தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
மரங்களில் காய்கள் தான் அந்த மரத்தின் விதைகளை கொண்ட கனியாக மாறுகிறது. பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களை கொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு படம் தான் நெல்லிக்கனியாகும். தமிழ் மொழியில் நெல்லியை நெல்லிக்காய் என்றும் நெல்லிக்கனி என்றும் அழைக்கின்றனர். பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் நெல்லிக்கனியை பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட நெல்லிக்கனியை அரைத்து நெல்லிக்கனி சாறு அல்லது நெல்லிக்காய் ஜூஸில் அருந்துவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்
தலைமுடி பாதுகாப்பு
மனிதர்களின் தலைமுடி முகத்திற்கு அழகான தோற்றத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயப்படுவது போன்றவற்றில் இருந்து காக்கும் கவசமாக இருக்கிறது. தலை முடிகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வேளையில் அருந்துபவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று தலைமுடி ஆரோக்கியமாக வளர்கிறது. இயற்கையான பளபளப்பு தன்மையை தலைமுடிக்கு கொடுக்கிறது. பொடுகு பேன் தொல்லை, தலை முடியில் ஏற்பட்டிருந்தாலும் அவை அறவே நீக்குகிறது. மேலும் தலை முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடிகளின் வேகமான வளர்ச்சியை தூண்டுகிறது. மிக இளவயதிலேயே இள நரை, பித்த நரை போன்றவை மிக விரைவில் ஏற்படுவதையும் அறவே தடுக்கிறது.
உடல் எடை குறைய
அனைவருமே தங்கள் வயது மற்றும் உயரத்திற்கேற்ற உடல் எடையை கட்டிக்காப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அருந்த வேண்டிய ஒரு ஊட்டச் சத்துமிகுந்த பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது/ தினமும் காலையில் 20 முதல் 30 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் நார்ச்சத்து, உணவில் இருக்கின்ற கொழுப்புக்கள் உடலில் படிந்து எடை அதிகரிப்பதை தடுத்து. உடல் எடையை குறைக்கிறது. உடலில் ஏற்கனவே இருக்கின்ற அதிக கொழுப்புச்சத்துக்களையும் கரைத்து,அவற்றை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றி உடல் எடையை குறைக்கிறது.
எலும்புகள் வலிமை பெற
வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பது அவசியம். அப்படி வலிமையான எலும்புகள் உருவாக கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் எலும்புகளில் ஆஸ்டியோகிளாஸ்ட்ஸ் எனப்படும் செல்களின் செயல்பாட்டை வெகுவாக குறைக்கிறது. இந்த செல்கள் தான் எலும்புகள் வலுவிழந்து போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் அருந்த கொடுத்ததில் அவர்களின் எலும்புகளில் ஏற்படுகின்ற வலி மற்றும் வீக்கம் வெகுவாக குறைந்திருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
கண்பார்வை தெளிவு பெற
நமது முகத்தில் இருக்கும் இரண்டு கண்களின் பார்வைத் திறன் நன்றாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். கண்களுக்கு மிக அழுத்தம் தரும் வகையிலான பணிகளை மேற்கொள்வதால் எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த இயற்கை உணவாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கண்களில் உள்ள கருவிழியின் திசுக்களின் வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டு, கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
மூளை செயல்திறன்
நமது மூளையை சுறுசுறுப்பாக செயல்பட உடலிலிருந்து ரத்த ஓட்டம் மூளைக்கு சீரான வேகத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுகளை சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு வேகமெடுக்கிறது. நெல்லிக்காய் ஜூஸில் நமது இரத்தத்தில் உருவாகும் ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். மூளைக்கு சீரான வேகத்தில் ரத்தம் செல்வதையும் உறுதி செய்கிறது. தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு சிறந்த மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது. மேலும் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படுவது குறைகிறது. மேலும் மூளை வளர்ச்சி குன்றும் ஆபத்தையும் தடுக்கிறது.
சுவாச நோய்கள் தீர
எத்தகைய சுவாசக் கோளாறுகளுக்கும் சிறந்த நிவாரணமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் சி சத்து தொற்று கிருமிகளால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் வறட்டு இருமலை வேகமாக குணப்படுத்துகிறது. காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி நெஞ்சு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுபவர்கள் தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் வறட்டு இருமல் போன்றவை குறைந்து, சீராக சுவாசிக்க உதவுகிறது. மேலும் நுரையீரலில் தங்கியிருக்கின்ற இருக்கின்ற நச்சுக்கள் மற்றும் ஆபத்தான கிருமிகளையும் அழித்து அவற்றை உடலில் இருந்து வெளியேற்றும் பணியையும் நெல்லிக்காய் ஜூஸ் செய்கிறது.
இதய பாதிப்புகளை தடுக்க
ஆர்திரோஸ்க்லேரோசிஸ் எனப்படுவது நமது உடலில் இருக்கின்ற நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் எனும் அதிக கொழுப்பு படிந்து, அந்த ரத்த நாளத்தில் சுலபமாக ரத்த ஓட்டம் செல்வதை குறைத்து, இதய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறைபாடாக இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் பெக்டின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கொண்டுள்ளது. இவை நமது உடலில் இருக்கின்ற ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, மேற்கண்ட குறைபாடு ஏற்படாமல் காக்கிறது. இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீரான அளவில் செல்வதையும் உறுதி செய்கிறது. இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
தோல் சுருக்கம் நீங்க
சரும நலத்திற்கு சிறந்த ஒரு இயற்கை பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் 50 மில்லி அளவுக்கு அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும். சரும பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. மேலும் முகப்பரு பிரச்சனை இருப்பவர்களுக்கு முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, தோல் சுருக்கங்களை நீக்கி முகத்திற்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது. தோல் செல்கள் மாற்றம் அடைவதால் ஏற்படும் வெண்குஷ்டம் எனப்படும் தோல் வெளுத்தல் குறைபாடு ஏற்படாமல் தடுப்பதில் நெல்லிக்காய் ஜூஸ் சிறப்பாக செயல்படுகிறது.
மலச்சிக்கல், செரிமான கோளாறுகள்
அதிக நேரம் கண் விழித்தல், மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி அளவு நெல்லிக்காய் சாறு பருகி வருபவர்களுக்கு குடலில் இருக்கின்ற அசுத்தங்கள் அனைத்தும் வெளியேறுகிறது. வாய்வுத் தொல்லைகளை நீக்குகின்றது. உடல் அதிக உஷ்ணம் அடைவதை தடுத்து, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்கள் சுரப்பை சரி செய்து, அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதையும் முற்றிலும் தடுக்கிறது. சாப்பிடும் உணவுகள் வேகமாக செரிமானம் ஆவதற்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து பானம்
நெல்லிக்காய் ஜூஸ் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பானமாக இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலேட், நியாசின் அமினோ அமிலங்கள், தையாமின் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. தினமும் சிறிதளவு நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் மேற்கூறிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று உடல் அதிக சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்துகிறது.