Advertisement

நீங்கள் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நீங்கள் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நமது நாட்டின் ஆன்மீக தத்துவங்கள் அனைத்துமே உயிர்களை காப்பற்றுவதை மிகவும் உன்னதமான ஒரு செயலாக கூறுகின்றன. அதிலும் சக மனித உயிர்களை ரட்சிப்பது ஒவ்வ்வொருவரின் கடமை என வலியுறுத்துகிறது. மனிதர்கள் பசியால் உயிரிழக்காமல் காக்கும் “அன்னதானம்” எப்படி உயர்வானதோ, அதுபோல இறக்கும் தருவாயில் இருக்கும் மனித உயிர்களை காக்க செய்யும் “ரத்த தானம்” அந்த அன்னதானத்திற்கு நிகரானதே. இந்த ரத்த தானம் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரத்த தானம் நன்மைகள்

இதயம் 

மருத்துவர்கள் நிர்ணயம் செய்துள்ள கால இடைவெளிகளில் ரத்த தானம் அளித்து வருபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது வெகுவாக குறைவதாக உலகெங்கும் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக 40 வயதிலிருந்து 60 வயது வரை இருக்கும் நபர்கள் ரத்த தானம் செய்து வந்த போது அவர்களுக்கு இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும்ஏற்படாமல் இருந்ததை உறுதி செய்தனர். ரத்தத்தில் இரும்பு சத்து இருக்கிறது. சில சமயங்களில் இந்த இரும்புச்சத்து ரத்தத்தில் அதிகரிப்பதாலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட காரணம் ஆகிறது. எனவே உடலாரோக்கியம் நன்றாக இருப்பவர்கள் ரத்த தானம் செய்து வருவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

புதிய செல்கள் 

நமது உடலே பல லட்சம் கோடி செல்களால் ஆனது தான். இந்த செல்கள் அனைத்தும் தினந்தோறும் அதற்குண்டான காலங்களில் உற்பத்தியாவதும், அழிவதும் என ஒரு இயற்கையின் சுழற்சி விதிப்படி சுழல்கிறது. ரத்த தானம் செய்த பிறகு நமது உடலில் ஓடும் ரத்தம் உடலின் அனைத்து பகுதிகளிலும் புதிய செல்களின் உற்பத்தி மற்றும் பெருக்கத்தை உண்டாக்குகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

புற்று நோய் 

புற்று நோய் ஒரு மனிதனின் உடலில் இருக்கும் செல்களில் தோன்றி பிறகு உடல்முழுவதும் பரவி, சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாத போது மரணத்தையும் உண்டாக்குகிறது. நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் மரபணு பிறழ்வு தான் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. உரிய கால இடைவெளிகளில் ரத்த தானம் அளித்து வருபவர்களுக்கு அவர்கள் உடலில் தொடர்ந்து புது செல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், செல்களில் மரபணு பிறழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து புற்று நோய் ஏற்படாமல் காக்கிறது.

இலவச மருத்துவ பரிசோதனை 

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ ஒரு அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் நமது முழு உடலையும் பரிசோதனை செய்து கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். ஆனால் பலருக்கும் இந்த மருத்துவ பரிசோதனைக்கான பொருளாதார வசதியோ, நேரமோ இருப்பதில்லை. இத்தகைய நபர்கள் ரத்த தானம் அளிக்கும் சமயங்களில் அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்க பட்டு, பரிசோதிக்கப்பட்டு அவர்களின் உடல்நலம் குறித்த அறிக்கையை தருவதோடு, ரத்த அழுத்தம், உடல் வெப்ப நிலை, ஹெப்பாடிட்டீஸ் போன்றவற்றிற்கான இலவசமாக மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. எனவே தனியாக மருத்துவ பரிசோதனை செய்ய முடியாதவர்களும் ரத்த தானம் அளிப்பதன் மூலமாக இலவசமாகவே மருத்துவ சோதனை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

உயிர்காத்தல் 

எவருமே ஒரு உயிர் பறிபோவதை நேரிடையாக கண்டு அனுபவித்த பிறகே மனித உயிரின் மதிப்பு என்னவென்று அறிந்து கொள்கின்றனர். சரியான கால இடைவெளிகளில் ரத்த தானம் செய்பவர்கள் தாங்கள் அதுவரை நேரில் காணாத பல மனிதர்களின் உயிர்களை காப்பாற்றும் மிகப்பெரும் பேறு பெறுகின்றனர். எவருக்குமே தங்களால் ஒரு மனித உயிரை காப்பாற்ற முடிந்தது என்பதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்ளும் போது கிடைக்கும் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி நிலையை இப்புவியின் எத்தகைய செல்வங்களும் தர முடியாது.

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்ற விடயங்களை மேற்கொள்வதோடு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதும் நல்ல பலன் அளிக்கும். குறிப்பாக உடலின் உயரத்திற்கும், வயதிற்கும் அதிக உடல் எடை கொண்டவர்கள், இதயம் சம்பந்தமான நோய்கள் பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் தங்களின் மருத்துவரின் அறிவுறுத்தல்படி ரத்ததானம் செய்வதால் உடல் எடை சுலபமாக குறைவதோடு, தேவையற்ற நச்சுகள் கொழுப்புச் சத்துக்கள் ரத்தத்தில் சேராமல் உடல் நலத்தை பாதுகாக்கிறது.

blood donation

இதயம், கல்லீரல் நலம் பெற 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தேவைக்கதிகமாக இருக்கும் இரும்புச் சத்துக்கள் நமது உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல் மற்றும் கணையம் போன்றவற்றில் சேமிப்பிற்குள்ளாகிறது. இந்த அதிக அளவு இரும்புச் சத்து எதிர்காலங்களில் கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, இதய நோய்கள் இதயத்துடிப்புகளில் மாறுதல்கள் உண்டாவது போன்ற பலவகையான ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மூன்று மாதத்திற்குகொரு முறை ரத்ததானம் தருபவர்களின் ரத்தத்தில் உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கின்ற அதிக அளவான இரும்புச்சத்து வெளியேறுவதால், மேற்கூறிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதோடு அந்த உறுப்புக்கள் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.

ஹீமோகுரோமேடோசிஸ் 

அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களுக்கு ஹீமோகுரோமேடோசிஸ் எனப்படும் குறைபாடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இந்த ஹீமோகுரோமேடோசிஸ் என்பது நமது ரத்தத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர்வதால் உண்டாகும் ஒரு குறைபாடாகும். அளவுக்கதிகமாக மது அருந்தும் பழக்கம், ரத்த சோகை மற்றும் இதர காரணங்களாலும் இந்த ஹீமோகுரோமேடோசிஸ் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மூன்று மாத காலத்திற்கொரு முறை ரத்த தானம் செய்பவர்களின் ரத்தத்தில் தேவைக்கதிகமான இரும்புச் சத்து சேர்வது தடுக்கப்பட்டு, ஹீமோகுரோமேடோசிஸ் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ரத்ததானம் செய்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.