கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்
கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக்கும் அளிக்க கூடியது “சிறுதானியங்கள்” ஆகும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
புரதம்
கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
நார்ச்சத்து
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள்
அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
குழந்தைகள்
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
ஊட்ட உணவு
கேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக இருக்கிறது.
பற்கள், எலும்புகள்
உடலுக்கு “கால்சியம்” சக்தி மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. கேழ்வரகில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
உடல் எடை
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
உடல் சூடு
மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது. இந்த சமயங்களில் கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
மன அழுத்தம்
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
தாய்ப்பால்
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
தோல்
சிலர் உடலை அதிகம் வருத்திகொண்டு உழைப்பதால் இளம் வயதிலேயே வயதானவர்களை போன்று தோற்றத்தை பெறுகின்றனர். கேழ்வரகு கூல், களி போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் “மிதியோனின், லைசின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி தோலில் சுருக்கங்கள் ஏற்படுதல் குறைந்து தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.