ஹோட்டல்ல வாங்குற மாதிரி, மொறுமொறுன்னு மெதுவடை உங்க வீட்டிலேயே செய்யலாம். இந்த ரகசிய குறிப்புகள் தெரிஞ்சா! மிக்ஸில மாவரைச்சா கூட வடை சூப்பரா வரும்.
நம்ம வீட்ல இருக்கிறவங்க எல்லாம் கண்டிப்பா சொல்லுவாங்க! ‘ஹோட்டல்ல செய்ற மெதுவடை தான் சூப்பரா இருக்கு’ நீ செய்ற மெதுவாடை நல்லாவே இல்ல’! அப்படின்னு. இது எல்லாப் பெண்களுக்கும் கட்டாயம் வருத்தத்தை தரக்கூடியது. இனி ஹோட்டல்ல செய்ற மாதிரி, வீட்லயும் எல்லா பெண்களும் சூப்பரா வடை சுட்டு, நல்ல பேரு வாங்குங்க! இனி நீங்க வடை செஞ்சா, ‘இது ஹோட்டலில் வாங்கின வடையா?’ அப்படின்னு கேட்பாங்க! இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணீங்கன்னா! ஒரே வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!
இதற்கு தேவையான பொருட்கள்:
உளுந்து-250g, சிறிய உருளைக்கிழங்கு-1 வேக வைத்து, தோல் உரித்தது, இஞ்சி-சிறிதளவு பொடியாக நறுக்கிக் கொள்ளவும், மிளகு,சீரகம்-1/4 ஸ்பூன், பெருங்காயம்-2 சிட்டிகை, வெங்காயம்-1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும், பச்சைமிளகாய்-1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும், சோடா உப்பு-1 சிட்டிகை, கருவேப்பிலை-ஒரு கொத்து, அரிசி மாவு-1 டேபிள்ஸ்பூன்.
உளுந்தை மூன்று முறை நன்றாக கழுவிவிட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி 1 1/2 மணி நேரம் உளுந்தை ஊற வைக்க வேண்டும். மிக்ஸியில் அரைப்பதற்கு கட்டாயம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உளுந்து ஊற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்பு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவேண்டும். முதலில் அந்த மிக்ஸி ஜாரில் ஒரு சொட்டு நல்லெண்ணையை ஊற்றி, உள்பக்கம் முழுமையாக நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஊற வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை தண்ணீர் வடித்து, மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸியை ஓட விடுங்கள். உளுந்து 50 சதவிகிதம் நன்றாக அரைந்துவிடும். இப்போது நீங்கள் வேக வைத்து தயாராக, தோலுரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை மசித்து அந்த மாவில் போட்டு விடுங்கள். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர், தேவைப்பட்டால் இன்னொரு ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இப்படியாக ஸ்பூனில் அளவோடு தண்ணீர் ஊற்றி மாவை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு கட்டாயம் மொழுமொழுவென்று அரை பட வேண்டும். ஒரு சொட்டு மாவை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் அது மிதக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் அரைத்த மாவின் பதம் சரி.
அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், வெங்காயம், பச்சைமிளகாய், சோடா உப்பு, கருவேப்பிலை, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, இவைகளை சேர்த்து மாவை லேசான முறையில் கலக்க வேண்டும்.
இப்போ மாவு ரெடி! தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு, அதில் கைகளை நனைத்து கொண்டு, அதன் பின்பு மாவை உங்கள் கைகளால் எடுத்து, எண்ணெயில் விட வேண்டும். எண்ணெய் காய்கின்ற பக்குவம் மிகவும் அவசியம். நன்றாக சூடான எண்ணையை, மிதமான தீயில் வைத்து விட்டு, அதன் பின்பு வடையை விட வேண்டும்.
வடை விட தெரிந்தவர்கள், கையாலேயே விட்டுவிடலாம். இல்லாவிட்டால், ஒரு பால் கவரை சதுரமாக வெட்டிக் கொண்டு, அந்தக் கவர் மீது, சிறிது தண்ணீர் போட்டு துடைத்து விட்டு, மாவை உருண்டை பிடித்து, கவரின் மேல் வைத்து, ஒரு ஓட்டை போட்டு லேசாக எண்ணெயில் தள்ளி விடுங்கள். இப்படி செய்தாலும் வடை நன்றாக வரும்.
மிதமான தீயில் இந்த வடையை சுட்டு எடுத்தீர்கள் என்றால், கட்டாயம் ஹோட்டலில் செய்த வடை போன்று, மொறுமொறு வென்று ருசியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரே ஒருமுறை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும், உங்கள் கணவருக்கும் இப்படி செய்து கொடுத்து தான் பாருங்களேன்! கட்டாயம் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பீர்கள். இதே முறையைப் பயன்படுத்தி கிரைண்டரில் மாவாட்டியம் வடை சுட்டுக் கொள்ளலாம்.