அனைவரையும் வசீகரிக்கும் கண் இமைகளை, அடர்த்தியாக வளர்ப்பது எப்படி?
ஒருவருடைய முக அழகிற்க்கு வசீகரம் கொடுப்பது அவர்களுடைய கண்கள் தான். சில பேரது பார்வையானது வசீகரத் தன்மை கொண்டதாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் அவர்களுடைய கண் இமைகளும் தான். அதை பார்ப்பவர்களுக்கு ‘நமக்கும் இப்படி ஒரு அழகான கண் இமைகள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்’ என்ற எண்ணம் கட்டாயம் வராமல் இருக்காது. உங்களுக்கும் அழகான கண் இமைகள் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? சுலபமான இயற்கையான டிப்ஸ் இதோ!
நம்முடைய கண் இமைகள் ஒரு நாளைக்கு 0.15 மி.மீ வரைதான் வளரக்கூடியது. இப்படி வளரக்கூடிய இமை முடிகளானது 6 மாதங்களிலிருந்து ஏழு மாதங்களுக்குள் உதிர்ந்துவிடும். மீண்டும் முழுமையாக வளர ஆரம்பித்து, அழகாக மாறுவதற்கு ஏழிலிருந்து எட்டு மாதங்கள் ஆகி விடும். மற்றொரு குறிப்பு, தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம் கூட இமைகள் விரைவில் உதிர்ந்துவிடும். கெமிக்கல் கலந்த கண்மை மூலம் உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர வைப்பது என்பது மிகவும் கஷ்டம்.
கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்:
1. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவு சமமாக எடுத்து ஒன்றாக கலந்து, அந்த எண்ணெயை ஒரு சிறிய பஞ்சில் தொட்டு, உங்களின் கண் இமைகளுக்கு மேல் மெதுவாக தடவ வேண்டும். அதன் பின்பு நான்கு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த மூன்று எண்ணெய்களில் இருக்கும் புரதப் பொருள்களும், தாதுப்பொருட்களும் உங்களது கண் இமைகளை வலுவாகவும் நீளமாகவும் கருப்பாகவும் வளர செய்ய உறுதுணையாக இருக்கும். இந்த முறையை தினம் தோறும் பின்பற்றி வரலாம்.
2. வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ளே இருக்கும் திரவத்தை மட்டும் பிரிந்து தனியாக எடுத்துக்கொண்டு, அதில் சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து பஞ்சில் நனைத்து கண்கள் இமைகளுக்கு மேல் தடவிக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் இந்த எண்ணை கண்களின் இமைகளில் அப்படியே இருக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் இமைகளை அழகாக மாற்றிவிடும்.
3. வெண்ணை வகைகளில் ஷியா வெண்ணெய் என்று சொல்லப்படும் வெண்ணையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இந்த வெண்ணையை விரல்களில் லேசாக தொட்டு கண் இமைகளில் தடவ, கண் இமை முடி உதிர்வு குறையும்.
4. விளக்கெண்ணெயில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் அதிகம். இதன் மூலம் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். புருவம் அழகாக தடிமனாக வளர வேண்டும் என்றாலும் இந்த விளக்கெண்ணையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. கிரீன் டீ தூள் உங்களது வீட்டில் இருந்தால், அதை சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி அந்த நீரை கண்களின் இமைப் பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6. பாதி அளவு எலுமிச்சை தோலை, ஆலிவ் எண்ணையில் காலையிலேயே ஊற வைத்துவிட வேண்டும். பின்பு இரவு நேரத்தில் எலுமிச்சை பழ தோலுடன் சேர்த்து ஊற வைத்த அந்த ஆலிவ் எண்ணையை கண் இமைகளில் தடவி வர நல்ல பலன் உண்டு.