புதினா கீரை அதிகம் உண்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
பழங்காலம் தொட்டே பல்வேறு வகையான அற்புத மூலிகைகளைப் உணவுக்காகவும், மருந்தாகவும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை மற்றும் உணவுப் பொருளாக புதினா கீரை இருந்து வந்திருக்கிறது. முற்காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே அதிகம் உண்ணபட்ட இந்த புதினா இலைகள், தற்போது உலகெங்கிலும் உள்ள மக்களால் புசிக்கப்படுகிறது. ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
புதினா பயன்கள்
ஆஸ்துமா நோய்
ஆஸ்துமா என்பது மனிதர்களின் நுரையீரலை பாதித்து, பல சமயங்களில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்த கூடிய ஒரு நோயாகும். பரம்பரை காரணமாகவும், ஒவ்வாமை போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகின்றது. ஆஸ்துமாவிற்கு ரசாயன மருந்துகள் உட்கொண்டாலும், புதினா சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பருவ கால ஒவ்வாமை, ரைனிடிஸ்
உலகெங்கிலும் இருக்கும் மக்களில் பலரையும் பருவகால ஒவ்வாமைகள் பாதிக்கின்றன. அதுபோக ரைனிடிஸ் எனப்படும் சுரமும் அவர்களை பீடிக்கிறது. புதினா இலைகளிலிருந்து பெறப்படும் திரவம் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுவர்களுக்கு கொடுத்ததில், அவர்களின் பருவகால ஒவ்வாமை பிரச்சனை வெகுவாக குறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும் ரைனிடிஸ் எனப்படும் ஜுரம் நோயும் வெகு விரைவில் நீங்குவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
வயிற்றுப்போக்கு குணமாக
புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
பாலூட்டும் தாய்மார்கள் பிரச்சனை
புதிதாக குழந்தை பெற்றெடுத்த பெண்கள் ஆறு மாத காலம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயமாக இருக்கிறது. இக்காலத்தில் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அழுத்தமாக கடித்து தாய்ப் பால் அருந்துவதால் பெண்களின் மார்பக காம்புகளில் புண்கள் மற்றும் வலி ஏற்படுகின்றன. இக்காலங்களில் புதினா இலைகளை சாப்பிட்டு வரும் பாலூட்டும் பெண்களுக்கு புதினாவில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட எண்ணைகள் மார்பக காம்புகளில் இருக்கும் புண்களையும், வலிகளையும் பெருமளவில் குறைப்பதாக அமெரிக்க நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
சுவாச கோளாறுகள் நீங்க
புதினாவில் இருக்கும் மென்தால் எண்ணெய் குளிர்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்பை குணப்படுத்துகிறது. மேலும் தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, சீரான சுவாசம் காற்று கிடைக்கும்படி செய்கிறது. சளி தீவிரமடைந்து அதனால் ஏற்படும் தொடர் இருமல் நீங்க, புதினாவிலிருந்து பெறப்படும் மென்தால் எண்ணையை தைலமாக தடவுவதாலும், புதினா இலைகளை சிறிதளவு பக்குவம் செய்து சாப்பிடுவதாலும் விரைவில் நீங்குகிறது.
தோல் வியாதிகள், பூச்சிக்கடி மருந்து
புதினாவில் இருந்து பெறப்படும் புதினா எண்ணெய் சிறந்து கிருமிநாசினியாக செயல்படுகிறது. புதினா இலைகளை அரைத்து அதிலிருந்து பெறப்படும் சாறுகளை, நமது சருமத்திற்கு தடவுவதால் தோலில் இருக்கும் புண்கள், அரிப்பு போன்றவை நீங்கும். புதினா இலைச்சாற்றை முகத்துக்குத் தடவி வந்தால், முகப்பரு தோன்றுவதை பெருமளவு குறைக்கிறது. முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளி தழும்புகள் மறைய உதவுகிறது., மேலும் கொசுக்கடி வண்டு மற்றும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட வீக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு புதினா இலைச் சாறுகளைத் தடவுவதால் எரிச்சல் குறைந்து பூச்சிக்கடி விஷங்கள் உடலிலிருந்து நீங்குகிறது.
பற்கள், ஈறுகள் நலன்
வாய் சுகாதாரம் மேம்படுவதற்கு ஒரு சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக புதினா இருக்கிறது. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது. உணவிலிருந்து பற்கள் மற்றும் ஈறுகளில் இடுக்கில் தங்கிவிடும் கிருமிகளை புதினா இலை சாற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள் முற்றிலும் அழித்து பற்கள் மற்றும் ஈறுகளின் நலனை காக்கிறது.
வாந்தி ஏற்படுவதை நிறுத்த
ஒரு சிலருக்கு பயணங்களின் போதும் மற்றும் வேறு சில காரணங்களாலும் வாந்தி ஏற்படும் உணர்வு உண்டாகிறது. புதிதாக பறிக்கப்பட்ட புதினா இலைகளை நசுக்கி, அந்த இலைகளின் வாசத்தை முகர்வதால் வாந்தி ஏற்படும் உணர்வு உடனே குறைகிறது. மேலும் வயிற்றை புரட்டி வாந்தி வருகின்ற நிலையில் இருப்பவர்கள் முன்பாகவே சிறிது புதினா இலைகளை சாப்பிடுவதால் வாந்தி ஏற்படாமல் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் உஷ்ணம் குறைய
கோடை காலங்களில் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு உடல் அதிக உஷ்ணமடைந்து கோடைக்கால ஜுரம், உஷ்ணக் கட்டிகள் ஏற்படுவது மற்றும் இன்னபிற உடல் உபாதைகள் உண்டாகி துன்புறுத்துகின்றன. இத்தகைய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு கோடைக்காலங்களில் புதினா இலைகளை தினமும் பக்குவம் செய்து சாப்பிடவதும், பானங்களில் சிறிது புதினா இலைச்சாறு கலந்து அருந்துவதாலும் உஷ்ண பாதிப்புகள் குறைகிறது. உடல் குளிர்ச்சி அடைகிறது. மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவை உருவாவதையும் தடுக்கிறது.
போதை நச்சுகள் நீங்க
மது, சிகரெட், புகையிலை போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துபவர்களின் உடலில் ரத்தம் மற்றும் இன்ன பிற உறுப்புகளில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து விடுகிறது. இந்த நச்சுக்களை வெளியேற்றி உடலை தூய்மை அடைய செய்யும் ஒரு சிறந்த இயற்கை உணவாக புதினா இருக்கிறது. தினமும் புதினா இலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தம் மற்றும் இன்ன பிற உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறி, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எதிர்காலங்களில் கடும் நோய்கள் பாதிக்காமல் காக்கிறது.