஞ்சள் காமாலை நோய் நீங்க பெற்று கல்லீரல் வலிமை பெறுகிறது.
குடற்புழுக்கள் நீங்க
நாம் சாப்பிடும் சாக்லேட் போன்ற உணவுகளில் கண்ணுக்குத் தெரியாத சிறிய புழுக்கள் சென்று நமது குடலில் தங்கி விடுகின்றன. இந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி கொள்வதோடு, நமது உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய தீங்கான புழுக்களை அழித்து, வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேற்றுவதற்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு கசாயம் இருக்கிறது. நிலவேம்பு இலைகளையோ அல்லது நிலவேம்பு பொடியையோ சிறிதளவு நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 3 நாளுக்கு காலை மாலை தொடர்ந்து அருந்துவதால் வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கின்ற தீங்கு விளைவிக்கும் புழுக்கள் அழிந்து, மலத்தின் வழியே உடலை விட்டு வெளியேறும்.
தலைவலி குணமாக
மனிதர்களின் உடலில் தலை முக்கிய உறுப்பாகும். ரத்த அழுத்த பிரச்சனை காரணமாகவும் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாகவும் பலருக்கு தலைவலி ஏற்படுகின்றன. ஜலதோஷத்தால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு கடுமையான தலைவலியும், தும்மல் மற்றும் இருமல் சிலருக்கு ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளைப் போக்குவதில் நிலவேம்பு சிறப்பாக செயல்படுகிறது. நிலவேம்பு கஷாயத்தை இளம்சூடான பதத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பருகி வருவதால் எப்படிப்பட்ட கடுமையான தலைவலியும் நீங்கும். ஜலதோஷத்தால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்களுக்கு அந்த நீர் இறங்கி தலைபாரம் மற்றும் தலைவலி ஆகியவை நீங்கும்.