அஜீரணம், பசியின்மையா, வயிறு பிரச்சனையா இதோ கை வைத்தியம்
ஒரு மனிதன் சன்தோஷமாக வாழ மிக முக்கியமானது அவனது உடல். நன்கு பசி எடுத்து, நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்குவதே ஒரு மனிதன் ஆரோக்கியணமாக இருப்பதற்கான அடையாளம். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் நோய்கள் நிரந்தரமாக தங்கும் குடிலாக மாறிவிடும் நமது உடல். பசியை தூண்டவும், நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணிக்கவும், வயிறு சம்மந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கவும், ஜலதோஷம், ஆஸ்துமா போன்றவை நீங்கவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் குறித்த சித்த மருத்துவம் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம் வாருங்கள்.
அகத்தியர் பாடல்:
சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்
பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்
பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?
சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்
-அகத்தியர் குணபாடம்
அதாவது சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவை ஓமம் மூலம் சரி செய்ய முடியும் என்று அகத்திய பெருமான் கூறுகிறார்.
குறிப்பு 1 :
வயிறு மந்தமாக இருந்தால் ஜீரணம் சரியாக இருக்காது அதோடு பசியும் எடுக்காது. வயிறு மந்தத்தை போக்க சித்திரமூல வேர்ப்பட்டை, சுக்கு, ஓமம் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும். அந்த பொடியில் கடுக்காய் பொடியை கலக்க வேண்டும். எப்போதெல்லாம் வயிறு மந்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த பொடியை சிறிதளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிறில் ஏற்பட்ட மந்தம் நீங்கும்.
குறிப்பு 2 :
சிலருக்கு பசி எடுப்பதில் கோளாறு இருக்கும். அப்படி இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கும். அதோடு தினம் ஓமத்தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது என்று கூறப்படுகிறது.
குறிப்பு 3 :
வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தாலோ, வயிறில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்ட பிறகு இருவது நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
குறிப்பு 4 :
ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு இந்த பொடியை தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கும். அதோடு நன்றாக பசி எடுக்கும்.
குறிப்பு 5 :
ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவற்றை விரட்டவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓம பொடியை ஒரு துணியில் கட்டி அதை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். அதே போல ஓமப்பொடியை உச்சந்தலையில் தேய்த்தால் ஜலதோஷம் பறந்தோடும்.