தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் அதிகமாக கற்பனை கதையாகவே உருவாக்கப்பட்டிருக்கும், அக்கதையில் கதாபாத்திரங்களை சேர்த்து திரைக்கதைகள் உருவாகுவது வழக்கம். ஆனால் இதே உண்மை கதையை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறுவதையும் பார்த்து இருக்கிறோம். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வெளியாகும் திரைப்படங்கள் சாதரண திரைப்படங்களை விட விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டிருக்க்கும் என்றே கூறலாம்.
அப்படி தமிழ் சினிமாவில் உண்மை கதையை தழுவி வெளியான சிறந்த திரைப்படங்களை குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
நாயகன்
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாயகன். பம்பாய்-ன் நிழலுலக தாதா மற்றும் அங்கு வசிக்கும் தென்னிந்திய மக்கள் குறித்த சொல்லப்பட்ட திரைப்படம் நாயகன். இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் தமிழ்நாட்டை சேர்ந்த பம்பாய் தாதாவின் வாழ்க்கையை வைத்து உருவாக்கினார் என கூறப்படுகிறது. வேலுநாயகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் இப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவர்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இருவர். தமிழகத்தின் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை தழுவி அப்படம் எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த அரசியல் திரைப்படம் என்று எடுத்து பார்த்தால் இருவர் திரைப்படக்கு ஒரு தனி இடம் உண்டு.
விசாரணை
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விசாரணை. இப்படத்தில் தினேஷ், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். லாக் அப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை கற்பனை கதையாக உருவாக்கப்பட்டது இந்த விசாரணை திரைப்படம்.
பம்பாய்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பம்பாய். 1992 - 1993 ஆம் ஆண்டுகளில் பம்பாய்யில் நடந்த மதக்கலவரத்தை மையமாக கொண்டு அங்கு மாட்டிக்கொண்ட குடும்பத்தின் கதையாக உருவாக்கப்பட்டது பம்பாய் திரைப்படம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை இப்பொது கண்டாலும் நமக்கு அந்த கலவரம் குறித்த பயம் தொற்றி கொள்ளும்.
கல்லூரி
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் அகில், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கல்லூரி. சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் பேருந்தில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் கல்லூரி.
ரக்த சரித்திரம் 2
இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா மற்றும் விவேக் ஓப்ராய் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரக்த சரித்திரம் 2. பெரியளவில் சர்ச்சைக்கு உள்ளான இப்படம் Paritala Ravindra என்ற ஒரு நபரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது.
தீரன் அதிகாரம் ஒன்று
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இயக்குனர் வினோத்திற்கு பெரிய பெயரை பெற்று கொடுத்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. மேலும் ஆபரேஷன் பவாரியா வழக்கின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். திருமணம் செய்துகொள்ள போகும் ஒருவர் சிறிய விபத்தால் சில நாட்களை தன் வாழ்நாளில் மறந்துவிடுவது பற்றிய நகைச்சுவைக் கதையாக எடுக்கப்பட்ட திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமாரின் வாழ்க்கையில் அவருக்கு நடந்த உண்மை கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.