நரை முடி கருப்பாக மாற பாட்டி வைத்தியம்
இன்றைய கால இளஞ்சர்கள் பலருக்கு நரை முடி என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் நமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த மெலனின் குறைவதால் தான் இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி வருகிறது என்று கூறப்படுகிறது. அதோடு மரபணுக்கள் மூலமும், வைட்டமின் பி 12 போன்ற சில குறைபாடுகள் மூலமும் நரை முடி வரக்கூடும். நரை முடி கருப்பாக, நரை முடி வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
மருதாணி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து இரண்டு கிராம், நெல்லிக்காய் கால் கிலோ ஆகிய மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வெயிலில் ஒரு மாத காலம் காய வைக்க வேண்டும். அந்த ஒரு மாத காலத்தில் இது தைலமாக மாறிவிடும். பிறகு தினமும் இதை தலையில் தேய்த்து வர நரை முடி நீங்கி கருப்பாக முடி வளரும்.
குறிப்பு 2 :
உருளை கிழங்கு தோல், மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். ஆகையால் உருளை கிழங்கு தோலை கொண்டு நரை முடியை கறுப்பாக்கலாம். இரண்டு கப் நீரில் ஐந்து உருளை கிழங்கு தோலை போட்டு வேக வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த நீரை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொண்டு, தலையில் அந்த நீரை தடை ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் கொண்டு தலையை அலச வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்வதன் மூலம் நரை முடி கருப்பாக மாறும்.
குறிப்பு 3 :
இஞ்சியை பால் சேர்த்து அரைத்து, அதை நரை முடி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விட்டு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்து வர நரை முடி நீங்கும். இதனை வாரம் இரு முறை செய்யலாம்.
குறிப்பு 4 :
கசகசா, அதிமதுரம் ஆகிய இரண்டையும் பால் சேர்த்து நன்கு அரைத்து, குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு இதை தலையில் தடவி ஊறவைத்து பின் குளித்து வர நரை முடி கருப்பாக மாறும்.
குறிப்பு 5 :
மிளகை தூளாக்கி அதை தயிரில் கலந்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சிகைக்காய் போட்டு குளித்தால் நரை முடி கருப்பாக மாறும்.
மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நரை முடியை கறுப்பாக்கலாம். அதோடு தேவை இல்லாத கெமிக்கல் ஷாம்புக்களை தலைக்கு தேய்ப்பது, கெமிக்கல் எண்ணெய்கள், கிரீம்களை தலைக்கு தேய்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.