அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
மனிதனுக்கு உணவாக பயன்படும் தாவரங்கள் பல இருக்கின்றன. அதில் கொடியாக படர்ந்து காய்களை தரும் பல தாவர வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “அவரைக்காய்”. அதிகம் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகையாக இந்த அவரைக்காய் இருக்கிறது அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அவரைக்காய் நன்மைகள்
மலச்சிக்கல்
ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
உடல் எடை
உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய அவரைக்காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
நோய் எதிர்ப்பு
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். அவரைக்காய் சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.
நார்ச்சத்து
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள அவரைக்காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
ஊட்ட உணவு
அவரைக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் அவரைக்காய் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மன அழுத்தம்
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவரைக்காய் களில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே அவரைக்காய் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
பற்கள், எலும்புகள்
உடலுக்கு “கால்சியம்” சக்தி மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. அவரைக்காய்களில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
இதய நோய்கள்
இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். அவரைக்காய்களில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. அவரைக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
இரும்புச்சத்து
மனிதர்களின் ரத்தம் சிவப்பு நிறம் பெறுவதற்கும், சத்துகளை உடல் முழுவதும் பரவச்செய்வதற்கும் ஹீமோகுளோபின் எனப்படும் புரததத்தால் ஆன வேதிப்பொருள் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும். அவரைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.
சுவாச பிரச்சனைகள்
ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள அவரைக்காய்களை தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது.