தினமும் காரட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
உலகில் பல நாடுகளில் காலனி ஆதிக்க ஆட்சி இருந்த காலத்தில், ஏதாவது ஒரு நாட்டில் அல்லது கண்டத்தில் மட்டுமே விளைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவை உலகில் மற்ற நாடுகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்தியாவிற்கு மேலை நாட்டினரால் கொண்டுவரப்பட்ட ஒரு காய் வகையாக காரட் இருக்கிறது. காரட் காய் அல்லது கிழங்கு சற்று குளிர்ந்த சீதோஷண இடங்களில் மட்டுமே பூமிக்கடியில் விளைகிறது. இந்த காரட்டை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிட கூடிய ஒரு உணவு இருக்கிறது. காரட் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
காரட் பயன்கள்
கண்கள்
நாம் பிறவற்றை காண்பதற்கு உதவும் உறுப்புகளான கண்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பீட்டா- கரோட்டின் என்கின்ற சத்து குறைபாடு ஏற்படுமேயானால், பிற்காலத்தில் கண்பார்வை மங்குதல், கண் புரை போன்ற பல குறைபாடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு இந்த பீட்டா – கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, வயதான காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.
ஆன்டி – ஆக்சிடண்டுகள்
உடலுக்கு ஆன்டி – ஆக்சிடென்டின் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. பலருக்கும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை. கேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நலம்
உடலின் முக்கிய உறுப்பான இதயம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க உடலில் கொலஸ்ட்ரால் அதிக சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரட்டில் இயற்கையாகவே உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கும் ஆற்றல் அதிகமிருக்கிறது. கேரட்டை அதிகளவில் சாப்பிடுபவர்களுக்கு இதய ரத்த செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் வலுவடைகிறது. மேலும் உடலில் பித்த சுரப்பை அதிகரிக்கச் செய்து, கொழுப்புகளை கரைத்து, இதய நரம்புகளில் கொழுப்பு படியாமல் தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
பற்கள், ஈறுகள் நலம்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மற்றும் பருகும் பானங்களில் பல வகையான கிருமிகள் இருக்கின்றன. முறையாக வாய், பற்கள் மற்றும் ஈறுகளின் சுகாதாரத்தை பேணாதவர்களுக்கு ஈறுகள் வீக்கம், ரத்தக் கசிவு மற்றும் பற்சொத்தை போன்ற குறைபாடுகள் ஏற்பட வழிவகை செய்கிறது. பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது.
காயங்கள் ஆற
காயங்கள் வீக்கம் போன்றவற்றிற்கு பல இயற்கை வைத்திய மூலிகைகளைப் போல கேரட்டும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலை நாடுகளில் முற்காலத்தில் வீக்கம், வலி போன்றவற்றிற்கு கேரட்டை நன்கு அரைத்து பற்றுப் போட்டு சிகிச்சை செய்தனர். கேரட்டில் பீட்டா கரோட்டின் இருப்பதை நாம் ஏற்கனவே அறிவோம். இந்த பீட்டா கரோட்டின் சத்து புண்கள், வீக்கங்கள் போன்றவற்றை வேகமாக குணமாக உதவுகிறது.
மூளை திறன்
ஒவ்வொரு மனிதனும் இறக்கும் காலம் வரை, அவனது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும் ஒரு உறுப்பாக மூளை இருக்கிறது. அனைவருக்குமே வயது அதிகரிக்கும் போது மூளை செயல்திறனில் குறைபாடு, மந்தநிலை போன்றவை ஏற்படுவது இயற்கையான ஒரு விடயமாகும். எனினும் பீட்டா – கரோட்டின், ஆன்டி – ஆக்சிடென்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும். இதற்கான சிறந்த இயற்கை உணவு காரட் ஆகும்.
புற்று நோய் தடுப்பு
கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எந்த வகையான புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்த பரம்பரையில் பிறந்த பெண்களுக்கு தொடர்ந்து காரட் சாறு அருந்த செய்ததில், அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைந்துதிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நார்ச்சத்து
மனிதர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து திடகழிவுகள் வெளியேறுவது மிகவும் கடின செயலாக மாறிவிடுகிறது. நார்ச்சத்து மிகுந்த கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உணவில் நார்ச்சத்து தேவை பூர்த்தியாகி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
சரும நலம்
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. சமயங்களில் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இவை காரணமாக அமைகிறது. காரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.
நீரிழிவு
நீரிழிவு நோய் பாதிப்பிற்குள்ளாவார்கள் பெரும்பாலும் இயற்கையான உணவுகளை சாப்பிடுவது அவர்களின் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலை நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் கேரட்டை அதிகம் சாப்பிட்டு வந்த நபர்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான அளவில் காக்கப்பட்டதோடு, அவர்களுக்கு கடுமையான டைப் 2 ரக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.