கலகத் தலைவன் - விமர்சனம்
விமர்சனம்
தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ்
இயக்கம் - மகிழ் திருமேனி
இசை - ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கொரேலி
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ்
வெளியான தேதி - 18 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவனில் எப்படி மாறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார் என்று பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்து இருந்தனர். அதே போல் தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதும் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பினை வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை கலகத் தலைவன் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..
கதைக்களம்
ஃபரிதாபாத்தில் மிகப்பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கும் வஜ்ரா என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனங்களை தயாரித்து வருகின்றது. அப்படி அவர்கள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மைலேஜ் தரும் வகையில் ஒரு புதிய வாகனத்தை தயாரிக்கின்றனர். ஆனால், அந்த வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை அதிகமான காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது என்று வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனி விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில் இந்த ரகசியம் எப்படியோ வெளியில் கசிந்து விடுகிறது. இதனால் பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. இந்தப் புதிய வாகனம் விற்பனைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் நிர்வாகம், தங்களது கம்பெனி ரகசியம் எப்படி வெளியே போகிறது என்பதைக் கண்டுபிடிக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பல வேலைகளையும் செய்து தரும் ஆரவ்வை அது பற்றி விசாரிக்கச் சொல்கிறது. அதே கம்பெனியில் சென்னைக் கிளையில் வேலை செய்து கொண்டிருக்கும் உதயநிதி தான் அந்த ரகசியங்களை வெளியிடுபவர். அவர் ஏன் அதைச் செய்கிறார் ?, அதற்கான காரணம் என்ன என்பது கிளைமாக்சில் தான் தெரிய வருகிறது. உதயநிதி தான் அதைச் செய்பவர் என்பதை ஆரவ்வால் கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தடையறத் தாக்க, மீகாமன், தடம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். பொதுவாக மகிழ் திருமேனி படங்களில் காதல் காட்சிகள் தென்றலைப் போல வருடியும், திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைக்கும். அப்படியான அம்சங்கள் இந்தப் படத்திலும் அமைந்து இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யின் துப்பாக்கி படத்தில் எப்படி வில்லனும் ஹீரோவும் ‘கேட் அன் மவுஸ்’ கேமில் ஒருவரையொருவர் நெருங்குவார்களோ, அதே போல் நாயகன் உதயநிதியை வில்லன் ஆரவ் ஒவ்வொரு லூப்ஹோலாக கண்டுபிடித்து, கண்டுபிடித்து நெருங்கும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், திரில்லிங்காகவும் அமைக்கப்பட்டு ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைத்து ரசிக்க வைத்துள்ளது.
உதயநிதியின் ஜோடியாக நிதி அகர்வால். மருத்துவம் படிக்கும் மாணவி. அழகாகவும், மெச்சூர்டாகவும் நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லை என்றாலும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளே 'கலவரமாய்' உள்ளன. அதே சமயம், படத்தின் மையக் கதைக்கு இந்தக் காதல் கொஞ்சம் வேகத் தடையாகவும் அமைந்துவிட்டது.
நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றப் படங்களைக் காட்டிலும் இப்படத்தில் சற்றே அடக்கி வாசித்து இருக்கிறார். அதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நாளுக்கு நாள் இவரது நடிப்பு மெருகேறிக் கொண்டு செல்வது இப்படத்தில் சிறப்பாக தென்பட்டுள்ளது. காதல் காட்சிகளைக் காட்டிலும் மற்றக் காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி மனதில் பதிகிறார் நாயகன் உதயநிதி. சின்னச் சின்ன வசன உச்சரிப்பு, முகபாவனைகள் என நடிப்புக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் அழகாக வெளிப்படுத்தி இப்படத்தில் தோற்றத்திலும் அழகாகத் தென்படுகிறார். ஜாடிக்கேத்த மூடி போல் அழகான நடிப்பை தேவையான இடங்களில் மட்டும் வெளிப்படுத்திவிட்டு சென்றுள்ளார் நாயகி நிதி அகர்வால். இவருக்கும் உதயநிதிக்குமான காதல் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
பொதுவாக கார்ப்பரேட் படங்கள் என்றாலே அந்த நிறுவனத்தின் தலைவரை வில்லனாக சித்தரித்து படத்தின் நாயகன் ஹீரோயிசம் காட்டி அழிக்கும் படியான படங்கள் வரிசையாக வெளியாகி நம்மை போரடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அதே கார்ப்பரேட் நிறுவனத்தின் அரசியலை வேறு ஒரு கோணத்தில் காட்டி, எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் கார்ப்பரேட் கம்பெனியில் நடக்கும் ஊழலால் கடைக்கோடியில் இருக்கும் சாமானியன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி வெற்றி படமாக இப்படத்தை மாற்றி இருக்கின்றனர் கலகத் தலைவன் படக்குழுவினர்.