செயற்கையை தவிர்த்திடுங்கள், இரண்டே பொருளில் உங்கள் சருமம் சுத்தமாகி புது பொலிவுடன் ஜொலிக்கும் அதிசயம் தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லாருக்கும் அழகாக இருக்க ஆசை தான். அழகாக இருக்க வேண்டும் என்பதை விட சருமம் சுத்தமாக, பொலிவாக இருக்க விரும்புவோம் அல்லவா? அழகான சருமத்தை விரும்புவதற்கு முக்கிய காரணம் மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக இல்லை. அழகு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதால் தான். உங்கள் மீது உங்களுக்கு ஒரு நம்பிக்கை முதலில் வர வேண்டும் என்பது தான் இங்கு முக்கியமாகிறது. உங்களின் முகத்தை மாசு, மருவின்றி சுத்தமாக வைத்திருக்க இந்த 2 பொருள் மட்டும் போதும். செயற்கையாக வேறு எந்த அழகு சாதன பொருட்கள் நீங்கள் வைத்திருந்தாலும் இன்றே தூக்கி எரிந்து விடுங்கள். இயற்கையை காட்டிலும் உங்கள் சருமத்தை பாதுகாக்க எவற்றாலும் முடியாது என்பதை முதலில் உணருங்கள். எத்தகைய பொலிவிழந்த சருமத்தையும் இந்த 2 பொருள் மீட்டு புது பொலிவை ஊட்டும்.
அப்படி ஒன்றும் யாரும் அறிந்திராத புதிய பொருட்கள் எல்லாம் இல்லை. எல்லாருக்கும் நன்கு பரிட்சயமான மிகவும் எளிதாக கிடைக்க கூடிய அற்புத சக்தி வாய்ந்த மூலிகைகள் தான். அதை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் ஒரே மாதத்தில் உங்களது சருமம் பொலிவோடு ஜொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி என்ன பொருள் என்று தீவிரமாக யோசிக்க வேண்டாம். 2 பொருட்களில் ஒன்று வேம்பு. வேப்ப மரத்தின் இலையான வேப்பிலை தாங்க. வேம்பை விட உங்களது சருமத்தை தூசு, மாசு போன்றவற்றிலிருந்து காக்கும் சக்தி வேறு எதற்கும் இல்லை. வேம்பு ஒரு கிருமி நாசினியாக சருமத்தில் செயல்படுகிறது.
அடுத்ததாக ஆறாத காயங்களையும், வடுக்களையும், வடுக்கள் விட்டு சென்ற அடையாளங்களையும் எளிதாக நீக்க வல்லது காற்றாழை. கருமை, கரும்புள்ளிகள், கருவளையம் என்று உங்களது மேனியை கெடுத்து கொண்டிருக்கும் இவைகளில் இருந்து உண்மை சருமத்தை மீட்டுக்கும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. வேம்பு, கற்றாழை இவை இரண்டும் மட்டும் போதும். வேறு எந்த பொருளும் தேவையே இல்லை. இதை எப்படி சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
வேம்பும் கற்றாழையும் சுலபமாக கிடைக்கக்கூடிய பொருள் தான். ஆனால் இந்த குறிப்புகளின்படி தினமும் புதியதாக உபயோகப்படுத்த வேண்டும். மொத்தமாக செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால் பலன் தராது. கற்றாழைச் செடியை உங்கள் வீட்டில் வளர்ப்பது நல்லது. வேப்பிலையை ஒரு மூன்று கொத்து உருவி வைத்துக் கொள்ளுங்கள். இதனை இஞ்சி பூண்டை நசுக்கும் கல்லில் நசுக்கி சாறு எடுத்தாலும் சரி, கைகளாலேயே பிழிந்து சாறு எடுத்தாலும் சரி, ஒரு டீஸ்பூன் அளவிற்கு வேப்பிலை சாற்றை பிரித்து எடுங்கள்.
இப்போது கற்றாழையை நன்கு அலசி, மேலிருக்கும் பச்சையான தோலை சீவி எடுக்கவும். உள்ளே இருக்கும் வெண்மை நிறமான ஜெல்லை தனியே எடுக்கவும். அதனை நல்ல தண்ணீரில் மூன்று முறை அலசவும். ஏனென்றால் அதிலிருக்கும் ஒரு வேதிப்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடக்கூடாது. நன்கு அலசிய பின் கைகளாலே அதனை பிசைந்து எடுக்கவும். பசை போன்ற ஒரு திரவம் கிடைக்கும். இந்தப் பசை போன்ற திரவத்தில் தான் மிகுந்த சக்தி இருக்கிறது. இந்த பசையுடன் வேப்பிலை சாற்றை சேர்க்கவும். நமக்கு தேவையான பொருள் கிடைத்து விட்டது. கற்றாழையின் இந்தப் பசை போன்ற திரவத்துடன் கூடிய வேப்பிலை சாறு சருமத்தை மாசு, மருவின்றி பொலிவை உருவாக்கக்கூடிய தன்மையை கொண்டது.
இதனை முகம் முழுவதும் தடவிக் கொள்ளவும். கழுத்துப் பகுதிகளிலும் பூசவும். ஒரு 15 முதல் 20 நிமிடம் வரை நன்றாக காய விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். இதே போல் 30 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வரவும். முகம் கழுவிய பின் சோப்பு பயன்படுத்தவே கூடாது. எனவே குளிக்கும் முன் செய்வதை விட, குளித்த பின்னால் இதனை செய்வது தான் நல்லது. நேரம் கிடைக்கும் போது செய்யலாம். இரவு தூங்கும் முன் செய்துவிட்டு தூங்கினால் சருமம் தளர்ந்து நிம்மதியான தூக்கம் வரும். 30 நாட்களில், முதல் 15 நாட்களிலேயே உங்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். சருமத்தில் வியக்கத்தகு மாற்றங்களை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். இதை ஆண்களும் செய்யலாம்.