விளக்கெண்ணெய் பயன்கள்
தாவரங்களில் பல கோடி வகைகள் இருக்கின்றன. சில தாவரங்கள் உணவாக பயன்படுகின்றன. வேறு சில தாவரங்கள் மருத்துவ மூலிகைகளாகவும், இன்ன பிற பயன்பாட்டிற்கும் உதவுகின்றன. இத்தகைய சில தாவரங்களிலிருந்து எண்ணெய் வகைகளை தயாரிக்க முடிகிறது. அந்த எண்ணெய்கள் பல வகையிலும் மனிதர்களுக்கு உதவுகின்றன. அப்படி சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒரு எண்ணெய் தான் “ஆமணக்கு எண்ணெய்” அல்லது “விளக்கெண்ணெய்”. இந்த விளக்கெண்ணையின் பல வகையான பயன்பாடுகள் குறித்து இங்கு காண்போம்.
விளக்கெண்ணெய் பயன்கள்
மலச்சிக்கல்
சிலருக்கு எப்போதும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தான் நவீன மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் அந்த மருந்துகள் வேறுவகையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணையின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
தோல்
தோலில் பல வகையான தொற்று வியாதிகளான சொறி, சிரங்கு போன்றவற்றிற்கெதிராக விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. விளக்கெண்ணையின் சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இப்பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.
வீக்கம்
உடலில் சில பகுதிகளில் தசைகள் முறுக்கிக்கொள்வதால் சுளுக்கு ஏற்படுகிறது. மேலும் உடலின் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டாலும் அந்த இடம் வீங்கிவிடுகிறது. விளக்கெண்ணையின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும்.
தலைமுடி
எல்லோருக்குமே தலை முடி நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும் விளக்கெண்ணையின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
புண்கள்
உடலின் எப்பகுதியிலாவது சிராய்ப்புகள், வெட்டுக்கள் போன்றவை ஏற்பட்டால் அந்த இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் நின்றாலும் நாளாவட்டத்தில் அந்த இடம் புண்ணாகி விடுகிறது. விளக்கெண்ணையின் சில துளிகளை தினமும் அடிபட்ட புண்களின் மீது விட்டு வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.
மூட்டு வலி
நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக மூட்டு வலி பிரச்சனை இருக்கிறது. தினமும் சில துளிகள் விளக்கெண்ணையை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும். ஆர்த்ரைடிஸ் போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
கண்கள்
இன்று பெரும்பாலானவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் கண்பார்வைத் திறனையும் பாதிக்கிறது.தினமும் இரவில் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும்.
பாத வெடிப்புகள்
உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படி பட்ட நபர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணையின் சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கும்.
தாய்ப்பால்
குழந்தை பெற்று தாய்ப்பால் புகட்டும் நிலையில் இருக்கும் சில தாய்மார்களுக்கு சமயங்களில் அவர்களின் மார்பகங்களில் தாய்ப்பால் கட்டிக்கொண்டு பால் சுரப்பு ஏற்படாமல் போகும். அப்படியான சமயங்களில் விளக்கெண்ணையை இளம் சூடான பதத்தில் காய்ச்சி, பெண்களின் மார்பகங்களின் மீது தடவி, ஒத்தடம் கொடுக்க மீண்டும் தாய்ப்பால் சுரப்பு ஏற்படும்.