ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?
நமது நாட்டில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பல அந்நிய நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பலரும் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறியாக பிரக்கோலி இருக்கிறது. இந்த பிரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர். தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அத்தகைய ப்ரோக்கோலியை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் .
ப்ரோக்கோலி பயன்கள்
புற்று நோய் தடுப்பு
ப்ரோக்கோலி புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. மேலும் நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் ப்ரோக்கோலி சிறப்பாக செயல்படுகிறது. குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது.
கண்பார்வை
அதிகம் நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை நெருங்கும் பெரும்பாலான மனிதர்கள் அனைவருக்குமே கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.
இதயம்
உலகில் இன்று பலரையும் வயது வேறுபாடின்றி தாக்கக்கூடிய நோயாக இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கின்றன. இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.
நச்சு தன்மை
இன்று நாம் சாப்பிடும் மற்றும் அருந்தும் உணவு பானங்கள் பல வகையான நச்சுக்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து எதிர்காலங்களில் பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கிறது. ப்ரோக்கோலியில் சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை நிறைந்திருக்கும் ப்ரோக்கோலியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.
எலும்புகள் வலிமை பெற
நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது எலும்புகள் தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது. எலும்புகள் வலிமை பெற உதவும் ஒரு இயற்கை உணவாக ப்ரோக்கோலி இருக்கிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலியை பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.
ஆன்டி – ஆக்சிடண்டுகள்
மனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. உடலுக்கு ஆன்டி – ஆக்சிடண்டு சத்துக்கள் இன்றியமையாததாக இருக்கிறது. பலருக்கும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சரும நலம்
நமது உடலை வெளிப்புற பாதிப்புகளிலிருந்து காப்பதோடு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் பணியை சருமம் மேற்கொள்கிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. சமயங்களில் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இவை காரணமாக அமைகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.
செரிமான கோளாறுகள்
செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி சிறந்த தீர்வாக இருக்கிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொலாஸ்ட்ரால்
இக்காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை தங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். ப்ரோக்கோலியில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ளது. இந்த நார்ச்சத்து நமது பித்தப்பையில் சுரக்கும் பித்த அமிலங்களையும் செரிமான உறுப்புகளில் படியச் செய்து உண்ணும் உணவில் இருக்கின்ற அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்து உடல் நலனை காக்கிறது. ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 6 சதவிகித அளவு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து நீங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளமை தோற்றம்
இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். ப்ரோக்கோலியில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ப்ரோக்கோலியை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தி எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.