தியானம் செய்வதால் ஒருவருக்கு ஏற்படும் அதிசய பலன்கள் என்ன?
நம் அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளினாலும், அவசர வேலைகளினாலும் மன அழுத்தம் ஏற்படுகின்றது. நம் உடல் ஒரு இடத்தில் இருந்தாலும், நம் மனது எத்தனையோ சிந்தனையில் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த மனதை ஒருநிலைப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரே வழி தியானம் தான். இருபது நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வதின் மூலம் நம்மால் மூன்று வகையான நன்மைகளை அடைய முடியும். முதலாவதாக நம் மனதில் அமைதியும், இரண்டாவது நம் உடலிற்கு ஆரோக்கியமும், மூன்றாவதாக நாம் வாழும் ஆன்மீக வாழ்விற்கும் இந்த தியானம் ஒரு சிறந்த மருந்தாக அமையும்.
தியானம் பயன்கள்
நம் மனதிற்கு
நம் மனதிற்குள் இருக்கின்ற கவலை, பயம், சோகம் இவையெல்லாம் தியானம் செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே குறைய ஆரம்பிக்கும். உங்களின் தனிமையை தியானத்தின் மூலம் நீக்கலாம். அதாவது உங்களை விட்டு யாராவது பிரிந்திருந்தாலும் அல்லது இறந்தவர்களின் பிரிவானது உங்களை பாதித்திருந்தாலும், அந்த பாதிப்பை தியானத்தின் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
மனதில் தேவையில்லாத எண்ணங்களை நம்மால் வெளியேற்ற முடியும். எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் முழுமனதுடன் ஈடுபடமுடியும். ஆழ்ந்து கவனிப்பது, மற்றவர்கள் கூறுவதை உள்வாங்குவது போன்ற திறமைகளை தியானத்தின் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும்.
எதிர்மறையான ஆற்றல் உங்களிடம் இருந்தாலோ அல்லது அப்படிப்பட்டவர்களிடம் பழகினாலோ உங்களது மூளையின் செயல்திறன் எதிர்மறையாக மாறிவிடும். அப்படி எதிர்மறை ஆற்றல் கொண்டவர்களை தியானம் செய்வதன் மூலம் சரி செய்து விடலாம்.
உங்களின் தன்னம்பிக்கை திறனானது அதிகரித்துவிடும். உங்களது வாழ்விற்கு எது நல்லது எது கெட்டது என்பதை நீங்களே ஆராய்ந்து முடிவெடுக்கும் திறமையை அடைவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்தும் தியானத்தின் மூலம் விடுபடலாம்.
தியானம் செய்வதற்கு முன்பு உங்களிடம் இருந்த நடவடிக்கைக்கும், தியானம் செய்ய ஆரம்பித்த பின்பு இருக்கும் நடவடிக்கைக்கும், உள்ள வித்தியாசமானது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு, நீங்கள் தியானம் செய்கிறீர்கள் என்று கூறுவதற்கு முன்பாகவே, உங்கள் நடவடிக்கையில் உள்ள வித்தியாசத்தை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள். இந்த அனுபவத்தை நீங்கள் தியானம் செய்வதன் மூலம் தான் உணர முடியும்.
உடல் ஆரோக்கியத்திற்கு
நோய் எதிர்ப்பு சக்தி, உணர்வு சமநிலை, கருவளர்ச்சி, குடல் எரிச்சல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள், ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்க செய்தல், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்தல், உடல் எடையை கட்டுபடுத்தவும் உதவுகிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, நோய்களை அண்டவிடாமல் நம் உடலை பாதுகாக்கிறது.
ஆன்மீகம்
“தியானத்தின் மதிப்பறியா மனிதனிடம் ஞானத்தின் வெளிப்பாடு என்றாயினும் தடைபட்டே தீரும்.” மனிதன் கடவுளை உணர்வதற்கான ஒரே வழி தியானம் தான். கடவுள் எங்கு இருக்கின்றார் என்று தேடிச் செல்லாமல் நம் மனதில் உள்ள கடவுளை உணர தியானம் மேற்கொள்வது தான் ஒரே வழி. கடவுளைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம். உங்களுக்குள் உள்ள இறைவனை உணர வேண்டுமேயானால் தியானத்தை இப்போதே ஆரம்பித்து பலன் பெறுவீர்.