ஏலக்காய் பயன்கள்
உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகள் பலவற்றின் பூர்வீகமாக இந்திய நாடு இருக்கிறது. அதிலும் இன்று வரை யாரும் அறிந்திராத பல அற்புதமான மூலிகைகள் விளையும் பகுதியாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தோன்றிய ஒரு மூலிகை மற்றும் வாசனை பொருளாக “ஏலக்காய்” இருக்கிறது. பல மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய்களை தொடர்ந்து சாப்பிடுவதால் விளைகின்ற நன்மைகள் என்ன எனபதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
ஏலக்காய் பயன்கள்
வலி
உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாகவும், உடலுக்குள் எந்த ஒரு பகுதியிலிருக்கும் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தொய்வு அல்லது பாதிப்பு ஏற்படும் போதும் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் ஓன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்று சாப்பிடும் போது அதிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் உடனடியாக மூளைக்கு சென்று அதிகமாக வலி ஏற்படும் நிலையை குறைக்கிறது. ஏலக்காயிலிருந்து பெறப்பட்ட எண்ணையை உடலின் மேற்பகுதிகளில் வலி உண்டாகும் இடங்களில் தடவி வந்தால் வலி குறையும்.
நீரிழிவு
நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி பாதிப்பு கொண்டவர்கள் தங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இனிப்பு சார்ந்த உணவுகளை குறைக்க வேண்டி இருப்பதால், தேநீர் போன்றவற்றை அருந்தும் போது சர்க்கரைக்கு பதிலாக ஏலக்காய்களை தூளாக்கி, தேநீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சரியான விகிதத்தில் இருந்து, சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.
பற்கள் மற்றும் ஈறுகள்
பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, சர்க்கரை பொருள் அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் சிலருக்கு பல் சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறு மற்றும் பற்களில் இருக்கும் கிருமிகளால் வாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. தினமும் உணவு சாப்பிட்டுமுடித்தவுடன் ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய், ஈறுகள் மற்றும் பற்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
வயிறு சார்ந்த நோய்கள்
ஒரு மனிதனுக்கு உணவை செரித்து சக்தியை வழங்கும் முக்கிய உறுப்பான வயிறு சரியாக இருந்தாலே பெரும்பாலான நோய்கள் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும். வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை, வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அணைத்து பிரச்சனைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடித்து, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
மனநலம்
மனம் நன்றாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும். மனதில் ஏற்படுகின்ற கவலை, கோபம், துக்கம், பயம் மற்றும் மன அழுத்தம் போன்றவை மனதை பாதிப்பதோடு உடல்நலத்தையும் கெடுகிறது. மனம் மிகுந்த அழுத்தம் கொண்டிருக்கும் நேரங்களில் ஏலக்காய்கள் போட்ட தேநீர் பருகி வரும் போது. அதில் இருக்கும் நன்மை பயக்கும் ரசாயனங்கள் உடலின் மூளை செல்களை அமைதிப்படுத்தி மனம் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் இறுக்க நிலையை தளர்த்தி மனநிலையை மேம்படுத்துகிறது.
ரத்த கட்டு
உடலில் அனைத்து பாகங்களும் சீராக இயங்க அப்பாகங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும் நபர்களுக்கு, அவர்களின் ரத்த குழாய்களில் ரத்தம் கட்டி கொண்டு ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாமல் இதய பாதிப்பு, உடலின் பாகங்கள் செயலிழப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு ஏலக்காய்களை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
கல்லீரல்
மாமிச உணவுகளை தினமும் அதிகளவு சாப்பிட்டு வருபவர்களுக்கும், தீவிர மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கும் ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு தினந்தோறும் ஏலக்காய்களை முழுதாகவோ அல்லது பொடி செய்தோ சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாடு மேம்படும்.
புற்று நோய்
புற்று நோய்களில் பல வகைகள் உள்ளது இக்காலத்தில் பலரையும் ஏதாவது ஒரு வகையான புற்று நோய் பாதிக்கிறது. புற்று நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை சாப்பிட்டு வருபவர்கள், ஏலக்காய்களையும் சரியான அளவில் சாப்பிடுவது நல்லது. ஏலக்காய்களில் இருக்கும் பிசபோலீன் எனப்படும் வேதிப்பொருள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருப்பதாக மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கூறுகிறது.
வலிப்பு
வலிப்பு நோய் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே மூளை மற்றும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படும் ஒரு நோய் அல்லது குறைபாடு எனலாம். நமது கிராமங்களில் இந்நோயை காக்கை வலிப்பு என்பார்கள். இதன் தாக்கம் ஏற்படும் போது அந்த நபர் தரையில் விழுந்து சிறிது நேரம் துடிதுடித்து பிறகு சரியான நிலைக்கு வருவார். இப்படியான நபர்களுக்கு அவ்வப்போது ஏலக்காய் சார்ந்த உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொடுத்து வருவது அவர்களுக்கு நலம் பயக்கும்.
புகை பழக்கம்
புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும் மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும். அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை முழுதாகவோ அல்லது பொடித்தோ வாயில் போட்டு மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.