இனி முகம் கழுவ சோப்பு போட வேண்டாம். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு, உங்கள் முகம் பொலிவாக மாற இந்த 2 பொருள் போதுமே!
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக பல வகையான சோப்புகளையும், ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்தை கழுவும் பழக்கம் இருக்கும். இயற்கையான அழகு பெற, செயற்கையான சோப்புகளும் க்ரீம்களும் எதற்கு? நம்முடைய அழகு கெட்டுப் போகாமல் இருக்கவும், அந்த அழகை மேம்படுத்திக் கொள்ளவும், இயற்கையாக இருக்கும் சில பொருட்களே போதுமானது.
இப்படிப்பட்ட இயற்கையான பொருட்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, செயற்கையான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். முகத்தை தினந்தோறும் சோப்பில் கழுவாமல், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கழுவி வாருங்கள். நல்ல வித்தியாசம் தெரியும். இது ஒரு சுலபமான முறையும் கூட. அது என்ன முறை என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் முல்தானி மெட்டி தூள், தக்காளி பழம் அவ்வளவுதான். முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அறைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார்செய்து எடுத்துக்கொள்ளுங்கள். தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த விழுதினை உங்களது முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விட வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம். சோப்புப் போட்டு முகத்தைக் கழுவினால், ஐந்து நிமிடங்கள் வரை, இரண்டு மூன்று, முறை தேய்த்து கழுவ மாட்டீர்களா? அப்படித்தான்.
இந்த முறைப்படி காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி உங்களது முகத்தை கழுவி வாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு, ரேஷஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த முல்தானி மெட்டியானது உங்களது முகத்தில் தேவையில்லாமல் எண்ணெய் வடியும் தன்மையைக் கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்கும். தக்காளிப் பழ விழுதானது, உங்கள் முகத்தில் படிந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த தக்காளி பழ விழுதானது, உங்களது தோலின் நிறத்தை அதிகப்படுத்திக் காட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ஒரு தக்காளிப் பழத்தை அறைக்கும் போது, அதிகப்படியான விழுது கிடைக்கும். மீதமுள்ள விழுதை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அடுத்த நாளும் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை. ஆனால் பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து வைத்துவிடுங்கள். தினம்தோறும் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களது முகத்தில் கட்டாயம் வித்தியாசம் தெரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பார்ப்பவர்கள், உங்கள் முகத்திற்கு என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்கும் அளவிற்கு வித்தியாசம் தெரியும்.
நீங்கள் அடிக்கடி ‘கூல் டிரிங்ஸ்’ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படி என்றால் உங்களுக்கு கண்டிப்பாக இந்த பிரச்சனை எல்லாம் இருக்கும்.
இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல்கள், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே அருந்தி வருகின்றனர். இதனால் உங்கள் உடலுக்கு மிகப்பெரிய கெடுதல்களை உண்டாக்கும். இந்த குளிர்பானங்களில் இருக்கும் ஒரு வகை போதை பொருள் அதை மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் யுக்தியை கையாள்கிறது. இதுவே குளிர்பானங்களுக்கு உங்களை அடிமையாக்குகிறது. இவற்றால் உண்டாகும் உங்களுக்கு ஏற்படும் தீமைகளை இப்பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதிலும் இருந்து குளிர்பானங்களால் உயிரிழக்கக் கூடியோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பத்தி நாலாயிரமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. நாளொன்றுக்கு 3 லிட்டருக்கு மேல் இவ்வகை குளிர்பானங்கள் அருந்துபவர்களுக்கு நிச்சயம் மரணம் சம்பவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் குளிர்பானம் அருந்துவதால் ஏற்படும் உடல் கோளாறுகள் ஏராளமாக உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் குளிர்பானங்களில் இருந்து சற்று தள்ளியே இருப்பது தான் நல்லது.
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது. அவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடிய தூண்டுதல்களை மூளையில் பெற்றிருப்பார்கள். மிகவும் ஆக்ரோஷமாகவும் இவர்கள் மாறிவிடுகிறார்கள். அதிகம் கோபப்படும் நபராகவும் இருக்கிறார்கள். ஆல்கஹால் மட்டுமல்ல கூல் டிரிங்க்ஸ் கூட பிரச்சனை தான்.
கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் இவ்வகை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கலினால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிதை மாற்றத்தில் எதிர்வினை உண்டாகி குறைமாதத்தில் குழந்தை பிறக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுவயதில் பெண்கள் பூப்பெய்துவதற்கும், சிறுவர்கள் வகைதொகை இல்லாமல் உடல் எடை கூடுவதற்கும் இவ்வகை குளிர்பானங்களை அதிகம் அருந்துவதும் ஒரு காரணம் ஆகும். இதனால் அவர்களின் மூளையில் ரசாயன மாற்றம் உண்டாகி இவ்வகைப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து வாரம் முழுவதும் செயற்கை குளிர்பானங்களை அருந்தி வந்தால் கணையம் பாதிக்கப்பட்டு தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. இதனால் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. செயற்கை குளிர்பானங்களை அதிகம் குடிக்கும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கக்கூடிய சதவீதம் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு மார்பக புற்று நோயையும், குடல் புற்றுநோயையும் உண்டாக்கக்கூடிய நச்சுத்தன்மையை இவ்வகை செயற்கை குளிர்பானங்கள் கொண்டுள்ளன.
2009 இல் செய்யப்பட்ட ஆய்வின்படி ஒரு நாளைக்கு 2 கேன் செயற்கை குளிர்பானங்கள் அருந்துபவர்களுக்கு கல்லீரல் கடுமையாக பாதிப்படைகிறது. அதனை தொடர்ந்து கல்லீரல் செயலிழக்கப்படுகிறது. அமெரிக்க மருத்துவர்களால் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குளிர்பானங்கள் அதிகம் அருந்தியதால் சர்க்கரை நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற செயற்கை குளிர்பானங்களில் கலோரிகள் அதிகம் இருக்கும். அதிக கலோரிகளினாலும், இதில் இருக்கும் சர்க்கரையின் அளவினாலும் வயது வித்தியாசமின்றி சர்க்கரை நோய்க்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் இதயமும் பலவீனப்படுகிறது. இதய பாதிப்புகளினால் மரண வாயிலுக்கும் பலர் செல்கின்றனர். எனவே இயற்கையாக கிடைக்கக் கூடிய பழரசங்களை தேர்ந்தேடுங்கள். இது போன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கை நிறமூட்டப்பட்ட குளிர்பானங்களை அருகிலும் கொண்டு வராதீர்கள்.
உங்க வீட்ல தேங்காய் எண்ணெய் இருக்கா? அப்போ நீங்களும் பேரழகா மாறலாம்.
முகத்தை அழகாக்கி கொள்வதற்கு ஆண், பெண் என்ற எந்த பாகுபாடுமின்றி சில நூறு ரூபாய் நோட்டுகளை சரளமாக செலவழிக்க தயாராக இருக்கிறோம். அழகே ஒருவருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இன்றைய பெண்களுக்கு தைரியம் ஏற்படுவதற்கு தங்களைத் தாங்களே அழகுபடுத்திக் கொள்வதும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இவ்வாறாக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண தேங்காய் எண்ணெயை வைத்துக் கொண்டு எப்படி பேரழகாக மாறலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது. உச்சி முதல் பாதம் வரை தேங்காய் எண்ணெயால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்க வல்லது. மேலும் சில வகை கிருமிகளையும் எதிர்த்துப் போராடுகிறது. தேங்காய் எண்ணெயை தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக் கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன. ஃபேஸ் வாஷ் ஆகவும், மாய்ஸ்சுரைசராகவும், க்ளென்சராகவும், ஸ்க்ரப்பராகவும், சன் ஸ்க்ரீனாகவும் கூட பயன்படுத்த முடியும்.
உங்களின் எப்பேர்பட்ட சருமத்தையும் மாசு மருவின்றி, சுத்தமாகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பின்வரும் இந்த வழிமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பலருக்கும் முகத்தில் இருக்கும் அலர்சியால் பலவித பிரச்சனைகள் உண்டாகிறது. அத்தகைய அலர்சியை தேங்காய் எண்ணையால் போக்க முடியும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இதற்கு பெருமளவு துணை புரியும்.
தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் ஆக எப்படி பயன்படுத்தலாம்?
அடி கனமான வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆலிவ் ஆயிலை 5 ஸ்பூன் விட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் எண்ணெய் தேவையான அளவிற்கு கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் தினமும் காலையில் எழுந்ததும் இந்த எண்ணெயை ஃபேஸ் வாஷ் போல மசாஜ் செய்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமடையும்.
சிலருக்கு உதடுகள் காய்ந்து போயிருக்கும். வெடிப்பு தன்மையுடன் இருக்கும். இவர்கள் லிப் பாம் பயன்படுத்துவார்கள். லிப் பாம் பயன்படுத்தியும் குணமாகாதவர்களுக்கு, லிப் பாம் உடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் உதடுகள் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் மென்மையாக மாறிவிடும். நீங்கள் இரவு கிரீம்களை பயன்படுத்துபவர்களாக இருப்பவராயின், நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசர் க்ரீமுடன் சில துளி தேங்காய் எண்ணையை கலந்து முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு நீங்கும். இரவு கிரீமை பயன்படுத்தாதவர்கள் வெறும் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி விட்டு தூங்க சென்றால் சருமம் மாசுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு மென்மையடையும்.
சிலருக்கு முகத்தில் கொசு அல்லது எறும்பு கடித்து வீங்கி போயிருக்கும். இதனால் முகத்தின் அழகு கெட்டுவிடும். இதில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம். தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் இந்த பிரச்சனை உடனே சரியாகிவிடும். செயற்கை பூச்சுகளை கொண்டு முகம் முழுவதும் மேக்கப் செய்து கொள்பவர்கள் அதனை நீக்குவதற்காகவாவது செயற்கையை தவிர்ப்பதே நல்லது. இயற்கையாக கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தினால் உங்கள் சருமம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.
கோடை காலம் துவங்கி விட்டது. வெயிலின் தாக்கத்தினால் பல பேருக்கு வேர்குரு என்று கூறப்படும் ‘வேனிற்கட்டிகள்’ தலைகாட்ட ஆரம்பித்திருக்கும். இதனால் சருமம் முதிர்ந்த தோற்றத்தை தரும். அரிப்பும், எரிச்சலும் வாட்டி எடுத்துவிடும். விதவிதமான பவுடர்கள் வாங்கி பூசிக் கொண்டாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என்று புலம்புபவர்கள், கவலை கொள்ளத் தேவையில்லை. உங்கள் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சத்தை மீட்டுத்தர தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு குளித்து முடித்ததும் தலைக்கு மட்டுமல்லாமல், கழுத்தை சுற்றியும், முதுகு பகுதியிலும் தேங்காய் எண்ணையை தடவி விடுங்கள்.
தேங்காய் எண்ணெயை ஸ்கிரப்பராக எப்படி பயன்படுத்துவது?
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஸ்கிரப்பராக முகத்திற்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும், வட்டமாக மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுகள், சிறுசிறு முடிகள் நீங்கி முகம் பளிச்சென்று பேரழகாக காட்சியளிக்கும்.
இனி வீட்டிலேயே இந்த 3 சிரப்களையும் எளிதாக செய்து ஒரு வருடத்திற்க்கு பயன்படுத்தலாம்
வெயில் காலம் தொடங்கி விட்டது என்பதால், கலர்கலரான சர்பத் வீதிகளில், வண்டிகளில் வைத்து விற்கப்படும். சிலருக்கு அந்த வண்ணங்களை பார்க்கும்போதே அதை வாங்கி குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஆரோக்கியத்துக்கு கேடு என்பதால், அதை வாங்கி குடிக்காமலேயே விட்டுவிடுவார்கள். குழந்தைகள் கேட்டாலும் வாங்கித் தர மாட்டார்கள். சிலர் பெரிய பெரிய கடைகளில் விற்கும் சர்பத் சிரப்புகளை வாங்கி, பிரிட்ஜில் வைத்து, அந்த சர்பத் சிரப்பை பயன்படுத்தி, வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிப்பார்கள். இருந்தாலும் அந்த சிரப்புகளிலும் கண்டிப்பாக, கெட்டுப்போகாமல் இருக்க, கட்டாயம் ரசாயன பொருட்கள் கலந்து தான் இருக்கும். நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள, நாமே நம்முடைய வீட்டில் ஜூஸ் செய்வதற்கு தேவையான சர்பத் சிரப்பை தயாரித்து வைத்துக் கொண்டால்! எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த சிரப் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்றால் இன்னும் சந்தோஷமான விஷயம் தானே! நீங்களும் கெட்டுப்போகாமல் இருக்கும் அந்த சர்பத் சிரப்பை எப்படி தயாரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? தாராளமாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நன்னாரி சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
நன்னாரி வேர் – 50 கிராம்
தண்ணீர் – 1 1/2 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கிலோ
லெமன் சால்ட் – 1/2 ஸ்பூன்
நன்னாரி வேரை நன்றாக தண்ணீரில் அலசி கழுவ வேண்டும். அதன்பின்பு மிக்ஸி ஜாரில் இந்த வேரை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். (நன்றாக அறைய வேண்டாம். ஒன்றும் இரண்டுமாக பொடி செய்து கொண்டால் போதும்.) அறைத்து வைத்திருக்கும் 50 கிராம் நன்னாரி வேரை முதல் நாள் இரவே 1 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அதாவது குறைந்த பட்சம் 8 மணி நேரம் தண்ணீரில், வேர் ஊற வேண்டும்.
அதன்பின்பு ஊற வைத்திருக்கும் வேரில் இருந்து நீரை மட்டும் வடிகட்டி, எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த நன்னாரி வேர் நீரை, 1 1/2 கிலோ சர்க்கரையில் ஊற்றி, நன்னாரி வேர் தண்ணீரில், சர்க்கரையானது நன்றாக கரைந்த பின்பு அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் காய்ச்சவேண்டும். இறுதியாக அரை ஸ்பூன் லெமன் உப்பை சேர்த்து அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட வேண்டும். நன்றாக ஆறிய பின்பு, இறுதியாக ஒருமுறை வடிகட்டி விட்டால் போதும். உங்களுக்கு தேவையான சிரப் தயாராகிவிடும். இந்த சிரப்பை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாது.
நன்னாரி சர்பத் தயாரிக்கும் முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில், 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்து வைத்துள்ள சிரப்பை கலந்து, 4 ஐஸ் கட்டிகள் போட்டு, பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டாலே போதும். சுவையான ஆரோக்கியமான நன்னாரி சர்பத் ரெடி.
தர்பூசணி சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தர்பூசணி – ஒரு தர்பூசணியில் பாதி எடுத்துக் கொண்டால் போதும்
சர்க்கரை – 1 1/2 கிலோ
லெமன் சால்ட் – 1/2 ஸ்பூன்
ஒரு முழு தர்பூசணியில் பாதி அளவு தர்பூசணியை தோலில் இருந்து தனியாக எடுத்து, அதை மிக்ஸியில் போட்டு அறைத்து வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளலாம். மத்துக்காம்பால் வைத்து இடித்தும், சாறை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். உங்கள் இஷ்டம் தான். ஆனால் அதில் உள்ள கொட்டைகள் மையக் கூடாது. பாதி அளவு தர்பூசணி பழத்திலிருந்து பிழிந்து சாறை எடுத்தாலே 1 லிட்டர் அளவு சாறு கிடைக்கும்.
இந்த ஒரு லிட்டர் அளவு தர்பூசணி பழச்சாறோடு 1 1/2 கிலோ சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து விட்டு, அதன் பின்பு ஸ்டவ்வில் வைத்து, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடங்கள் கொதித்த பின்பு 1/2 ஸ்பூன் லெமன் உப்பு சேர்த்து, மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். மொத்தமாக இந்த சாறை 20 நிமிடங்கள் வரை கொடுத்தால் போதும். கொதிக்கும் போது, இடையிடையே கரண்டியை வைத்து இந்த கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடிபிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
20 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, நன்றாக ஆறிய பின்பு, மீண்டும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தர்பூசணி சிரப் தயார்.(அடுப்பிலிருந்து கீழே இறக்கும் போது இந்த சிரப் தண்ணீர் பதமாகத்தான் இருக்கும் நன்றாக ஆறிய பின்பு தான் எசன்ஸ் தன்மைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.)
தர்பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில், 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்த தர்பூசணி சிரப்பை ஊற்றி, 4 ஐஸ் கட்டிகள் போட்டு பாதி எலுமிச்சை பழ ஜூஸை பிழிந்து விட்டாலே போதும். சுவையான, ஆரோக்கியமான, கலரான தர்பூசணிசர்பத் ரெடி. பயப்படாமல் இதை குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம். ஆரோக்கியமானது தான்.
திராட்சை சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை – 1/4 கிலோ
சர்க்கரை – 1/2 கிலோ
தண்ணீர் – 1/2 லிட்டர்
இந்த கருப்பு திராட்சையோடு, நாம் எடுத்து வைத்திருக்கும் அரை லிட்டர் தண்ணீரில் இருந்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அடுப்பில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த திராட்சையானது நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் ஊற்றி அறைத்து, திப்பி இல்லாமல் திராட்சை சாறு மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சாறோடு (1/2 லிட்டர் தண்ணீரில் இருந்து, மீதம் எடுத்து வைத்துள்ளோம் அல்லவா) மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து, அதன்பின்பு 1/2 கிலோ சர்க்கரையையும் சேர்த்து, நன்றாக கலந்த பின்பு, மீண்டும் அடுப்பில் வைத்து காய விடவேண்டும். 20 நிமிடங்கள் வரை மிதமான தீயில் அடுப்பில் காயவைக்க வேண்டும். இடையிடையே கரண்டியை வைத்து கலக்கிக் கொண்டே இருங்கள். இறக்குவதற்கு முன்பு இந்த சிரப் பிசுபிசுப்பு தன்மை அடைந்து விட்டதா? என்பதை பார்த்து விட்டு, அடுப்பிலிருந்து கீழே இறக்கி, நன்றாக ஆற வைத்து, மீண்டும் வடிகட்டி எடுத்தால் திராட்சை சிரப் தயார். ஒரு பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
திராட்சை ஜூஸ் தயாரிக்கும் முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் நீங்கள் தயாரித்த திராட்சை சிரப்பை ஊற்றி, 4 ஐஸ் கட்டிகள் போட்டாலே போதும். அழகான, கலரான, ஆரோக்கியமான, கடையின் கிடைக்கும் திராட்சை பழசாறு தயார்.
இந்த 2 பொருட்களையும் முறைப்படி இப்படி பயன்படுத்தினால், உங்கள் தலையில் இருக்கும் வழுக்கையில் 15 நாட்களில் வித்தியாசத்தை காணலாம்.
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு தலைமுடி அடர்த்தியாக இருந்தால் தான் அழகு. வயது முதிர்ந்த நிலையில் முடி கொட்டும் என்ற நிலைமை மாறி, மாறிவரும் இந்த காலகட்டத்தில் இளமை காலத்திலேயே பல பேர் தங்களுடைய முடியை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் நம் உண்ணும் பொருட்களில் ஊட்டச்சத்து இன்மையும், சுற்றுப்புற சூழல் மாசு கேடும் தான் காரணம். என்ன செய்வது? நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சூழ்நிலைக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு நம்முடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை தான். இதன் அடிப்படையில் தலையில் சிலபேருக்கு வழுக்கை விழும் நிலைமை உண்டாகி விடுகிறது. சில பேருக்கு வகுடு கூட எடுக்கவே முடியாது. வகுடு எடுத்து தலை முடியை இரண்டாக பிரித்தால், வழுக்கை தான் தெரியும். இந்த நிலைமையில் தலை வாருவது மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைக்கு சுலபமான முறையில் ஒரு தீர்வினை காணலாம். அது என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உங்களால் முடிந்த அளவிற்கு இலசான பச்சை கறிவேப்பிலையை தினம்தோறும் சாப்பிட்டுப் பழகுங்கள். முடியாதவர்கள் கருவேப்பிலை சட்னி அரைத்து சாப்பிட வேண்டும். தினம்தோறும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடவேண்டும். அல்லது இவை மூன்றையும் ஜூஸ் போட்டு குடித்தாலும் பரவாயில்லை. நெல்லிக்காயை தினம்தோறும் சாப்பிடுவது நல்லது. முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர மற்ற கீரைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது இயற்கையான உணவு முறை. இவைகளெல்லாம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடியும் நன்றாக வளரும்.
அடுத்ததாக நாம் குறிப்பிற்கு சென்று விடுவோம். முதலில் ஐந்து கொத்து கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள் பச்சை கரு வேப்பிலையாக இருக்க வேண்டும். அதை காம்புகளில் இருந்து உருவி, மிளகு சீரகம் பூண்டு இடிப்பதற்காக வீட்டில் சிறிய குழவை வைத்திருப்போம் அல்லவா? அதில் போட்டு அந்த பச்சை கருவேப்பிலைகளை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கப் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, அந்த தேங்காய் எண்ணெயில் இந்த கருவேப்பிலை விழுதை போட்டு 3 நிமிடங்கள் காயவிட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் காயவைக்கவேண்டும். அதன்பின்பு அந்த எண்ணையை ஆறவைத்து, வடிகட்டி, முடியின் வேர் பகுதியிலும், உங்கள் மண்டையோட்டிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
உங்களுக்கு வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் நீங்கள் வகுடு எடுப்பீர்கள் அல்லவா? அந்த இடத்தில் நன்றாக உங்கள் கையில் எண்ணையை எடுத்து வைத்து மசாஜ் செய்து பாருங்கள். குறிப்பிட்டு அந்த இடத்தில் முடி வளர்வதை உங்களால் காண முடியும். இது நீங்கள் வித்தியாசத்தை உணர வேண்டும் என்பதற்காக. மற்றபடி தலை முழுவதுமாக இந்த எண்ணையை தேய்த்து வரவேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து, ஷாம்பு போட்டோ, சியக்காய் போட்டோ நீங்கள் எப்படி தலைக்கு குளிப்பீர்களோ அதே போல் தலையை சுத்தம் செய்துவிட வேண்டும். அவ்வளவுதான். 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை செய்து வாருங்கள். அதன் பின்பு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்தால் போதுமானது. நீங்களே வழுக்கை விழுந்த இடத்தில் வித்தியாசத்தை நன்றாக காண முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இந்த எண்ணெய் போதும்
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தங்களுடைய வயது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய வயதை வெளியில் சொல்லவே மாட்டார்கள். ஆனால் நமக்கு வயதாகி விட்டது என்பதை பளிச்சென்று முதலில் வெளியே காட்டுவது வெள்ளைமுடி தான். இதனாலேயே இந்த வெள்ளை முடியை, கருப்பாக மாற்றப் பார்ப்பார்கள். கருப்பாக மாற்ற ரசாயனம் கலந்த கலவைகளை பயன்படுத்துவார்கள். சிலபேருக்கு இந்த வெள்ளை முடி, சிறு வயதிலேயே வந்துவிடும். சிலபேருக்கு வயதானாலும் அவ்வளவு எளிதில் முடி நரைக்காது. இது அவரவர் உடல் சூழ்நிலையைப் பொறுத்தது. உங்களுக்கு சீக்கிரமே நரை முடி வந்து விட்டதா? அதை நிரந்தரமாக கருப்பு நிறத்தில் மாற்ற இயற்கையாகவே நம் வீட்டிலிருந்தே ஒரு எண்ணையை தயாரித்துக் கொள்ளலாம். அந்த எண்ணையை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகப்பொடி-2ஸ்பூன்
மருதாணி இலை பொடி-2 ஸ்பூன்
அவுரி இலை பொடி-2 ஸ்பூன்
நெல்லிக்காய் பொடி-3 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-150ml. கருவேப்பிலை-ஒரு கைப்பிடி அளவு.
இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். கருஞ்சீரகப் பொடி கிடைக்காதவர்கள், கருஞ்சீரகத்தை மளிகை கடையில் இருந்து, முழுசாக வாங்கி, வாணலில் போட்டு நன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம். தூளாக கிடைத்தால் அந்தத் தூளை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதேபோல் நெல்லிக்காய் தூளையும் வாணலில் போட்டு கரு நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சையாக இருக்கும் கருவேப்பிலையை காய்ந்த வாணலியில் போட்டு வறுத்து எடுத்தால் மொறுமொறு என்று மாறிவிடும். உளர்ந்த அந்த கறிவேப்பிலையை, மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம். (கண்டிப்பாக கருஞ்சீரக பொடியையும், நெல்லிக்காய் தூளையும், கறிவேப்பிலையையும் வறுத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.)
பின்பு ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகத்தூள், மருதாணித் தூள், அவுரி இலை தூள், நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை பொடி இவை அனைத்தையும் மேல் குறிப்பிட்ட அளவின் படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு எல்லாக் பொடிகளையும், ஒரு கரண்டியால் கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு 150ml தேங்காயெண்ணையை, எடுத்து இந்த பொடியுடன் சேர்த்து கட்டி பிடிக்காமல் கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
அதன் பின்பு டபுள் பாய்லிங் என்று சொல்லப்படும் முறையில் சூடுபடுத்த வேண்டும். அதாவது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணிரை சூடுபடுத்தி, அதன் பின்பு அந்த சுடுதண்ணியில் இந்த கலவையை வைத்து, 15 நிமிடம்வரை சூடுபடுத்த வேண்டும். சுடு தண்ணீரில் இருந்து கீழே இறக்கி வைக்கப்பட்ட அந்த எண்ணை, நன்றாக ஆறிய பின்பு, ஒரு வடிகட்டியில் திப்பியிலிருந்து எண்ணையை வடிகட்டி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை தினந்தோறும் உங்களது தலையில் தடவிக் கொண்டு வந்தால், வெள்ளை நிற முடி கூடிய விரைவில் கருப்பு நிறமாக மாறும். இதை தொடர்ந்து செய்தால் மட்டுமே பலன் உண்டு. தலையில் மீண்டும் வளரக்கூடிய முடிகள் கருப்பு நிறத்தில் வளரக் கூடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நீங்களே நினைத்தாலும் வேறு எண்ணைக்கு மாறமாட்டார்கள். அவ்வளவு பலனைத் தரும் இந்த எண்ணெயின் பயன்பாட்டை உபயோகப்படுத்தினால் மட்டுமே உணரமுடியும்.
2 மாதத்தில் முடி வளர்ச்சியை கண்கூடாக காணலாம். வீட்டிலேயே, இந்த எண்ணெயை, இயற்கையாக இப்படி தயார் செய்து முடியில் தேய்த்து வந்தால்!
இந்த எண்ணெயை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதற்கு முன்பாகவே, உங்களது முடியை நீங்களே அளவு எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின்பு 6 மாதங்கள் கழித்து, எத்தனை இன்ச் உங்களது முடி வளர்ந்துள்ளது என்பதையும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். இரண்டே மாதத்தில் உங்களது முடி துண்டு துண்டாக வளர்ச்சி அடைந்திருப்பதை, உங்களால் நன்றாக உணர முடியும். அடுத்த நான்கு மாதத்தில் வளர்ந்த, துண்டு முடிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அடர்த்தியாகவும், நீளமாகவும் நல்ல வித்தியாசத்தை காட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் இன்ச் டேப், ஸ்கேல் எதை வைத்து அளந்து வேண்டுமென்றாலும், இதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சந்தேகமே இல்லை. இப்போது இந்த எண்ணெயை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண்ணெயை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்-1 லிட்டர்
பெரிய நெல்லிக்காய்-7
பச்சை கருவேப்பிலை-ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம்-2.
நிழலில் உலர வைத்த செம்பருத்திப் பூக்கள் (சிவப்பு நிற ஒற்றைச் செம்பருத்தி)-20
முதலில் நெல்லிக்காய்களிலிருந்து கொட்டையை நீக்கிவிடவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், பச்சை கருவேப்பிலை, பெரிய வெங்காயம் இவை மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு விழுதாக உங்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின்பு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் இருந்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயை ஒரு இரும்பு கடாயில் ஊற்றி, அதில் நீங்கள் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து, மிதமான தீயில் ஸ்டவ்வில் வைத்து காய விட வேண்டும். காய வைக்கும்போது கடாயை தட்டு போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் எண்ணெனை கொதிக்கும் போது, எல்லா எண்ணெயும் வெளியே சிதறி வீணாகிவிடும். அந்த விழுதின் ஈரப்பதம் முழுமையாக நீங்கி, கருப்பு நிறமாக மாற 1/2 மணி நேரம் எடுக்கும். ஈரமாக கொட்டிய விழுதின் சலசலப்பு முழுமையாக அடங்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் எண்ணெய் கெட்டுப் போய்விடும்.
அந்தக் கடாயோடு, எண்ணெய் சேர்த்த விழுதினை ஒரு நாள் முழுவதும் அப்படியே ஓரமாக ஒரு இடத்தில் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள். அடுப்பிலிருந்து கடாயை இறக்கிய பின்பு தட்டுப் போட்டு மூடக்கூடாது. அதன் வியர்வை தண்ணீர், எண்ணெயில் வடிந்தால் எண்ணெய் கூடிய சீக்கிரம் கெட்டுப் போய்விடும். துணி போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். அடி கனமாக இருக்கும் இரும்பு கடாயில் இதை காய வைப்பது தான் சரியான முறை. தடிமன் இல்லாத கடாயில் வைத்தால் சிக்கிரமே அடி பிடிக்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
24 மணி நேரம் கழித்து, ஒரு வடிகட்டியில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் விழுதினை போட்டு எண்ணெயை மட்டும் நன்றாகப் பிழிந்து வடிகட்டி எடுக்க வேண்டும். அந்த விழுதை வடிகட்டியில் போட்டு ஒரு 2 மணி நேரம் விட்டுவிடுங்கள் எண்ணெய் முழுவதும் தனியாக வடிந்துவிடும்.
எண்ணெயை கொதிக்க வைத்து தயாரித்த பின்பு, அந்த எண்ணெயின் அளவு சிறிது குறைந்திருக்கும். பரவாயில்லை. நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த எண்ணெயோடு, மீதம் எடுத்து வைத்துள்ள 1/2 லிட்டர் எண்ணெயையும் சேர்த்து விடுங்கள். அந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கண்ணாடி பாட்டிலில் உலரவைத்த செம்பருத்தி பூக்களை, போட்டு விட வேண்டும். செம்பருத்திப் பூக்கள் எப்பவும் அந்த எண்ணெயிலேயே இருக்க வேண்டும். இந்த எண்ணெயை தினம்தோறும் முடியின் வேர் பகுதியில் நன்றாக படும்படி தேய்த்து வரவேண்டும்.
Evion 400 என்ற மாத்திரையை வாங்கி அதன் உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம். முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சக்தி இந்த மாத்திரையில் அடங்கியுள்ளது. சிலபேர் செயற்கையாக இருக்கும் இந்த பொருளை கலக்கம் வேண்டாம் என்று நினைப்பார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு ஐந்து மாத்திரையில் உள்ள ஜெல்லை கலந்து கொள்ளலாம் தவறில்லை.
6 மாதம் தொடர்ந்து விடாமல் இந்த எண்ணெயை உங்கள் தலையில் தடவி வந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு. பொறுமை அவசியம் தேவை. கட்டாயம் உங்களது முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதில் எந்த சந்தேகமும் இல்லை.
‘நீங்கள் எதை போட்டு குளிப்பதால் இவ்வளவு அழகா இருக்கீங்க!’ இப்படி உங்களை அழகாகமாற்றப்போகும் இயற்கை குளியல் பொடியை தயார் செய்வது எப்படி?
நம்மைப் பார்த்து ஒருவர், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களது சருமம் மிக மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. என்ன சோப் யூஸ் பண்றீங்க?’ அப்படின்னு கேட்டா போதும். நம்முடைய மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிடும். இது எல்லோருக்கும் இயற்கையாக வரக்கூடிய ஒரு சந்தோஷம்தான். உங்களுடைய சருமமானது அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு மாறவேண்டும் என்றால், செயற்கையான சோப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையாகவே அழகு தரும் பொருட்களைப் பயன்படுத்தி குளிப்பது மிகவும் நல்லது. அப்படி ஒரு பொடியை தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பொடியை தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
பச்சைப்பயறு-1/2 kg
கஸ்தூரி மஞ்சள்-100g
பூலாங்கிழங்கு-100g
ஆவாரம்பூ-100g
காய்ந்த ரோஜா இதழ்கள்-100g
வெட்டி வேர்-100g
இதில் பச்சை பயிறு மட்டும் மளிகைக் கடையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். மற்ற பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் அல்லது நீங்களே கடையிலிருந்து ரோஜா பூவை வாங்கி உலர வைத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். வெட்டிவேரை வாங்கி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இவை அனைத்தையும் ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து தரும்படி வாங்கிக் கொள்ளவும்.
உங்கள் வீட்டில் எலுமிச்சை பழத் தோலை சேகரிக்க முடிந்தால், சேகரித்து, காய வைத்து பத்திலிருந்து பதினைந்து எலுமிச்சை தோள்களையும் இந்த கலவையோடு சேர்த்துக் அரைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியினை காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கண்ணாடி பாட்டிலிலோ, எவர்சில்வர் டப்பாவிலோ சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்.
தினம்தோறும் குளிக்க செல்லும் போது ஒரு ஸ்பூன் குளியல் பவுடரை சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை உடம்பு முழுவதும் உள்ளங் கைகளால் நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால் போதும். பிறந்த குழந்தையில் இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. சருமம் பளபளப்பாக மாறும்.
இதில் தேவையற்ற முடிகளை பெண் பிள்ளைகளுக்கு வளரவிடாமல் தடுக்கும் பூலாங்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளது. வியர்வை நாற்றம் வரவே வராது. சென்ட் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மாதம் மட்டும் தொடர்ந்து இந்த தூளை பயன்படுத்தி, குளித்து வந்தால் நல்ல வித்தியாசத்தை உணரமுடியும். சோப்பை தள்ளிவைத்துவிட்டு இதை பயன்படுத்தி தான் பாருங்களேன்!
அனைவரையும் வசீகரிக்கும் கண் இமைகளை, அடர்த்தியாக வளர்ப்பது எப்படி?
ஒருவருடைய முக அழகிற்க்கு வசீகரம் கொடுப்பது அவர்களுடைய கண்கள் தான். சில பேரது பார்வையானது வசீகரத் தன்மை கொண்டதாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் அவர்களுடைய கண் இமைகளும் தான். அதை பார்ப்பவர்களுக்கு ‘நமக்கும் இப்படி ஒரு அழகான கண் இமைகள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்’ என்ற எண்ணம் கட்டாயம் வராமல் இருக்காது. உங்களுக்கும் அழகான கண் இமைகள் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? சுலபமான இயற்கையான டிப்ஸ் இதோ!
நம்முடைய கண் இமைகள் ஒரு நாளைக்கு 0.15 மி.மீ வரைதான் வளரக்கூடியது. இப்படி வளரக்கூடிய இமை முடிகளானது 6 மாதங்களிலிருந்து ஏழு மாதங்களுக்குள் உதிர்ந்துவிடும். மீண்டும் முழுமையாக வளர ஆரம்பித்து, அழகாக மாறுவதற்கு ஏழிலிருந்து எட்டு மாதங்கள் ஆகி விடும். மற்றொரு குறிப்பு, தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம் கூட இமைகள் விரைவில் உதிர்ந்துவிடும். கெமிக்கல் கலந்த கண்மை மூலம் உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர வைப்பது என்பது மிகவும் கஷ்டம்.
கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்:
1. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவு சமமாக எடுத்து ஒன்றாக கலந்து, அந்த எண்ணெயை ஒரு சிறிய பஞ்சில் தொட்டு, உங்களின் கண் இமைகளுக்கு மேல் மெதுவாக தடவ வேண்டும். அதன் பின்பு நான்கு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த மூன்று எண்ணெய்களில் இருக்கும் புரதப் பொருள்களும், தாதுப்பொருட்களும் உங்களது கண் இமைகளை வலுவாகவும் நீளமாகவும் கருப்பாகவும் வளர செய்ய உறுதுணையாக இருக்கும். இந்த முறையை தினம் தோறும் பின்பற்றி வரலாம்.
2. வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ளே இருக்கும் திரவத்தை மட்டும் பிரிந்து தனியாக எடுத்துக்கொண்டு, அதில் சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து பஞ்சில் நனைத்து கண்கள் இமைகளுக்கு மேல் தடவிக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் இந்த எண்ணை கண்களின் இமைகளில் அப்படியே இருக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் இமைகளை அழகாக மாற்றிவிடும்.
3. வெண்ணை வகைகளில் ஷியா வெண்ணெய் என்று சொல்லப்படும் வெண்ணையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இந்த வெண்ணையை விரல்களில் லேசாக தொட்டு கண் இமைகளில் தடவ, கண் இமை முடி உதிர்வு குறையும்.
4. விளக்கெண்ணெயில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் அதிகம். இதன் மூலம் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். புருவம் அழகாக தடிமனாக வளர வேண்டும் என்றாலும் இந்த விளக்கெண்ணையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. கிரீன் டீ தூள் உங்களது வீட்டில் இருந்தால், அதை சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி அந்த நீரை கண்களின் இமைப் பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6. பாதி அளவு எலுமிச்சை தோலை, ஆலிவ் எண்ணையில் காலையிலேயே ஊற வைத்துவிட வேண்டும். பின்பு இரவு நேரத்தில் எலுமிச்சை பழ தோலுடன் சேர்த்து ஊற வைத்த அந்த ஆலிவ் எண்ணையை கண் இமைகளில் தடவி வர நல்ல பலன் உண்டு.
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக நீக்கிவிடலாம்! நிரந்தர தீர்வைத் தரும் குறிப்பு.
பெண்களுக்கு முகத்தில் இருக்கும் பூனை முடி பிரச்சனை பெரிய பிரச்சனை தான். ஹார்மோன் பிரச்சனையினால் ஏற்படக்கூடிய இதை நிரந்தரமாக, சிலநாட்களில் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி நீக்கலாம் என்பதைப் பற்றியும், இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றியும், இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சில நாட்களில் அதன் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இதற்கு தேவையான பொருட்கள்:
சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை பழம்-1 (சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்)
கடலை மாவு-1 டேபிள்ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்-1/2 டேபிள்ஸ்பூன்
பூலாங்கிழங்கு பொடி அல்லது கோரை கிழங்கு பொடி-ஒரு டேபிள்ஸ்பூன்.
முதலில் ஒரு சிறிய சில்வர் பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையும், எலுமிச்சை பழச் சாறையும், அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் விட்டு சூடுபடுத்த வேண்டும். ஆனால் அடுப்பில் நேரடியாக வைக்கக் கூடாது. Double boiling என்று சொல்லப்படும், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, அதன் மேல் இந்த சர்க்கரை எலுமிச்சை பழம் சாறு கலந்த கலவையை வைத்து, 2 நிமிடம் நன்றாக சர்க்கரை கரையும் வரை தயார் செய்து கொள்ளவும்.
அதன் பின்பு அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து வைத்து, அதில் கடலை மாவு ஒரு ஸ்பூன், பூலான் கிழங்கு பொடி அல்லது கோரைக்கிழங்கு பொடி இது மிகவும் அவசியமான ஒன்று, அதில் ஒரு ஸ்பூன். கஸ்தூரி மஞ்சள் 1/2 ஸ்பூன் இவைகளை நன்றாக சேர்த்து கலந்து தண்ணீர் பதமும் இல்லாமல், கெட்டி பதம் இல்லாமல் சர்க்கரை இறுகி பிசுபிசுப்புத் தன்மையோடு ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும்.(குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வேக்சிங் செய்யும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.)
ஆனால் இது அதிக அளவு சூட்டில் இருக்காது. அதை நம்முடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவி ஃபேனுக்கு அடியில் அமர்ந்து காயவைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கையில் எடுத்து முகத்தில் தடவுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். சிறிய பிரஷ் இருக்கும் பட்சத்தில் அதை உபயோகப்படுத்தி முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்து முகத்தில் இருக்கும் அந்த வேக்ஸ் பிசுபிசுப்பு தன்மையை அடையும். மறுபடியும் இரண்டாவது முறை அந்த கலவையை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக மூக்கின் மேல், உதட்டின் மேல் பக்கம், தாடை பகுதியில் பெண்களுக்கு இந்த தேவையற்ற முடி பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் மட்டும் தடவிக்கொண்டு கூட இந்த முறையை செய்து பார்க்கலாம்.
இதை போன்று 5 நிமிடம் கழித்து, மூன்று முறை உங்கள் முகத்தில் இந்த கலவையை தடவிக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்தவுடன் உங்கள் கைகளில் கொஞ்சம் தண்ணீரைத் தொட்டு எந்த இடத்தில் எல்லாம் முடி பிரச்சனை இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் உள்ளங்கைகளை லேசான அழுத்தம் கொடுத்து, வட்ட வடிவில் தேய்த்துக் கொடுக்து மசாஜ் செய்யவும். பிசுபிசுப்பு தன்மையுடன், அந்த வேக்ஸ் கலவையோடு சேர்ந்து, உங்கள் முகத்தில் இருக்கும் பூனை முடிகளும் நீங்கிவிடும்.
முதல்முறை இதை செய்யும் போதே நல்ல வித்தியாசத்தை உணரலாம். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ இதைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், நாளடைவில் முடி வளரும் இடங்களில் அந்த வளர்ச்சியானது முழுமையாக தடை படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பியூட்டி பார்லருக்கு போக முடியவில்லையா? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, 1/2 மணி நேரத்தில் ஃபேசியலை முடித்துவிடலாம்.
பெண்களுக்கு வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை. பியூட்டி பார்லர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தங்களுடைய முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது, என்று யோசித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்தே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தங்களுடைய முகத்தை, எப்படி ஃபேசியல் செய்வது போன்று அழகாக மாற்றி கொள்ளலாம் என்பதைப் பற்றி சுலபமான ஒரு குறிப்பை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஃபேசியலுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். வெளியில் சென்று எந்த பொருளையும் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமையலுக்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்தே இந்த ஃபேஷசியலை 1/2மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம்.
Step 1:
முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் மேக்கப்பை முழுமையாக நீக்க வேண்டும். வெறும் ஃபேரன் லவ்லி போட்டு இருந்தாலும் கூட, அதை முழுமையாக முகத்தில் இருந்து நீக்குவது அவசியம். இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயாக இருப்பது அவசியம். எண்ணெயை 1/2 ஸ்பூன் அளவிற்கு உள்ளங்கையில் விட்டு இரண்டு கைகளிலும் தேய்த்துக்கொண்டு, முகம் முழுவதிலும் நன்றாக மசாஜ் செய்தால் உங்கள் முகத்தில் இருக்கும் க்ரீம் அனைத்தும் சுத்தமாக நீங்கி விடும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. தேங்காய் எண்ணை போட்டு சுத்தம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது.
Step 2:
இரண்டு நிமிடம் தேங்காய் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்த பின்பு, சூடாக கொதிக்க வைத்த வெந்நீரில், ஒரு காட்டன் துண்டை நனைத்து, முகம் பொறுக்கும் அளவிற்கு முகத்திலிருந்து தேங்காய் எண்ணெயை துடைத்து எடுக்கவேண்டும். அதிகப்படியான சூட்டோடு முகத்தில் வைத்து விடாதீர்கள். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கும் தேங்காய் எண்ணையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சூடான அந்த காட்டன் துணி, தேங்காய் எண்ணெய் அனைத்தையும் முகத்திலிருந்து சுத்தமாக நீக்கி எடுத்து விடும்.
Step 3:
அதன் பின்பு காய்ச்சாத பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை 10 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் தேன் இருந்தால் அந்த பச்சை பாலுடன் சிறிதளவு தேன் கலந்து கொள்ளலாம். அந்த காய்ச்சாத பாலை உங்களது முகம் உறிஞ்சும். காயக்காய மூன்று முறை முகத்தில் தடவிக் கொண்டே இருக்கலாம்.
Step 4:
அதன்பின்பு தக்காளியை இரண்டாக வெட்டி, கொஞ்சம் சர்க்கரையை அந்த தக்காளியில் தொட்டு உங்கள் முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து கொடுக்கவேண்டும். லேசாக மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து கொள்ளலாம்.
Step 5:
அடுத்ததாக உங்களிடம் ‘பீல் க்ரீம்’ ஏதாவது இருந்தால் மூக்கின் மேல், தாடைப் பகுதி, உதட்டின் கீழ் பகுதியில் அப்ளை செய்தால், இந்தப் பகுதிகளை சுத்தம் செய்துகொள்ளலாம். அப்படி வீட்டில் இந்த க்ரீம் இல்லாதவர்கள், ஸ்பூலின் கீழ் பகுதியை, லேசாக மூக்கில் அழுத்தம் கொடுத்து எடுத்தால், அந்த பிளாக் டெட் செல்ஸ், ஒயிட் டெட் செல்ஸ் எல்லாம் வெளியில் வந்துவிடும். (அதாவது இடது கையால் உங்களது மூக்கை அழுத்தி பிடித்துக் கொள்ளுங்கள். வலது கையை வைத்து, ஸ்பூனில் லேசாக அழுத்தி எடுக்கும்போது குட்டி குட்டி முடிகள் எல்லாம் வெளியில் வந்துவிடும்).
Step 6:
அதன்பின்பு கோதுமை மாவு, ஒரு ஸ்பூன், காபி பவுடர் அரை ஸ்பூன், தக்காளி விழுது, இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்டாக தயாரித்து கொள்ள வேண்டும். அந்தக் கலவையை முகம் முழுவதும் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளவேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிப் பாருங்கள். பியூட்டி பார்லர் சென்று ஃபேசியல் செய்துகொண்ட அதே பொலிவு உங்கள் முகத்தில் தெரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேற்குறிப்பிட்ட குறிப்புகள் அனைத்தையும் உங்களுடைய கழுத்துப் பகுதியிலும் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களுடைய முகம் எப்போதெல்லாம் பொலிவிழந்து காணப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறுநீரக பாதிப்பை தவிர்க்க அதிகம் சாப்பிடக்கூடாத அந்த 8 பொருட்கள் எவையெல்லாம் தெரியுமா?
நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருப்பது சிறுநீரகம். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை, நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுவது சிறுநீரகம் தான். உடலின் திரவநிலை மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் முக்கிய பணியாற்றுவது சிறுநீரகம். அத்தகைய சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாவிட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு எந்தெந்த உணவு பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதைப்பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.
நவநாகரிக உலகத்தினர் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட மறுப்பது சிறுநீரக பிரச்சனைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. புதுமை என்கிற பெயர்களில் உடலுக்கு ஒவ்வாத கண்ட கண்ட உணவுகளை உட்கொண்டு உடல் உறுப்புகளை பாதிப்படைய செய்கின்றனர். பாதிப்பு ஏற்பட்ட பின்னர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றனர். இதற்கு உணவு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாக அமைகிறது. எத்தகைய உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் அதிக அளவு புரோட்டீன் மற்றும் குறைவாக இருக்கும் சோடியம் சிறுநீரக கற்களை உருவாக்கும். எனவே இறைச்சி வகைகளை பதப்படுத்தப்பட்ட/பதப்படுத்தி உபயோகப்படுத்தக் கூடாது.
பழுப்பு அரிசி என்னும் ஒருவகை அரிசி உடலுக்கு நன்மைகள் செய்தாலும் சிறுநீரகத்திற்கு இது நல்லதல்ல. இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் அளவு சிறுநீரகத்தை பாதிக்கக் கூடிய தன்மையுடையது. எனவே பழுப்பு அரிசியை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
அதிகம் பொட்டாசியம் நிறைந்துள்ள உணவு பொருட்களை அளவாக உட்கொள்வது தான் நல்லது. மேலும் உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவையும் கட்டுப்படுத்துவது சிறுநீரக பாதிப்பை தவிர்ப்பதற்கு துணை செய்யும். இவை அளவிற்கு மீறினால் சிறுநீரகம் நஞ்சாகிவிடும். பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள அவகோடா பழத்தை அளவிற்கு அதிகமாக சேர்க்காமல் இருப்பது நல்லது. இதில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரகத்தில் அடைப்பை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு பொட்டாசியம் அதிக அளவு கொண்டிருந்தாலும் அதை வேக வைத்து சமைக்கும் போது அதில் இருக்கும் பொட்டாசியத்தின் அளவு பாதியாக குறைந்து விடுகிறது. எனினும் உருளைக்கிழங்கை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது சிறுநீரகத்திற்கு நல்லது.
பேக் செய்யப்பட்ட சூப் வகைகளையும், காய்கறிகளையும் அன்றாட உணவில் சேர்ப்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது போன்ற அடைக்கப்பட்ட பொருட்களில் இருக்கும் சோடியம் மற்றும் உப்பின் அளவு சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.
பொதுவாகவே தக்காளிப்பழத்தை விதை நீக்கி உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. இவ்வகையில் தக்காளி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் அளவு சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக கற்களை உருவாக்குவதில் பங்கு கொள்கிறது. எனவே தக்காளிப்பழத்தை அளவிற்கு அதிகமாக உணவில் சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
வாழைப்பழம் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாழைப்பழத்தில் இருக்கும் சோடியத்தின் அளவு குறைவு என்றாலும் இதில் இருக்கும் பொட்டாசியத்தின் அளவு மிக அதிகம். ஒரு வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. எனவே வாழைப் பழத்தை அதிக அளவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழங்களில் இருக்கும் பொட்டாசியத்தின் அளவு சிறுநீரக செயல்பாட்டிற்கு பாதிப்பை உருவாக்க வல்லது. இதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கும் மற்ற சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவையாக இருந்தாலும், பொட்டாசியம் சிறுநீரகத்தை பாதிக்கும். குறைந்த அளவில் மற்றும் தேவையான அளவில் இவற்றை எடுத்து கொள்ளுங்கள். அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்வது நல்லதல்ல.
மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து உணவு பொருட்களும் உடலுக்கு நன்மைகளை செய்யக் கூடியவை. எனினும் அதில் அடங்கி இருக்கும் பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் அளவு சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. அதற்காக முற்றிலும் தவிர்த்துவிடக் கூடாது. தேவையான அளவு கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் உங்களது சிறுநீரகத்தையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். இன்று சிறுநீரகத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே எந்த உணவையும் சீரான விகிதத்தில் எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
மூக்குத்தி பூச்செடிக்கு இத்தனை மகத்துவமா? இது தெரிந்தால் இந்த செடியை, ரோட்டோரத்தில் யாரும் விட்டு வைக்கவே மாட்டார்களே!
மூக்குத்தி பூச்செடி என்றால் பல பேருக்கு தெரியாது. தாத்தா தலைவெட்டி பூ என்றால் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் இந்தப் பூவை வைத்து சிறுவயதில் விளையாடியதை யாரும் கண்டிப்பாக மறக்க முடியாது. ஆனால் இந்தச் செடிக்கு இத்தனை மகத்துவம் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் இந்த செடியை ரோட்டோரத்தில் விட்டு வைத்திருப்பார்களா? அப்படி என்னதான் இந்த செடிக்கு மகத்துவம் இருக்கிறது என்பதைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?
இந்தச் செடியை பற்றிய மகத்துவத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் இந்த செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் இந்தச் செடியில் இருக்கும் காயை சாப்பிட கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மூக்குத்திப்பூ செடியானது மஞ்சள் நிறப் பூ, வெள்ளை நிறப் பூ, ஊதா நிற பூ என்ற மூன்று விதமான நிறங்களில் பூக்கும் செடிகள் மூன்று வகையில் உள்ளது.
தலைவலிக்கு நிவாரணம்:
இந்த மூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப் பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இரத்த காயத்திற்கு மருந்து:
நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும்.
நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்திப்பூ இலை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனையான தேமல் சொறி இவைகள் சரியாக இந்த மூக்குத்தி பூ இலையின் சாரை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.
முட்டி வலி நீக்கும்:
இந்த மூக்குத்தி பூ செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். கை மூட்டு வலியா இருந்தாலும் சரி. கால் மூட்டு வலியா இருந்தாலும் சரி.
ரோட்டோரத்தில் இதுநாள்வரை நாம் கவனிக்காமல் இருந்த இந்த ஒரு செடிக்கு இத்தனை மகத்துவமா? கொஞ்சம் ஆச்சரியப்படக் கூடிய விஷயம்தான். நம் கண்களுக்கு தெரியாமல் எத்தனையோ விஷயங்கள், இன்னும் எந்தெந்த பொருட்களில் மறைந்துள்ளதோ! மறைந்த முன்னோர்களுடன் சேர்த்து, இப்படிப்பட்ட பலவகையான அற்புதமான மருத்துவ குறிப்புகளும் மறந்தே போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
நீண்ட நாட்களாக உங்களுடைய பற்களில் இருக்கும் பழுப்பு நிறத்தையும், படிந்திருக்கும் கறையையும் முழுமையாக நீக்க வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ்.
நம்முடைய முகத்தை அழகுபடுத்த கூடிய விஷயம் என்றால் அது சிரிப்பு. அந்த சிரிப்பை மேலும் அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் நம்முடைய பற்கள் வெண்மை நிறமாக, அழகாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் வாயைத் திறந்து சிரிக்க வேண்டும் என்ற எண்ணமே வரும். இல்லாவிட்டால் பல்லின் பழுப்பு நிறமும், கறையும் எங்கே வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிரிக்காமலே விட்டுவிடுவோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? உங்களின் பற்கள் பழுப்பு நிறமாகவும் கறைபடிந்ததாகவும் இருக்கிறதா? உடனே மாற்றிவிடலாம். இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
நீங்கள் அதிகமாக காஃபி அல்லது தேநீர் குடிப்பவர்களாக இருந்தால், உங்களது பற்கள் வெண்மை நிறத்தை சீக்கிரமாக இழந்துவிடும். காபியோ, தேநீரோ குடித்த பின்பு வாயை தண்ணீர் ஊற்றி நன்றாக கொப்பளித்து விடவேண்டும். இதே போன்று நிறம் ஒட்டும் காய்கறிகள், பழவகைகளை சாப்பிட்ட பின்பு வாயை முறையாக சுத்தம் செய்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக தக்காளி சாஸ், சோயா பீன்ஸ், பீட்ரூட் இந்த பொருட்கள் எல்லாம் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இயற்கையான பொருட்களை வைத்து நம்முடைய பற்களின் பழுப்பு நிறத்தை சுலபமாக போக்கிவிடலாம். கல் உப்பை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். பற்களில் மட்டும் நறநறவென்று தேய்த்தால், பற்களில் இருக்கும் பழுப்பு நிறம் நாளடைவில் நீங்கிவிடும். ஈறுகளில் தேய்த்து விடக் கூடாது.
இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பாக ஆரஞ்சு பழத்தோலை பற்களில் நன்றாகத் தேய்த்து, அப்படியே தூங்கி விட வேண்டும். மறுநாள் காலை எழுந்து பற்களை எப்போதும் போல் சுத்தம் செய்வதன் மூலம் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கி பற்கள் வெண்மை நிறத்தை அடையும். இதேபோல் எலுமிச்சை பழத் தோலையும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் இந்த இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பற்களை தேய்த்து வந்தால் பல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.
தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் அடைந்து நம்முடைய பற்கள் வெண்மை நிறத்தை அடையும். சில பேருக்கு உடலில் வைட்டமின் சத்து குறைவு காரணமாக கூட பல் மஞ்சள் நிறமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்லிற்கு மிகவும் நல்லது.
கொஞ்சம் வேப்ப இலைகளை எடுத்து சிறிதளவு பால் ஊற்றி நன்றாக அரைத்து நீங்கள் தேய்க்கும் பேஸ்ட்டோடு கலந்து, பல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி பற்கள் அழகாக மாறும்.
பேக்கிங் சோடாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, பேஸ்ட் உடன் கலந்து பல் தேய்த்தால் பல் வெண்மை நிறமாக மாறும். ஆனால் இதை தினம்தோறும் பயன்படுத்தக்கூடாது. பல் உடைந்து போக வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெற்றிலை பாக்கு போட்ட கறை, பீடா போட்ட கறை உங்கள் பற்களில் வெகு நாட்களாக தங்கி இருந்தால், வெதுவெதுப்பான நீரில், பொட்டாசியம் பர்மாங்கனேட் என்னும் வேதிப்பொருளை கலந்து வாயைக் கொப்புளிக்க வேண்டும். இந்த வேதிப்பொருளானது தண்ணீரில் கலந்தவுடன் அந்த தண்ணீர் ஊதா நிறமாக மாறிவிடும். அந்த தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்து, பின் கறை உள்ள இடங்களை பிரஷில் மெதுவாக தேய்த்தால் கறை முழுமையாக நீங்கி உங்களது பற்கள் பழைய நிலைமைக்கு வந்து விடும். இந்த வேதிப்பொருளை தண்ணீரில் கலக்கும் போது தண்ணீர் உவர்ப்பு தன்மையாக மாறிவிடும்.
தண்ணீரில் இந்த வேதிப்பொருளை அதிகமாக கலந்துவிட வேண்டாம். அப்படி கலக்கும் போது தண்ணீர் அடர் ஊதா நிறத்திற்கு மாறிவிடும். தண்ணீரில் இருக்கும் உவர்ப்பு தன்மை அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உஷாராக இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளையும், முகப்பருவினால் ஏற்பட்டிருக்கும் சின்ன சின்ன பள்ளங்களையும் 7 நாட்களில் போக்கக்கூடிய உளுந்து!
சில பேருக்கு முகத்தில் பரு வந்து வந்து போகும். ஆனால் அந்த பருவினால் ஏற்படக்கூடிய கருதிட்டும், கரும்புள்ளியும் நிரந்தரமாக முகத்திலேயே தங்கிவிடும். இன்னும் சில நாட்கள் கழித்து பார்த்தால், அந்த இடத்தில் சின்ன சின்ன பள்ளங்கள் உண்டாகி முகம் முழுவதும் அழகு குறைய கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் பெண்களும், ஆண்களும் பல வகையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பல வகையான அழகு சாதன பொருட்களை வாங்கி அந்த பள்ளங்களை மறைத்தாலும், அது நிரந்தரமான தீர்வாகாது.
பலவகையான செயற்கை க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்தினாலும் முகத்தில் அழகு கூடுவது போல தெரியும். ஆனால், சில நாட்களில் மீண்டும் அந்த கரும்புள்ளிகளும், பள்ளங்களும் வெளியில் தெரிய ஆரம்பித்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வு ஒன்று உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான பொருள். கருப்பு உளுந்து இரண்டு ஸ்பூன், அதை ஊறவைக்க தேவையான அளவு பசும்பால். பசும்பால் இல்லாதவர்கள் பாக்கெட் பாலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். காய்ச்சாத பாலை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே 2 ஸ்பூன் கருப்பு உளுந்தில் சிறிதளவு பால் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலை பாலோடு சேர்த்து அந்த கருப்பு உளுந்தையும் மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகம் முழுவதும் கீழிருந்து மேல் பக்கமாக தடவி விட்டு, ஐந்து நிமிடங்கள் வரை உங்களது கை விரல்களால் நன்றாக தேய்த்து முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு முகத்தில் பூசப்பட்டு இருக்கும் அந்த விழுது நன்றாக காய்ந்து, தோல் இருக்கும் நிலை வர வேண்டும்.
1/2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம். தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 7 நாட்களில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். கரும்புள்ளியும், பள்ளங்களும் சிறிதளவு குறைந்த பின்பு, வாரத்திற்கு இரண்டு முறை இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவது நல்லது.
முகத்தில் கரும்புள்ளிகளும் பருக்களும், பள்ளங்களும் வருவதற்கு முதல் காரணம் நாம் அதிகப்படியான தண்ணீரை பருகாமல் இருப்பது தான். எவ்வளவு தண்ணீரைப் குடிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய தோலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் காத்துக்கொள்ளலாம். குறிப்பாக வெயில் காலங்களில் அதிகமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
பின்குறிப்பு: கருப்பு உளுந்து கிடைக்காதவர்கள் வெள்ளை உளுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விழுதை ஒரு நாள் தயார் செய்துவிட்டு, அதை பிரிட்ஜில் சேகரித்தும் வைத்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருக்கும் விழுதை பயன்படுத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியில் வைத்து அரை மணி நேரம் கழித்து, அதன் குளிர்ந்த தன்மை குறைந்த பின்பு, முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
இரவு நேரத்தில்தான் உளுந்தை ஊற வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் காலை நேரத்தில் முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி கொள்ள முடியாவிட்டால், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஆனால், உளுந்து பாலில் ஐந்து மணி நேரம் ஊற வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் உங்களது அழகை குறைகின்றதா? அப்போ உடனே இதை பண்ணுங்க!
நம்மில் பல பேருக்கு முகம் வெள்ளை நிறமாக அழகாக இருந்தாலும், கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் நிறைந்ததாக இருக்கும். உடல் முழுவதும் மாநிரத்திலிருந்து, கழுத்து, சற்று கருப்பு நிற தோற்றத்தில் இருந்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால் சிலபேருக்கு கழுத்தில், கருமை நிற வர்ணம் பூசியது போல் பளிச்சென்று வெளியில் தெரியும் இந்த பிரச்சனை பாடாய் படுத்தி எடுக்கும். அழகு என்பது வெறும் வெளித்தோற்றத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமல்ல. தன்னம்பிக்கையை அதிகமாகும் ஒரு தன்மையும் இந்த அழகுக்கு உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் அழகை சற்று கூட்டிக் கொண்டால் என்ன தவறு இருக்கிறது? உங்களுக்கும் கழுத்தில் கருநிற சரும பிரச்சனை உள்ளதா? அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேன், எலுமிச்சை, சர்க்கரை இந்த மூன்று பொருட்களுக்கும் சருமத்தை அழகாக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. ஆகவே தேன் ஒரு சிறிய மூடி அளவு, எலுமிச்சைசாறு ஒரு சிறிய மூடி அளவு, சர்க்கரை 1/2 ஸ்பூன், என்ற அளவில் ஒன்றாகக் கலந்து கழுத்துப்பகுதியில் போட்டு தினம்தோறும் பத்து நிமிடங்கள் வரை லேசாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். ஒரு வாரத்திலேயே நல்ல பலன் உள்ளதை உங்களால் கண்கூடாக காணமுடியும். இந்த முறையை கை முட்டி, கால் முட்டி போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து, இரவுநேரங்களில் கழுத்தில் போட்டு பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, அப்படியே தூங்கி விடவேண்டும். மறுநாள் காலை அதை கழுவிக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர 10 நாட்களில் கருமை நிறம் முழுமையாக உங்கள் கருத்தை விட்டுப் போய்விடும். இந்த கற்றாழைக்கு குளிர்ச்சி தன்மை அதிகம். அடிக்கடி சளி காய்ச்சல் வருபவர்கள் பகலிலேயே இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே முறையை கை முட்டி, கால் முட்டி கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிலபேர் பார்ப்பதற்கு ரோஜா பூ போல அழகாக மென்மையான சருமத்தை கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் வெயிலில் சென்றால் போதும் சூரியனின் வெப்பம் பட்டு முகம் உடனே கருநிறமாக மாறிவிடும். சன் டேன் என்று சொல்லுவார்கள் அல்லவா? அதாவது உடம்பில் சூரியனின் ஒளி நேரடியாக படும் பாகம் ஒரு நிறமாக இருக்கும். சூரிய ஒளி படாமல் இருக்கும் பகுதி ஒரு நிறமாக இருக்கும். சூரியனின் ஒளி பட்டு நம்முடைய சருமம் கருமை நிறம் அடைந்தால், அந்த இடங்களில் எல்லாம் ஆலிவ் எண்ணையை போட்டு நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து, அதன் பின் குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் சூரிய ஒளி கதைகளின் மூலம் நம்முடைய சருமம் பாதிப்படையாமல் இருக்கும்.
சில பேருக்கு முகத்தில் இருக்கும் தோலின் நிறத்திற்கும், கழுத்தில் இருக்கும் தோலின் நிறத்திற்கு வித்தியாசம் தெரியும். கரு நிறம் இருக்காது. ஆனால் முகத்தில் இருக்கும் நிறத்தை விட கழுத்துப்பகுதி நிறம் சற்று மாறி இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆலிவ் ஆயிலுடன், லெமன் ஜூஸ் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும். ஆலிவ் ஆயில் ஒரு மூடி எடுத்துக்கொண்டால், லெமன் ஜூஸையும் ஒரு மூடி எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் சம அளவு சேர்த்து தினந்தோறும் மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் எந்த நிறத்தில் இருக்கிறதோ, அதே நிறத்தில் உங்களது கழுத்துப்பகுதியும் மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
முகம் கை கால் சருமம் எல்லா இடங்களிலும் சில சமயங்களில் அழுக்கு நிறைய சேர்ந்து இருக்கும். அதாவது தினமும் குளித்து வந்தாலும் கூட, வெளியில் சுற்றித் திரியும் சமயங்களில், வீட்டில் இருந்தாலும் கூட வியர்வை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட சமயத்தில், எலுமிச்சைச்சாறு எந்த அளவு எடுத்துக்கொள்கிறீர்களோ, அதே அளவு தண்ணீரை அந்த எலுமிச்சைச் சாறுடன் கலந்து அந்த தண்ணீர் மூலம் உடல் முழுவதும் நன்றாக மசாஜ் செய்து குளித்தால் உடம்பில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதாவது சுற்றுச்சூழலில் மாசுபாட்டால் உடலில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொருட்களையெல்லாம் சமையலுக்காக வாங்கி, முன்கூட்டியே வீட்டில் வைக்கக் கூடாது. விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் அந்தப் பொருள்கள் என்னென்ன?
நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த சில வழிமுறைகளை, மூடப்பழக்கம் என்று சொல்லி, சில நல்ல விஷயங்களைகூட நம் இஷ்டத்துக்கு தவறான முறையில் மாற்றிவிட்டோம். ஆனால் அந்த விஷயங்களை அவர்கள் எதற்காக அப்படி சொல்லி வைத்துள்ளார்கள் என்பதை சற்று சிந்தித்து இருந்தால், இன்றைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களில் இருந்து தப்பித்து இருக்கலாமோ? என்று கூட சிந்திக்க வைக்கிறது. ஏனென்றால், சில வருடங்களுக்கு முன்னால் இல்லாத பிரச்சினைகள் எல்லாம் சமீபகாலமாக அதிகப்படியாக தலை விரித்தாட காரணம் என்ன இருக்கும்? என்றாவது சிந்தித்து உள்ளீர்களா! நம்முடைய பழக்க வழக்க முறைகளை நாம் மறந்து வருவது தான் காரணம். பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் சற்று பின்நோக்கி செல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
நம்முடைய முன்னோர்கள் சில வகையான காய்கறிகளை முன்கூட்டியே வாங்கி சமையல் அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலை சமைக்கக் கூடாது என்று சொல்லி உள்ளார்கள் அது எதற்காக என்பதை பற்றியும், அந்த காய்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வரிசையில் முதலில் பார்க்கப்போவது பாகற்காய். பாகற்காயை சமைக்க வேண்டும் என்று நினைத்தால் அன்றைய தினம் காலை வேளையில் வாங்கி, மதிய நேரத்திற்கு உடனடியாக சமைத்து விட வேண்டும். கசப்புத்தன்மை கொண்ட பாகற்காயை சமைக்காமல் இரவு நேரத்தில் வீட்டில் வைக்கக் கூடாது. வீட்டில் ஏற்படும் கஷ்டத்திற்கு இந்த பாகற்காயில் இருக்கும் கசப்பு, கூட ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள் நமக்காக சொல்லப்பட்ட குறிப்பு தான் இது. முடிந்தவரை பாகற்காயை சமைக்காமல் ஒரு நாள் இரவு கூட உங்கள் வீட்டில் தங்க விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அடுத்ததாக வெள்ளை பூசணி. இந்தப் பூசணியை வீட்டில் சமைப்பதற்காக யாரும் முழுமையாக வாங்கமாட்டார்கள். அதாவது அதை வெட்டி அதில் இருந்து ஒரு துண்டு மட்டும் வாங்கி தான் வீட்டு சமையலில் பயன்படுத்துவார்கள். பொதுவாகவே இந்த பூசணியை திருஷ்டி கழிப்பதற்காக பயன்படுத்துவார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இப்படியிருக்க கெட்ட சக்திகள் அனைத்தையும் தன் வசம் ஈர்க்கும் அந்தப் பூசணியை வாங்கி, ஒரு நாள் இரவு முழுவதும் நம் வீட்டில் வைத்து விட்டோமேயானால் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தையும் அந்த பூசணி ஈர்த்துக்கொள்ளும். மறுநாள் காலையில் அதை அப்படியே சமைத்து உண்டால் என்ன ஆகும்? புரிகிறதா! முடிந்தவரை வெள்ளை பூசணியை வாங்கி வைத்து விட்டு மறுநாள் சமைப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். அமாவாசை அன்று நம்மில் பலபேர் வீட்டில் இந்த வெள்ளை பூசணி சாம்பார் செய்வோம். முடிந்தவரை அன்றைய நாள் காலையில் வாங்கி, அன்றைய தினமே சமைத்து தீர்த்து விடுங்கள் அதுதான் நல்லது.
அடுத்ததாக முருங்கைக்கீரை. கட்டாயம் இதை வாங்கிய அன்றைய தினமே தான் சமைக்க வேண்டும். அடுத்த நாள் எடுத்து வைத்து சமைக்கும் பட்சத்தில் வீட்டில் கஷ்டம் உண்டாகும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. நேரமின்மை காரணமாக அடுத்த நாள் சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால்கூட, வாங்கிய முருங்கைக்கீரையை சுத்தம் செய்யாமல், காம்போடு நம் வீட்டில் கட்டாயமாக இரவில் வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்! என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் முருங்கைக்கீரை மரத்திலிருந்து உடைக்கப்பட்ட பின்பு, அதன் தன்மை ஒரு நாள் கழித்து மாறிவிடும்.
அதாவது முருங்கைக் கீரையில் இருக்கும் நல்ல சத்தானது குறைந்து போகும். உடலில் தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தி விடும் என்பதற்காகத்தான். முதல்நாள் உடைத்த முருங்கைக்கீரையை சிலசமயம் அடுத்தநாள் சமைத்து சாப்பிடும்போது, வயிற்றுப்போக்கு வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆன்மீக ரீதியாக இருந்தாலும் சரி, அறிவியல் ரீதியாக இருந்தாலும் சரி. முருங்கைக் கீரையை வாங்கி முடிந்தவரை அன்றையதினமே சமைக்க பாருங்கள். இல்லாவிட்டால் அதை காம்பிலிருந்து முறையாக உறுவி, சுத்தம் செய்து உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சில கிராமங்களில் பார்த்திருக்கலாம். முதல் நாள் மாலை நேரத்தில் முருங்கைக் கீரையை, மரத்திலிருந்து உடைத்து எடுத்து வந்து, சுத்தம் செய்து வைத்துவிட்டு, மறுநாள் காலையே சமைத்து விடுவார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் அப்படி இல்லை. சில நேரம் முன்னால் காலை வாங்கிய முருங்கைக்கீரையை, அடுத்த நாள் காலை சமைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முடிந்தவரை முருங்கைக்கீரையை அன்றைய தினமே சமைப்பதுதான் நல்லது என்ற கருத்தை முன் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் இத்தனை பயன் உள்ளதா?
தண்ணீர் என்பது தாகத்தை தணிப்பதற்கு மட்டும் குடிப்பது அல்ல. இந்த தண்ணீரை முறையாக குடித்துவந்தால் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகள் தீரும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. இந்த உலகத்தில் அதிக சுறுசுறுப்பை கொண்ட நாடு என்றால் அது ஜப்பான். ஜப்பானியர்கள் எப்படி சுறுசுறுப்பாக செயல்படுகிறார் என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? தினந்தோறும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அவர்கள் குடிக்கும் 2 டம்ளர் தண்ணீர் தான் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பார்களாம். நீங்களும் தினம்தோறும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் மட்டுமே அதன் அருமை பெருமைகளை உங்களால் உணரமுடியும்.
குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்கிறது ஆரோக்கியம் பற்றிய ஒரு ஆராய்ச்சி. சரி. இந்த தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் 10 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா.
1. குடல் சுத்தம்:
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நம்முடைய குடல் சுத்தம் செய்யப்படுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை காலை கடனில் வெளியேற்றி விட்டோமேயானால் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றப்படும் மலம் சிக்கலில்லாமல் வெளியேறினால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை குறிக்கும். உடல் உபாதை வரப்போகிறது என்பதை குறிக்கும் அறிகுறி தான் மலச்சிக்கல்.
2. உடல் நச்சுக்களை வெளியேற்றும்:
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீரானது நம்முடைய குடலை மட்டும் சுத்தம் செய்வது இல்லை. நம்முடைய உடம்பில் இருக்கும் எல்லா வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு. உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேறிவிடும். தண்ணீரை எவ்வளவு அதிகமாக பருகுகின்றோமோ, அவ்வளவு சிறுநீர் கழிவு வெளியேறும். அந்த சிறுநீரில் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. நன்றாக பசி எடுக்கும்:
உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி விட்டால் பசியின் தன்மை அதிகரிக்கும். நன்றாக உணவைச் சாப்பிடுவோம். உடல் ஆரோக்கியம் பெறும். இதோடு மட்டுமல்லாமல் நச்சுக்கள் இல்லாத உடம்பில் நாம் சாப்பிடும் உணவுப் பண்டங்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் முழுமையாக சேரும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4. தலைவலி நீங்கும்:
இன்றைய சூழ்நிலையில் அன்றாட வாழ்வில் வரக்கூடிய ஒரு பிரச்சனை தலைவலி. இந்த தலைவலியானது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவினால் தான் வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. அதிகாலை வேளையில் எழுந்தவுடன் தினந்தோறும் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்து பாருங்கள். உங்களுக்கு தலைவலி குறையும். காலப்போக்கில் தலைவலியே வராது என்பதும் உண்மையான ஒன்று. ஆனால் இந்த பழக்கத்தைத் தொடர்ந்து செய்து பார்த்தால்தான் உங்களால் பலனை அடைய முடியும்.
5. அல்சர்:
குடல்புண் என்று சொல்லப்படும் இந்த அல்சரை வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. காலையில் உணவு அருந்தாமல் இருப்பவர்களுக்கு கூட, வெறும் தண்ணீர் மட்டுமாவது குடித்துக் கொள்ளுங்கள். அல்சர் வராமல் தடுக்க முடியும்.
6. மெட்டபாலிசம் அதிகரிக்கிறது:
நாம் உண்ணும் உணவு விரைவாக ஜீரணம் ஆவதற்கு இந்த மெட்டபாலிசம் உதவியாக உள்ளது. இதன் மூலம் நாம் உண்ணும் உணவு விரைவாக ஜீரனிக்கப்பட்டு, உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் விரைவாக உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. (குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதன் மூலம் 24% மெட்டபாலிசம் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது)
7. ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கப்படும்:
தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதன் மூலம் நம்முடைய உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.
8. உடல் எடையை குறைக்கும்:
வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடலில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்க படுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை அது குறைத்துவிடும்.
9. முக அழகு கூடும்:
பொதுவாகவே குடல் சுத்தம் இல்லை என்றால் தான் முகத்தில் முகப்பரு ஏற்படும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. தினம்தோறும் தண்ணீரை குடித்து உடலை சுத்தமாக வைத்திருந்தால் முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் மூலம் நம்முடைய தோலும் மென்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
10. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது:
நம்முடைய உடலுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மையும் இந்த தண்ணீருக்கு உண்டு.
முடிந்தவரை காலை எழுந்தவுடன், பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில், இரண்டு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் பருகி பாருங்கள். அதிலும் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இப்படி ஒரு வைத்தியம் இருக்கிறது என்று தெரிந்தும் இதை கடைப்பிடிக்காமல் நாம் ஏன் இருக்கவேண்டும்? சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும்! மருத்துவச் செலவை குறைத்துக் கொள்ளலாம்.
என்ன செய்தாலும் முடி உதிர்வு நிற்கவில்லையா? முடி வளரவில்லையா? இதோ தீர்வு!
அந்த காலங்களில் எல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்படும். சொல்லப்போனால் வயது முதிர்ந்தாலும், நரைமுடி வருமே தவிர பெருசா வழுக்கை ஒன்றும் விழாது. ஆனால் காலம் மாறிவிட்டது. வளர்ந்து வரும் இந்த கால கட்டத்தில், நம்முடைய உடல் சூழ்நிலையும் மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த முடி உதிர்வு பிரச்சனை, ஒரு பெரிய பிரச்சனை தான்.
வீட்டை கூட்டி சுத்தம் செய்தால் குப்பை வருகிறதோ இல்லையோ? அந்த குப்பையில் முடி தான் வரும். முடி உதிர்வு பிரச்சனை இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக தான் இருந்து வருகிறது. இதற்கு தீர்வே கிடையாதா! என்று, புலம்பி கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கப்போகிறது.
முடி உதிர்வுக்கான முதல் காரணம் மன அழுத்தம். அதிகப்படியான வேலைப்பளு, டென்ஷன் காரணமாகவும், அதிகப்படியாக மூளையை கசக்கி சிந்திப்பதன் மூலமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. அதன்பின்பு, நம்முடைய சுற்றுச்சூழல் மாசு. இந்த சுற்றுச்சூழலின் மூலம் தலைமுடி அதிகமாக பாதிப்பு அடைகிறது. அடுத்ததாக நாம் குளிக்கின்ற தண்ணீர். சில பேருக்கு தண்ணீர் மாறினால் கூட தலையிலிருந்து முடி உதிரும். இப்படியாக முடி உதிர்வுக்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எது எப்படியாக இருந்தாலும், முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்ய இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்.
அந்த பொருள் சின்னவெங்காயம். சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் என்னும் வேதிப்பொருள் முடிஉதிர்வை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. முதலாவதாக இந்த சின்ன வெங்காயத்தில் இருக்கும் சாறை எடுத்து, 5 நிமிடங்கள் தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு, முடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட்டு, முடி அடர்த்தியாக வளர வழிவகை செய்கிறது.
அதாவது நாம் தலையில் தேய்க்கும் எண்ணெய்க்கு பதிலாக, எந்தவித செயற்கையான கலப்படமும் இல்லாத, இந்த சின்ன வெங்காய சாற்றினை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, பிழிந்து எடுத்தால் சின்ன வெங்காய சாறு கிடைத்துவிடும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். இதை எண்ணைக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக, சின்ன வெங்காயத்தை எடுத்து வெண்ணீரில் போட்டு, வேக வைத்து அதன் பின்பு அதிலிருந்து சாறை வடிகட்டி எடுத்து, அந்த நீரினை தலையில் நன்றாக மசாஜ் செய்து ஊற வைத்து, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளித்து விட்டால் போதும். ஒரே மாதத்தில் பாருங்கள்! உங்களது முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளரும். முடி உதிர்வு பிரச்சினைக்கு இந்த சின்ன வெங்காயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடம் பிடிக்கும் சுட்டி குழந்தை சமத்தாக சாப்பிட வேண்டுமா? இதோ சூப்பரான 3 ஆன்மீக டிப்ஸ்.
பல தாய்மார்களுக்கு இன்று இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது தான். என்ன செய்தாலும் சாப்பிட மட்டும் வாயை திறப்பதில்லை. சாப்பிடாமல் அடம் பிடித்துக் கொண்டே இருக்கும். என்னதான் வெளியே சென்று வேடிக்கை காட்டி ஊட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. சாப்பாடு காய்ந்து தான் போகுமே ஒழிய, அந்த குழந்தை அந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்காது. இதனால் உங்களுக்கு கவலை தான் மிஞ்சும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். அதைப் பற்றிய விரிவான தகவல்கள் இப்பதிவில் காணலாம்.
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது பல பேரது கண் உங்கள் குழந்தையின் மீது விழும். இது உங்களுக்கும் தெரியும். ஆனால் வேறு வழி இல்லை. வெளியே வந்து வேடிக்கை காட்டி ஊட்டினாலும் சரியாக குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இதனால் தெருவில் வந்து தான் குழந்தைக்கு சோறூட்ட வேண்டிய நிலை உள்ளது. அதே போல் சிலர் மொபைல் போனை கையில் கொடுத்து சாப்பாடு ஊட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயலாகும். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மொபைல் போனில் இருந்து வரும் ஒளியானது நிச்சயம் பிஞ்சு கண்களை பாதிக்கும். அவர்களின் கவனமும் சாப்பிடுவதில் இருக்காது. அந்த மொபைல் போனிலேயே இருக்கும். இது மூளையும் பாதிக்கும்.
டிப்ஸ் 1:
குழந்தைக்கு தட்டில் வெறும் சாதம் போட்டதும் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக 5 உருண்டைகள் எடுத்து வைக்கவும். ஒரு உருண்டை மஞ்சள் கலந்தும், ஒரு உருண்டை குங்குமம் கலந்தும், ஒரு உருண்டை கரித்தூள் கலந்தும், கடைசி உருண்டை எழுமிச்சை சாற்றை கலந்தும் வையுங்கள். மீதமிருக்கும் ஒரு உருண்டை அப்படியே இருக்கட்டும். பகல் 12 மணிக்கு உச்சி வேலை ஆரம்பமானததும் கிழக்கு நோக்கிபடி வாசலின் நடுவில் குழந்தையை நிற்க வையுங்கள். இந்த ஒவ்வொரு உருண்டையையும் குழந்தைக்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கவும். பின்னர் அந்த உருண்டைகளை ஒன்றாக கலந்து, நான்காக பிரித்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு திசையில் தூக்கி எறியுங்கள். திருஷ்டி கழித்ததும் குழந்தையின் பாதங்களையும், உங்களின் பாதங்களையும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவிவிட்டு வீட்டிற்குள் சென்று விடவும். இதன் மூலம் குழந்தைகளுக்கு இருக்கும் திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.
டிப்ஸ் 2:
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது ஒரு சிறு உருண்டையை சாப்பாடு ஊட்டும் கிண்ணத்தின் இடதுபுறம் ஓரமாக வைக்கவும். குழந்தை சாப்பிட்டு முடித்ததும், அந்த உருண்டையை குழந்தையின் தலையை சுற்றி மூன்று முறை திருஷ்டி கழிக்கவும். பின்னர் மீண்டும் அந்த உருண்டை கிண்ணத்தின் இடது ஓரத்தில் வைத்துவிடவும். குழந்தையின் கைகளை உருண்டையின் மேல் கழுவ வையுங்கள். அந்த சாதத்தை கரைத்து ஒரு ஓரமாக ஊற்றி விடுங்கள். பின்னர் தட்டையும் உங்களது கையையும் கழுவி விட்டு உள்ளே செல்லுங்கள். இதுபோன்று தொடர்ச்சியாக ஒரு வாரம் செய்யுங்கள் முதல் நாள் தவிர மற்ற நாட்களில் அந்த உருண்டைகளை காகத்திற்கு வைக்கவும். இதன் மூலம் குழந்தைக்கு இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி நன்றாக சாப்பிட ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை.
டிப்ஸ் 3:
குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து, உங்களுக்கு தெரிந்த, வயதில் மூத்த பெண்மணியை அழைத்தோ, அல்லது குழந்தையின் தாயோ கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சனி, ஞாயிறுகளில் இதை செய்வது நல்லது. குழந்தை வழக்கமாக சாப்பிடும் கிண்ணத்தில் நீர் நிரப்பி அருகில் வைத்துக் கொள்ளவும். இப்போது உங்கள் கைகளால் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை வருடிக்கொண்டே இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.
மந்திரம்:
ஓம் உவ்வும் சவ்வும் ஐயும் கிலியும் ஸ்வாஹா!!
சகலதிருஷ்டியும் நசிநசி ஸ்வாஹா!!
ஸ்வாஹா.. என்று சொல்லும்போது அந்த தண்ணீரில் கையை நனைக்கவும். ஸ்வாஹா என்பது தீய சக்திகளை அந்த நீரில் இறக்குவதாக அர்த்தம். பின்னர் அந்த நீரை வாசலில் ஒரு ஓரமாக கொட்டி விடவும் கையை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்.
எப்போதும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது அனைவருக்கும் தெரியும்படி தட்டில் வைத்து ஊட்டுவதை விட ஒரு சிறிய கிண்ணத்தில் ஊட்டுவது தான் நல்லது. முதலில் சிறிதளவு அதில் எடுத்துக்கொண்டு ஊட்டவும். காலியானதும் மீண்டும் சிறிது போட்டு எடுத்து வரலாம். மொத்தமாக எடுத்துக் கொண்டு வருவதை தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு குழந்தை எவ்வளவு சாப்பிடுகிறது என்று தெரியாது. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். கட்டாயம் சாப்பிட அடம் பிடிக்கும் உங்கள் செல்ல குழந்தை மெல்ல மெல்ல நன்றாக சாப்பிட துவங்கும். உங்களின் கவலையும் நீங்கும்.